மாநாடு 9 August 2022
இலவச திட்டங்களை சமூக ஆர்வலர்கள் எதிர்த்தாலும் சில அடிப்படையான இலவச திட்டங்களை ஆதரித்தும் வருகிறார்கள். அதன்படி தன் குடிமக்களுக்கு கல்வியும் மருத்துவமும் வாழ்விடமும் தரவேண்டியது அரசின் கடமை பெற வேண்டியது குடிமக்களின் அடிப்படை உரிமை. இதனை அறியாததால் தான் பலரை இன்று அரசியல் கட்சியின் தலைவராக ஏற்று அவர்களுக்கு பதவி அளித்து தங்கள் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் நமது மக்கள்.
அரசின் இலவச திட்டத்தில் குறிப்பிடும் படியான திட்டமான மகளிர்க்கு திருமண உதவி திட்டம் கிராமப்புற ஏழை எளிய பெண்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது, சாதாரணமாகவே பணம் சேமிப்பவர்கள் பெரும்பாலும் தங்களது குழந்தைகளின் மேல்படிப்புக்காகவும், திருமணத்திற்காகவும் திட்டமிட்டு சேமிப்பார்கள், அதனை அடிப்படையாகக் கொண்டுதான் பல காப்பீட்டு திட்டங்கள் திருமணத்திற்காகவும் மேல்படிப்புக்காகவும் என திட்டமிடப் பட்டுள்ளது,
சில குறைகள் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் இருந்தாலும் திருமண உதவி திட்டம் ஏழைப் பெண்களுக்கு உதவி வந்தது அதனை நிறுத்திவிட்டு தற்போது ஆட்சி அமைத்துள்ள திராவிட முன்னேற்றக் கழகம் வேறொரு திட்டத்தை வழங்கவுள்ளது, அதாவது படிக்கும்போதே அந்த மாணவிகளுக்கு பணம் மாதம் 1000 ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது ,இதன் காரணமாக திருமண உதவி திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உதவித் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள மாணவிகள் மாதம் ரூ.1000 ஆயிரம் பெறுவதற்கான திட்டத்திற்கு தமிழக அரசு ரூ.698 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ்அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இதற்காக விண்ணப்பங்கள் கடந்த ஜுலை 10ம் தேதி வரை பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து விண்ணப்பங்களில் திருத்தம் செய்யவும் கால அவகாசம் வழங்கப்பட்டது. இத்திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. மாணவிகள் கல்லூரி மேல் படிப்பை பயில்கின்றார்களா என்பதை 6 மாதத்திற்கு ஒரு முறை உயர்கல்வித்துறை சார்பில் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
திட்டத்திற்காக நடப்பாண்டிற்கு மட்டும் 698 கோடி ரூபாயை ஒதுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது, ஒவ்வொரு மாதமும் 7ம் தேதி மாணவிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆண்டுக்கு 6 லட்சம் மாணவிகளுக்கு இந்த தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.