மாநாடு 28 August 2022
தஞ்சாவூர் ரயிலடியில் வீர தமிழச்சி செங்கோடியின் 11 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடதுசாரிகள் பொது மேடை சார்பில் இன்று காலை 10 மணியளவில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பேரறிவாளன் விடுதலையை தமிழக அரசுகள் காலம் தாழ்த்தியது போல சாந்தன்,முருகன், நளினி உள்ளிட்ட ஆறு தமிழர்களின் விடுதலையையும் காலம் தாழ்த்தாமல் தற்போதைய தமிழக முதல்வர் இவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று இடதுசாரிகள் பொது மேடை சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு ஏறத்தாழ 30 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடிக் கொண்டிருந்த சாந்தன்,முருகன், பேரறிவாளன்,நளினி ராபர்ட்பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு தமிழர்களுகாகும் கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டு தூக்கிலிடப்படும் தேதியும் குறிக்கப்பட்டது
இவர்களின் உயிர்களை காக்க காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சகோதரி செங்கொடி 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி தீக்குளித்து தன்னுயிர் ஈந்தார் இவரது ஈகத்தினால் சாந்தன், முருகன, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்கள் தூக்கிலிடப்படாமல் காப்பாற்றப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு இயக்கங்களின் போராட்டங்களாலும், கட்சிகள் நடத்திய போராட்டங்களாலும், சட்டப் போராட்டங்களாலும் தமிழக அரசை தொடர்ந்து அனைவரும் வலியுறுத்தியதால் பேரறிவாளன் அண்மையில். விடுதலை செய்யப்பட்டார்.
சிறையில் மீதமுள்ள ஆறு தமிழர்களும் தங்களை விடுதலை செய்ய வேண்டி அறப்போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பேரறிவாளனை விடுதலை செய்த அடிப்படையிலாவது சிறையில் உள்ள சாந்தன்,முருகன், நளினி, ராபர்ட்பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஆறு தமிழர்களையும் தமிழ்நாடு அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், என்று வீர தமிழச்சி செங்கொடியின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்நாடு அரசுக்கு இடதுசாரிகள் பொதுமேடை சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழர் தேசிய முன்னணியின் மூத்த தலைவர் அயனாபுரம் சி.முருகேசன் தலைமை வகித்தார் .இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் வெ.சேவையா, ஏஐடியூசி நிர்வாகிகள் தி.கஸ்தூரி , எஸ்.தாமரைச்செல்வன்,மின்வாரிய சங்க செயலாளர் லட்சுமணன், சமூக ஆர்வலர் விசிறி சாமியார் முருகன் மற்றும் ரயிலடி ஆட்டோ சங்க தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.