மாநாடு 31 August 2022
விநாயகர் சதுர்த்திக்கு பலரும் பல்வேறு அர்த்தங்கள் கூறி வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டாடி வரும் நிகழ்வு ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது. அதேசமயம் மனிதத்தை போற்றும் மனிதர்கள் பலரும் தங்களுக்கு அறிந்த, தெரிந்த தகவல்களை வெளியில் பகிர்ந்து உள்ள பூர்வமான வாழ்த்துக்களை தெரிவிப்பார்கள்.
அப்படியானவர்கள் அனைத்து துறைகளிலும் இருக்கிறார்கள் அப்படியான அபூர்வ மனிதர் தான் மனிதத்தை போற்றும் நடிகர் ராஜ்கிரன் அவர் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.
இந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் அர்த்தமுள்ளதாக இருந்த காரணத்தால் அவரிடம் உங்களின் வாழ்த்துக்களை நமது மாநாடு இதழில் வெளியிடலாமா என்று கேட்டிருந்தோம் அவர் சம்மதம் தெரிவிக்கவே அவரின் வாழ்த்துக்களோடு அவரின் வரிகளில் உள்ள அர்த்தத்தை உணர்ந்து அனைவரும் மனிதத்தை போற்ற மாநாடு இதழும் வாழ்த்துகிறது.
விநாயகர் சதுர்த்தி.
இறைவனின் திருநாமங்களில் ஒன்று,
மதிநுட்பமிக்கவன். அதாவது
ஞானமிக்கவன், ஞானகாரகன்.
ஒவ்வொரு மனிதனும் ஞானம் பெற,
முதலில் மன அமைதி வேண்டும்.
மனம் அமைதி பெற, நமது உள்ளத்துள்
ஊடுருவி, அங்கே உறைந்திருக்கும்
இறைவனை அணுக முயற்சிக்க வேண்டும். அந்தத்தொடர்பு கிடைத்து
விட்டால், அது தான் ஞானம்.
அதை அடைய வழிகாட்டுபவர் தான்
விநாயகர்.
“விநாயகம்” என்பது வெறும் உருவமல்ல.
அது ஒரு வாழ்வியல் தத்துவம்.
விநாயகப்பெருமானின்
அகன்ற இரு பாதங்களும்,
நேர் வழியில் நடந்தால் இறைவனை
அடையலாம் என்பதை உணர்த்துகின்றன.
அவரின் உருவ அமைப்பு,
இறைவன் என்பவன்
ஆணுமில்லை, பெண்ணுமில்லை,
இடைப்பட்டது எதுவும் இல்லை,
மனிதனும் இல்லை, மிருகமும் இல்லை,
மானுடத்தின் அறிவுக்கு அப்பாற்பட்டவன்
என்பதை உணர்த்துகிறது.
ஒருவரின் உருவ அமைப்பை வைத்து
எவரையும் எடை போட்டுவிடக்கூடாது,
அவருக்குள் இருக்கும் ஆத்மாவை
வைத்துத்தான் உண்மையை உணர
முடியும் என்று உணர்த்துவது விநாயகர்
உணர்த்தும் இன்னுமொரு தத்துவம்.
விநாயக சதுர்த்தியன்று,
களிமண்ணால் அவரின் உருவைப்படைத்து,
குறிப்பிட்ட நாட்களுக்குப்பின்
அதை நீரில் அழித்து விடுவது,
இந்த உலகத்தில் படைக்கப்பட்ட
அனைத்தும் அழியக்கூடியவையே,
என்பதை உணர்த்தும் மற்றுமொரு தத்துவம்.
இப்படி வாழ்க்கைக்குத்தேவையான
பல வித தத்துவங்களின் கட்டமைப்பு தான், விநாயகர்.
இந்த நல்ல நாளில், நாம் அனைவரும்
வாழ்வியல் நோக்கங்களைப்புரிந்து,
தெளிந்து, நம் வாழ்வை மேன்மை மிக்கதாக ஆக்கி, அமைதியும் மகிழ்ச்சியுமாய் வாழ,
எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்.
என் மனம் கனிந்த,
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.
வாழ்க வாழ்க. என்று தனது வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார் நடிகர் ராஜ்கிரண்.
நல்லதை பகிர்ந்த மாநாடு மின்னிதலுக்கு நன்றி…