மாநாடு 19 July 2022
தஞ்சை மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தவும், அரசே விலை நிர்ணயம் செய்து பொதுமக்களுக்கு வழங்கிடவும் வலியுறுத்தி ஏ ஐ டி யூ சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சை ரயிலடியில் நடைபெற்றது
.இயற்கையின் கொடையாக வழங்கப்பட்ட ஆறுகள் நாட்டின் ஜீவாதாரமாக விளங்குகின்றன. மனித குலம் தோன்றிய நாள் முதல் ஆறுகள் வழியாகத்தான் வாழ்க்கைக்கான தேவைகளையும் , விளை நிலங்களையும், பொருளாதார வளர்ச்சிகளையும் கண்டிருக்கிறது. நமது முன்னோர்களின் பண்பாடு, கலாச்சாரம் குறித்த அடிப்படையான குறிப்புகள் ஆறுகளின் வரலாறுகளிலிருந்தே காணமுடிகிறது என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள். இந்த அடிப்படையில் நமது தஞ்சை மாவட்டத்தில் முக்கிய ஆறான காவிரி ஆறு பல கிளை ஆறுகளாக பிரிந்து,காவிரி டெல்டாவின் பல மாவட்டங்களுக்கு மிகுந்த பாசன வசதியாக விளங்குகின்றது. காவிரி ஆறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் அரசின் விதிமுறைகளை மீறி மணல் கொள்ளையடிப்பதன் மூலம் ஆற்றின் வளம், மண்வளம் பாதிக்கப்படுவதுடன், இயற்கை வளமும் பாதிக்கப்படுகிறது. நாளடைவில் ஆறுகள் வறண்டு வளம் இழக்கும் அபாயம் உள்ளது.
பெரிய அளவிலான பாசன வசதிக்கும், பல லட்சக்கணக்கான மக்களின் குடிநீர் தேவைகளுக்கு பயன்படுகின்ற ஆறுகளை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும், மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
விவசாய சங்கத்தலைவர் முத்து உத்திராபதி பேசியதாவது: சோழ மன்னன் கரிகாலன் கட்டிய 2000 ம் வருடத்திற்கு மேலான சிறப்பு வாய்ந்த கல்லணையை சுற்றிலும் மணல் எடுப்பதால் அணை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே கல்லணையை சுற்றி 10 கிலோமீட்டர் தூரம் வரை மணல் எடுப்பதை தடை செய்ய வேண்டும், விதிமுறைகளை மீறி நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் மணல் எடுப்பதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் இயற்கை வளம், மண்வளம் பாதிக்கப்பட்டுஅழிவை நோக்கி செல்லும் அபாயத்தை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், ஆன்லைன் மூலம் மணல் விற்பனை செய்வதை மீண்டும் முழுமையாக அமல்படுத்த வேண்டும், ஆன்லைன் முறையை தனியாருக்கு அனுமதிப்பதை ரத்து செய்ய வேண்டும், மணல் விலையை அரசே நிர்ணயம் செய்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும், இடைக்கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும், வெளிமாநிலங்களுக்கு மணல் கடத்துவது தடை செய்வதோடு, வெளிமாவட்டங்களுக்கு மணல் கொண்டு செல்வது முறைப்படுத்த வேண்டும், மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தவும், மணல் விற்பனையை முறையாக செய்யவும் கண்காணிப்பு குழு அமைத்து விதிமுறைப்படி மணல் எடுப்பது உறுதி செய்ய தமிழ்நாடு அரசும், தஞ்சை மாவட்ட நிர்வாகமும் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார். கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஏ ஐ டி யூசி மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் துரை. மதிவாணன், பொருளாளர் தி.கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏஐடியூசி மாநில செயலாளர் வழக்கறிஞர் சி.சந்திரகுமார் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் வெ.சேவையா மின்வாரிய சம்மேளன துணைத்தலைவர் பொன்.தங்கவேல், ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் பி.அப்பாதுரை, தெருவியாபார சங்க மாவட்ட செயலாளர் ஆர்.பி.முத்துக்குமரன், கட்டு கட்டுமான சங்க நிர்வாகிகள் பி.செல்வம், சீனி.சுகுமாரன் , சேகர், பண்ணைசங்க மாநில துணைத்தலைவர் தி.திருநாவுக்கரசு, சுமை தூக்கும் சங்க மாநிலத் தலைவர் அ.சாமிகண்ணு, பட்டு கைத்தறி சங்க மாநில தலைவர் கோ.மணி மூர்த்தி, அரசு போக்குவரத்து சங்க பொதுச் செயலாளர் டி.கஸ்தூரி, ஆட்டோ சங்கமாவட்ட செயலாளர் ஆர்.செந்தில்நாதன், அகில இந்திய வங்கி ஊழியர் சங்க நிர்வாகி கோவிந்தன், அரசு வருவாய்துறை சங்க முன்னாள் மாநில துணைத்தலைவர் நா.பாலசுப்பிரமணியன், உடல் உழைப்பு சங்க நிர்வாகி எஸ்.பரிமளா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினார்கள்.