Spread the love

மாநாடு 4 July 2022

தஞ்சாவூரில் முக்கிய பகுதியாக இருக்கும் பர்மா பஜாரில் செல்போன் கடைகளில் இரவு நேரங்களில் தொடர் திருட்டு நடைபெற்று வருகிறது. கடந்த 3 மாதங்களில் ஏறக்குறைய 10 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டு இருக்கிறார்கள் பலே திருடர்கள்.

அதேபோல நேற்று இரவு பர்மா பஜாரில் பி.கே.மருத்துவமனை எதிரில் உள்ள செல்போன் கடையில் பூட்டை உடைத்து செல்போன்கள் பணம் உள்ளிட்டவற்றை திருடர்கள் திருடிச் சென்று விட்டதாக கடையின் உரிமையாளர் கூறியுள்ளார்.

ஆனால் இவர் இதுவரையில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. ஏற்கனவே செல்போன் கடைக்காரர்கள் தங்களது கடையில் திருட்டு நடந்து விட்டது என்று புகார் கொடுக்கச் செல்லும் போது காவல் நிலையத்தில் பலமுறை அலைய விட்டு புகாரை பெற்றுக்கொண்டு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுத்து பொருட்களை மீட்டு கொடுக்கவே இல்லையாம். காவல் நிலையத்தில் அலைந்து புகார் கொடுப்பதன் மூலம் எந்த வித தீர்வும் ஏற்படவில்லை என்கிறார்கள் விரக்தியில் வியாபாரிகள்.

ஏறக்குறைய 40 நாட்களுக்கு முன்பு மோசிகா என்கிற மொபைல் கடையில் திருட்டுப் போனபோது கடையின் உரிமையாளர் பாரதி என்பவர் கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை எடுத்து திருடனின் நடமாட்டத்தை காட்டிய போதும் கூட இதுவரையில் காவல்துறையிலிருந்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை புகாரை பெற்றுக்கொண்டு முதல் தகவல் அறிக்கை கூட தர மறுத்து விட்டார்கள் என்கிறார் பாரதி.

தஞ்சாவூரின் முக்கிய பகுதியில் நடைபெறும் இது போன்ற தொடர் திருட்டுக்களால் பொதுமக்கள் மிகவும் அச்சம் கொண்டுள்ளதாகவும், தஞ்சாவூர் முக்கிய பகுதியிலேயே இந்த நிலை என்றால் பொதுமக்களின் பாதுகாப்பு எந்த வகையில் இருக்கும் என்று கேள்வி எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

சமீப காலமாக பல்வேறு குற்ற சம்பவங்கள் பல்கி பெருகி வருகிறது தஞ்சாவூர் பகுதிகளில், உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுத்து குற்றங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

41620cookie-checkதஞ்சாவூர் பர்மா பஜாரில் தொடர் திருட்டு காவல்துறை யாருக்கு பாதுகாப்பு பரபரப்பு

Leave a Reply

error: Content is protected !!