மாநாடு 27 July 2022
தஞ்சாவூரில் மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன் பல்வேறு மக்கள் நல கோரிக்கைகளை முன்வைத்து பேசுவதற்காக காத்திருந்தவர் தான் பேச வேண்டிய நேரம் வந்தவுடன் எழுந்து முதல் கோரிக்கையாக கடந்த ஜூலை 5ஆம் தேதி தஞ்சாவூர் ஜெபமாலபுரத்தில் குப்பை கிடங்கு தீ பற்றி எரிந்ததில் ஆரோக்கியசாமி என்கிற முன்னாள் ராணுவ வீரர் தீயில் சிக்கி எரிந்து பலியானார் மேலும் அங்கிருந்த 12 வீடுகள் முழுவதும் எரிந்து பாதிக்கப்பட்டது, அதற்கு இதுவரை எந்தவித முறையான நிவாரணமும், சரியான விசாரணையும் தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகம் ஏன் மேற்கொள்ளப்படவில்லை, இதற்கு காரணமானவர்களை ஏன் முறையாக விசாரிக்கவில்லை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று அடுக்கடுக்கான கேள்விகளை எதிர் கட்சித் தலைவர் மணிகண்டன் மாமன்ற கூட்டத்தில் எழுப்பி இருக்கிறார்.
இதற்கு பதிலளித்த மேயர் சண்.ராமநாதன் கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தான் குப்பைகளை பிரித்து எடுக்கும் நவீன திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டது, தொடர்ந்து 10 ஆண்டுகள் நீங்கள்தானே ஆட்சியில் இருந்தீர்கள் ஏன் அப்போது இதை எல்லாம் செய்யவில்லை என்று பதில் கேள்வி எழுப்பியிருக்கிறார் ,அதற்கு முன்னாள் துணை மேயர் மணிகண்டன் இந்த திட்டங்கள் 2011 இல் தொடங்கப்படவில்லை 2006 ஆம் ஆண்டு தேன்மொழி ஜெயபால் அவர்கள் பொறுப்பில் இருந்த போதே இந்த குப்பை கிடங்கை நவீனப்படுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது, அதற்காக அப்போது 3 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது யார் ஆட்சியில் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல மக்கள் பணியை செய்ய வேண்டியது அவர்களின் கடமை ,யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நீங்கள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுங்கள் என்றிருக்கிறார் எதிர்க்கட்சி தலைவர் மணிகண்டன்.
மேலும் ஆணையர் சரவணகுமார் இதற்கு பதிலளிக்கும் போது அந்த குப்பை கிடங்கை சரியாக பராமரிக்காததே இந்த தீ விபத்துக்கான காரணம் ,தஞ்சாவூர் எழில் மிகு நகரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு இந்த குப்பைக் குழியை நவீனப்படுத்துவதற்காக 2016 ஆம் ஆண்டு ஒப்பந்தம் விடப்பட்டது, அதன்படி கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த பணிகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். ஆனால் இதுவரை நிறைவு பெறவில்லை, ஒப்பந்ததாரருக்கு இது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம், ஒப்பந்ததாரர் கூட உங்கள் நண்பர்தான் என்று பதிலளித்துள்ளார் ஆணையர் சரவணகுமார்.
ஒப்பந்ததாரர் அதிமுகவின் முன்னாள் மருத்துவக் கல்லூரி பகுதி செயலாளர் சரவணன் என்பது குறிப்பிடத்தக்கது
அதற்கு பதில் அளித்த எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன் யாருக்கு யார் நண்பர் என்பது முக்கியமல்ல, அப்படி பார்த்தால் அவர் உங்களுக்கும் நண்பர்தான் அதை விடுத்து மக்கள் பணியில் தவறு செய்திருந்தால், மக்கள் அதனால் பாதிக்கப்பட்டு இருந்தால் அதனை துரிதமாக விசாரணை மேற்கொண்டு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுங்கள் ,அந்தப் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்குங்கள் என்று தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போதே, நீங்கள் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்லி மணிகண்டனின் ஒலிவாங்கி அணைக்கப்பட்டு இருக்கிறது, அதன் பிறகு தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டது என்று சொல்லி பாதியிலேயே மாமன்ற கூட்டத்தை மேயர் சண்.ராமநாதன் முடித்துள்ளார்.
மக்கள் பிரச்சினைகளைப் பேசி தீர்வு காண்பதற்காக தான் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி உறுப்பினர்களை மக்கள் பணி செய்வதற்காக தேர்ந்தெடுக்கிறார்கள். அப்படிப்பட்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் வைக்கின்ற கோரிக்கையை கேட்டு நிறைவேற்ற வேண்டியது மாமன்ற தந்தையின் கடமை , இதுபோன்று மக்கள் பிரச்சனையை பேசும்போது காது கொடுத்து கேட்டு தீர்வு கண்டு மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் அதை விடுத்து கூட்டத்தை பாதியிலேயே முடித்து விடுவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல, அதிமுக காலகட்டத்தில் இப்போது கேள்வி எழுப்பும் மணிகண்டன் தான் துணை மேயராக இருந்தார்.அப்போது திமுகவினர் இதுபோன்ற கேள்விகளை எழுப்பி மக்கள் நலனில் ஈடுபட்டிருந்தால் பொதுமக்களில் ஒருவரான ஜெபமாலபுரத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி தீ விபத்தில் சிக்கி இறந்திருக்க மாட்டார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
தஞ்சாவூரில் ஊருக்கு வெளியே இருக்க வேண்டிய குப்பை மேட்டை ஊருக்குள் வைத்துக்கொண்டு இருக்கும் வரை அந்தப் பகுதியில் தீ விபத்து தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். அது மட்டுமல்லாமல் அந்த குப்பை கூலங்களால் நோய் தொற்று உருவாகும், அருகிலேயே உலக அதிசயத்தில் ஒன்றான தஞ்சாவூர் பெரிய கோயில் இருக்கிறது அதன் எழில் அழகும் இங்கிருந்து அவ்வப்போது வரும் புகையினால் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து இந்த கட்சி அந்த கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் பொறுப்புணர்ந்து மக்கள் நலனுக்காகவும், மண்ணின் நலனுக்காகவும் இந்த குப்பை மேட்டை ஊருக்கு வெளியே அமைக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் பல ஆண்டு கோரிக்கைகளாக இருக்கிறது.
வீடியோ லிங்க்: