மாநாடு 7 September 2022
சமீப காலமாக நாணயமாக இருப்பவர்களையும் தன்மானத்தோடு வாழ நினைப்பவர்களையும் கூட பல நிதி நிறுவனங்களும் அதன் ஊழியர்களும் ஏதோ இவர்கள்தான் உதவுவதற்கு வந்தவர்கள் போல வழிய வந்து மக்களிடம் பல சலுகைகளை சொல்லி தங்களது நிதி நிறுவனத்தின் வாடிக்கையாளராக ஆக்கி விடுகிறார்கள். அதேபோல கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு சென்று மகளிர் குழுக்கள் மூலமாக பணம் கொடுத்து பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வருவதும், அந்த நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தாங்கள் தான் அந்த நிறுவனத்தையே தாங்கி நிற்பதாக நினைத்துக் கொண்டு பொதுமக்களிடம் அத்துமீறுவதை அவ்வப்போது செய்திகளின் வாயிலாகவும் ,செவிகளின் வாயிலாகவும் அறிய முடிகிறது, இவர்களால் பாதிக்கப்பட்ட பல மக்கள் இவர்களை எதிர்க்க நேரமில்லாமலும், பொருள் இல்லாமலும் ஒதுங்கி விடுவார்கள் அதையே இவர்கள் தங்களது மூலதனமாக ஆக்கிக் கொண்டு பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதே போல ஒரு நிகழ்வு தஞ்சாவூரில் நடைபெற்றிருக்கிறது ,மோசடியில் ஈடுபட்ட டிவிஎஸ் பைனான்ஸ் நிறுவனம் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு 3 லட்ச ரூபாயும், 12 விழுக்காடு வட்டியோடு, சேர்த்து செலவு தொகை 5000 ரூபாயும் கொடுக்க வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்து இருக்கிறது.
கடந்த 13/9/2010 அன்று தஞ்சாவூரை சேர்ந்த சரவணன் என்பவர் டிவிஎஸ் அப்பாச்சி வாகனம் வாங்க முடிவு செய்து தஞ்சாவூரில் உள்ள சக்தி ஆட்டோ சர்வீஸ் என்கிற டிவிஎஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட கடைக்கு சென்று இருக்கிறார். அப்போது டிவிஎஸ் அப்பாச்சி இருசக்கர வாகனத்தின் விலை 74,436 ரூபாய் என்று கூறியிருக்கிறார்கள், சரவணன் முழு தொகையையும் கட்டி வாகனத்தை வாங்க முடிவு செய்து பணத்தை எடுத்துள்ளார், அப்போது டிவிஎஸ் நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் தங்களுக்கு டார்கெட் இருப்பதாகவும் அதை முடிப்பதற்கு நீங்கள் உதவ வேண்டும் என்று கூறி தவணை முறையில் வாகனத்தை எடுத்துச் செல்லுங்கள் என்று சில சலுகைகளையும் கூறியதாக தெரிய வருகிறது. அப்போதும் கூட நான் வேலைப்பளுவில் இருப்பவன் என்னால் வங்கியில் வரவு செலவு கணக்குகளை சரிவர பார்த்துக் கொண்டு இருக்க முடியாது என்னிடம் இருக்கும் ஊழியர்கள் தான் வங்கியில் கணக்கு வழக்குகளை பார்த்து வருகிறார்கள், அப்படி இருக்க இந்த தவணை முறையில் எடுப்பது அவ்வளவு சரிப்பட்டு வராது என்று சரவணன் மறுத்திருக்கிறார். மீண்டும் நிதி நிறுவன ஊழியர்கள் குறைந்த மாத தவணையாவது போட்டு எங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க வேண்டுமென்றால் 6 மாதத்தில் தவணை முடியும்படி போட்டுக் கொள்ளுங்கள் என்று சரவணன் கூறியிருக்கிறார், அதற்கு நிதி நிறுவன ஊழியர்கள் ஒரு 4 மாதம் சேர்த்து 10 மாதமாக தவணை காலத்தை வைத்துக் கொள்ளலாம் சார் என்று கூறியிருக்கிறார்கள் இவ்வளவு முறை கூறுகிறார்களே என்று அவர்களுக்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார் சரவணன்.
அதன்படி வாகனத்தை தேர்வு செய்து முன் தொகையாக 36,183 ரூபாய் பணத்தை டிவிஎஸ் பைனான்சிடம் கட்டி அதற்குரிய ரசீதியை பெற்றுக் கொண்டு வாகனத்தை வாங்கி வந்துள்ளார்.
மீதமுள்ள 38,253 ரூபாய் கடன் தொகையை ஒவ்வொரு மாதமும் 4421 ரூபாய் என 10மாதங்களில் வாடிக்கையாளர் கட்டி முடிக்க வேண்டும் என்ற ஒப்பந்தம் வாடிக்கையாளருக்கும் நிதி நிறுவனத்திற்கும் ஏற்பட்டிருக்கிறது.
சரவணன் கூறியது போலவே முதல் மாதமே இந்த வங்கிக் கணக்கில் தவணை தேதியன்று ஏறக்குறைய 4000 ரூபாய் இருந்திருக்கிறது, இதன் காரணமாக காசோலை செல்லுபடி ஆகாமல் திரும்பி இருக்கிறது இந்த செய்தி அப்போது சென்னையில் இருந்த சரவணனுக்கு தெரிய வந்திருக்கிறது, உடனே காசோலை திரும்பியதற்கான தொகையையும் கட்டவேண்டிய 4,421 ரூபாய் பணத்தையும் வங்கியில் கட்டியுள்ளார்.பிறகு தஞ்சாவூர் வந்தவுடன் டிவிஎஸ் நிறுவனத்திற்கு சென்று நான் முழு தொகையையும் கட்டி விடுகிறேன் என்னால் ஒவ்வொரு மாதமும் இதனை நிர்வகித்துக் கொண்டு இருக்க முடியாது என்று கூறி மீதமுள்ள தொகையை பெற்றுக் கொள்ளுமாறு கூறியிருக்கிறார் சரவணன். அதற்கு நிதி நிறுவன ஊழியர்கள் இப்போது அப்படி செய்ய முடியாது சார் என்று மென்மையாக பேசி அனுப்பி இருக்கிறார்கள்.
அதன் பிறகு தவணைத் தொகை சரியாக சென்று கொண்டிருந்திருக்கிறது, சரவணனும் தனது சமூகப் பணியின் நிமித்தமாக வெளியூர்களுக்கு சென்று வந்துள்ளார், ஒவ்வொரு மாதமும் 3ஆம் தேதி கட்டவேண்டிய தவணைத் தொகை சரியாக சென்று கொண்டிருந்த நிலையில் 3/4/2011 மற்றும் 3/5/2011 மாதத்திற்கான இரண்டு தவணைகள் தடைப்பட்டு இருக்கிறது, அந்த நேரத்தில் 20/5/2011 அன்று நிறுத்தி வைத்திருந்த அப்பாச்சி இருசக்கர வாகனம் காணாமல் போயிருக்கிறது, உடனே அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்துவிட்டு டிவிஎஸ் நிறுவனத்தை சரவணன் தொடர்பு கொண்டுள்ளார் .
டிவிஎஸ் நிதி நிறுவனத்தினர் இரண்டு மாத தவணைத் தொகை நிலுவையில் உள்ளது அதனை கட்டிவிட்டால் வாகனத்தை தருவதாக கூறியிருக்கிறார்கள். அதனை ஏற்று நிலுவைத் தொகையை 3/6/2011 ஆம் தேதி இரண்டு மாத தவணைத் தொகை 8,820 ரூபாயும் கூடுதலாக அவர்கள் கட்டச் சொன்ன 400 ரூபாயும் மேலும் காசோலை திரும்பியதற்கான கட்டணம் 800 ரூபாயும் சேர்த்து மொத்தம் 10,020 ரூபாயை சரவணன் செலுத்திவிட்ட பிறகும் வாகனத்தை தராமல் சில சாக்கு போக்குகள் சொல்லி காலத்தை கடத்தி இருக்கிறார்கள் இதற்குள் அடுத்த மாத தவணைத் தேதியும் வந்துவிட அந்த தவணைத் தொகையையும் செலுத்துங்கள் நாங்கள் வண்டியை தருகிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள் டிவிஎஸ் நிதி நிறுவனத்தினர்,
அந்தத் தொகையையும் கூடுதலாக அபராத தொகையையும் சேர்த்து 4821 ரூபாயை 25/7/2011 அன்று சரவணன் செலுத்தி இருக்கிறார் அதன் பிறகும் வாகனம் அவரிடம் தரப்படாமல் திருச்சி அலுவலகத்திற்கு வாகனம் சென்று விட்டது அங்கு சென்று எடுத்து வாருங்கள் என்று அதிகார தோரணையில் பேசி இருக்கிறார்கள்.
வ.உ.சி பேரவையின் தலைவராக இருக்கின்ற நம்மிடமே இந்த நிதி நிறுவனம் இவ்வளவு தில்லுமுல்லுகளை செய்கிறதே சாமானிய மக்களுக்கு என்ன நிலை என்று கொதித்தெழுந்த வ.உ.சி பேரவையின் தலைவர் அண்ணா சரவணன் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காண்பதற்காக வழக்கறிஞர் முத்து மாரியப்பன் மூலம் டிவிஎஸ் நிதி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார், அதில் அதிர்ச்சியூட்டும் தகவல் கிடைக்கப் பெற்றிருக்கிறது அதாவது 25 ஆம் தேதி தவணைத் தொகையை பெற்றுக் கொண்ட டிவிஎஸ் நிதி நிறுவனம் 23ஆம் தேதியே வாகனத்தை ஏலத்தில் விட்டு விட்டதாக கூறியிருக்கிறது,
இந்த வழக்கு 2012 ஆம் ஆண்டு முதல் நடைபெற்றதில் டிவிஎஸ் நிதி நிறுவனம் வாடிக்கையாளரை ஏமாற்றும் நோக்கில் முழுவதுமாக நடந்திருப்பதை கண்டித்த நீதிமன்றம் கடந்த 29/6/2022 அன்று கீழ்க்கண்டவாறு தீர்ப்பளித்திருக்கிறது.வாடிக்கையாளருக்கு எவ்வித முன்னறிவிப்பும் கொடுக்காமல் வாகனத்தை கையகப்படுத்தியது, ஏலம் விட்டுவிட்டதாக கூறப்படும் இரண்டு நாட்களுக்குப் பிறகும் கூட வாடிக்கையாளரிடம் இருந்து தவணைத் தொகையை பெற்றுக் கொண்டது உட்பட பல்வேறு முறை கேடுகளில் டிவிஎஸ் நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது, நிறுவனத்தின் அத்துமீறலால் வாடிக்கையாளர் மன உளைச்சல் ,பொருள் இழப்பு, மனவேதனை அடைந்திருக்கிறார் அதற்கு இழப்பீடாக டிவிஎஸ் நிறுவனம் 3லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் மேலும் 16/4/2012 முதல் 29/6/2022 வரை ஆண்டு ஒன்றுக்கு 12 விழுக்காடு வட்டியும் சேர்த்து 6 வாரத்திற்குள் கொடுக்க வேண்டும் கூடுதலாக செலவுத்தொகை 5000 ரூபாயையும் சேர்த்து கொடுக்க வேண்டும் . இக்கால கெடுக்குள் கொடுக்க தவறும் பட்சத்தில் ஆண்டு ஒன்றுக்கு 18 விழுக்காடு வட்டியாக தர வேண்டுமென்று நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சமூகத்தில் நல்ல நிலையில் வ.உ.சி பேரவை என்ற அமைப்பின் தலைவராக இருக்கின்ற அண்ணா சரவணன் போன்றவர்களிடமே நிதி நிறுவனங்கள் இவ்வளவு அட்டூழியங்கள் செய்து அலைகழித்திருக்கிறது என்றால் சாமானிய மக்களின் நிலை என்ன ? கந்து வட்டியை ஒழித்து விட்டதாக கூறும் அரசுகள் இது போன்ற அத்துமீறல்களில் ஈடுபடுகின்ற நிதி நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதே பொதுமக்களின் கேள்வியாக இருக்கிறது.மக்களின் கேள்விக்கு விடை கொடுக்குமா அரசு பொறுத்திருந்து பார்ப்போம்.
மிக அருமையான ஒரு விழிப்புணர்வு கட்டுரை. மனமார்ந்த பாராட்டுக்கள்!அதேசமயம் வழக்கறிஞர் பெயர் திருமிகு. முத்து மாரியப்பன் என்று வந்திருக்க வேண்டும். ஆனால், முத்து மாரியம்மன் என்று தவறாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
உங்களது ஆதரவுக்கு மிக்க மகிழ்ச்சி தொடர்ந்து படித்து பகிர்ந்து ஆதரவு தாருங்கள் ,நன்றி