மாநாடு 20 July 2022
ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொது குழுவில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தையும், அவரது மகன்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலரையும் கட்சியிலிருந்தும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கினார் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.
ஜூலை 17ஆம் தேதி நடந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஓபிஎஸ் இன் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என்கிற பதவியும் பறிக்கப்பட்டது, புதிய எதிர் கட்சி துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது தொடர்பாக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவுக்கு இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் அதிமுகவின் சார்பாக வென்று அதிமுக பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார் . தற்போது ரவிந்திரநாத் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு இருக்கும் தகவலை பாராளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் மூலம் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதனுடன், பொதுக்குழு தீர்மானங்கள், ரவிந்தரநாத் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கும் விபரங்களையும் ஓம்.பிர்லாவுக்கு அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிச்சாமியின் கடிதம் பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டால், ரவீந்திரநாத் எம்.பி.எந்த கட்சியையும் சாராத உறுப்பினராக செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அதிமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் என்கிற தகுதியை ரவீந்திரநாத் இழந்து விடுவார்.