மாநாடு 10 September 2022
தஞ்சாவூரில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனை மிகவும் பழமையும் பெருமையும் வாய்ந்தது இந்த மருத்துவமனைக்கு 1958 ஆம் ஆண்டு இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர், ராஜேந்திர பிரசாத் அடிக்கல் நாட்டினார். அன்றைய தமிழக முதல்வர் காமராசர் தஞ்சாவூரை மேம்படுத்த நிதியையும் அதற்கான அனுமதியையும் வழங்கினார், அன்றைய தஞ்சாவூரின் சட்டமன்ற உறுப்பினர் பரிசுத்தம் நாடார் தனது 89 ஏக்கர் நிலத்தை இந்த நல்ல காரியத்திற்காக வழங்கினார்.
இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையால் தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமல்லாமல் அதனை சுற்றியுள்ள பல மாவட்ட மக்களின் மருத்துவ தேவையை நிறைவேற்ற ஆரம்பிக்கப்பட்ட இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனை 1960 ஆம் ஆண்டு 500 படுக்கைகள் வசதிகளுடன் தனது சேவையை தொடங்கியது.
தற்போது ஏறக்குறைய 4000 படுக்கை வசதிகள் இருப்பதாக தெரிகிறது, மேலும் 150 கோடி ரூபாய் செலவில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இது அத்தனையும் மக்களின் வரிப்பணத்தால் சம்பளம் கொடுக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது, இந்த மருத்துவமனை தஞ்சாவூர், நாகப்பட்டினம் ,அரியலூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட மக்களின் மருத்துவ தேவையை நிறைவேற்றி வருகிறது.
மக்களின் மருத்துவ சேவைக்காக நல்லவர்களால் நல்ல நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட மருத்துவமனை தற்போது மிகவும் தரம் கெட்டு கிடக்கிறது, வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அனைத்து சேவைகளையும் இலவசமாக செய்வது போல காட்டிக் கொள்ளும் இந்த மருத்துவமனை நிர்வாகம் 90 விழுக்காட்டிற்கு மேல் தனியார் மருத்துவமனைக்கு , தனியார் மருந்து கடைகளுக்கு ,தனியார் பரிசோதனை நிலையங்களுக்கு வேலை செய்வதை காண முடிகிறது.
அதாவது இங்குள்ள மருத்துவமனை நிர்வாகத்தில் மேல் நிலையில் உள்ள மருத்துவர்கள் ஒரு குழுவாக இணைந்து கொண்டு இந்த வேலைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு துணையாக அடியாட்களை போல நடத்துவதற்காக கிரிஸ்டல் நிறுவனத்தின் ஒப்பந்த ஊழியர்களை பயன்படுத்திக் கொள்கிறார்களாம், அதனால் தான் கிரிஸ்டல் ஒப்பந்த ஊழியர்கள் மருத்துவ தேவைக்காக வரும் நோயாளிகளிடம் அத்துமீறி நடப்பதையும் பணம் பெற்றுக் கொள்வதையும் அடாவடித்தனம் செய்வதையும் Rmo உட்பட மேல் நிலையில் உள்ள மருத்துவர்கள் யாரும் கண்டு கொள்வதே இல்லையாம். வண்டி தள்ளும் ஊழியர்கள் மற்றும் லஞ்சம் பெறும் ஊழியர்கள் வாங்கும் பணத்தில் மாதாமாதம் இவர்களுக்கும் பங்கு கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
அதுவும் தற்போது டீன் பொறுப்பை ஏற்று இருக்கும் மருத்துவர் மருது துரை ஒரு படி மேலே சென்றுவிட்டாராம் அதன் காரணமாக தான் மருத்துவமனையில் அனைவரின் வாகனத்தையும் செக்போஸ்ட் அமைத்து வெளியே நிறுத்துமாறு கூறியிருக்கிறாராம்., உடல் நிலை சரியில்லாத நோயாளிகள் வந்தால் கூட இங்கேயே நிறுத்தி விடுகிறார்கள் அவர்களை வண்டியில் வைத்து தள்ளுபவர்கள் தூரம் அதிகம் இருப்பதாக கூறி முன்பை விட ஒரு மடங்கு அதிகமாக லஞ்சம் கேட்டு துன்புறுத்தி வாங்கி இருக்கிறார்கள்.
இந்த தகவல் நமக்கு கிடைத்த உடன் தான் நேரில் சென்று பார்த்தோம் அதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தது.
நாங்கள் அங்கு நடந்த நிகழ்வுகளை பற்றி விசாரித்து தெரிந்து கொண்டிருந்த தகவல் உடனடியாக ஆர்.எம்.ஓ.பணியில் இருக்கும் டாக்டர் செல்வத்துக்கு தெரியப்படுத்தப்படுகிறது, உடனடியாக நம்மை டீன் அலுவலகத்திற்கு அழைத்து வரச் சொல்லி ஒப்பந்த ஊழியர்களை அனுப்புகிறார்கள்.
நான் அவரின் அலுவலகத்திற்கு சென்றவுடன் செக் போஸ்ட் ஏன் அமைத்திருக்கிறீர்கள்?
மாற்றுத்திறனாளிகள் மருத்துவமனையில் பணிபுரியும் போது அவர்கள் வருவதற்கு கூட எவ்வித வசதியும் இல்லாமல் இருக்கிறது ஏன்? அவர்களின் வாகனமும் அங்கேயே தடுக்கப்படுகிறது இந்த மருத்துவமனையில் கையூட்டு அதிகமாக ஒப்பந்த ஊழியர்கள் வாங்குகிறார்கள் அதை ஏன் தடுக்கவில்லை?
கர்ப்பிணிப் பெண்களை அழைத்து வருபவர்கள் கூட செக்போஸ்ட் தாண்டி வர முடியாத அளவிற்கு ஏன் கடுமை காட்டப்படுகிறது?
மருத்துவமனைக்கு நோயாளிகளை அழைத்து வருவதற்காக இருக்கின்ற நான்கு வழி வாசல்களில் அதாவது ஒன்னாவது கேட், லாஸ்ட் கேட் ஏன் பூட்டி இருக்கிறது?
மருத்துவமனையில் பரிசோதனைகள் பெரும்பாலும் எடுக்கப்படாமல் வெளியே தனியாருக்கு இங்கு உள்ள மருத்துவர்கள் எழுதி தருகிறார்களே தனியார் பரிசோதனை நிலையங்கள் வைத்திருப்பவர்கள் இங்கு வந்து ரத்தம் உட்பட மாதிரிகளை எடுத்துச் செல்கிறார்களே ஏன்?
இது போன்ற எண்ணற்ற கேள்விகளை அவரை சந்தித்த தருணத்தில் சாதாரணமாக கேட்டோம் அவர் அளித்த பதில் இங்கு எந்தவித தவறும் நடக்கவில்லை யாரும் பணம் பெறவில்லை அப்படி ஏதாவது நடந்தால் எங்களிடம் சொல்லுங்கள் நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கின்றோம் என்றார் .
மேலும் லாஸ்ட் கேட் உடைந்து பழுதாகி உள்ளது அதனை சரி செய்வதற்காக கூறியிருக்கிறோம் சரி செய்து விடுவோம் என்றார்.
இங்கு நடக்கும் முறைகேடுகளை நான் ஒவ்வொரு முறையும் உங்களிடம் தொடர்பு கொண்டு கூறிக் கொண்டிருக்க முடியுமா? உங்களுக்கு என்னிடம் பேசிக் கொண்டிருக்க முடியுமா ? சிறுபிள்ளை பென்சில் கூர்ப்பு உடைந்து விட்டது சார் அந்தப் பையன் கில்ரான் சார் என்று சிறுபிள்ளைகள் கூறுவது போல ஒவ்வொரு முறையும் உங்களை நான் தொடர்பு கொண்டு கூறிக் கொண்டிருக்க முடியாது எனவே எந்த தவறும் எந்த முறைகேடுகளும் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து எழுந்து அடுத்த கட்ட நகர்விற்கு அறையை விட்டு வெளியே வந்தோம்.
அப்போது தான் எனக்கு மேற்கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் இவர்களுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை என்கிற எண்ணம் உருவாகியது, ஏனென்றால் இங்கு எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை என்று முழுவதுமாக ஒரு பொய்யை மேல்மட்டத்தில் உள்ள மிகவும் கவனத்துடனும், கண்ணியத்துடனும் மருத்துவ சேவையாற்ற வேண்டிய பொறுப்பில் உள்ள மருத்துவ குழுவே சேர்ந்து கூறியது.
அதன் பிறகு தான் மேலும் இந்த மருத்துவ கல்லூரியில் உள்ள முக்கிய குறைபாடுகள் என்னென்ன என்று ஆராய ஆரம்பித்தோம் அதில் பல அதிர்ச்சிகள் அடுத்தடுத்து தெரியவந்தது.
இவர்கள் செய்யும் அத்துமீறல்களை மறைப்பதற்காக மாதத்திற்கு ஏறக்குறைய இரண்டு முறை மாவட்ட ஆட்சியர் போன்ற மேல்மட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகளையும், ஆளுங்கட்சி முக்கியஸ்தர்களையும் அழைத்து ஏதாவது ஒரு விழா எடுத்து விளம்பரப்படுத்தி வந்தவர்களையும் வெளியில் இருப்பவர்களையும் இங்கு அனைத்து பணிகளும் மக்களுக்கான சேவைகளும் திறம்பட நடைபெறுவதாக காட்டி விடுவதை தொடர் வழக்கமாக வைத்திருக்கிறார்களாம்.
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் விலை உயர்ந்த மருந்துகளையும், ஊசிகளையும் பெரும்பாலும் தனியாரிடம் வாங்க எழுதிக் கொடுத்து விடுவார்களாம், அதேபோல பல சோதனைகளையும் இங்கு செய்தால் நேரமாகும் அதற்குள் நோயாளிக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது எனவே வெளியே சோதனை செய்து கொள்கிறீர்களா என்று அச்சமூட்டி தனியார் பரிசோதனை கூடத்தில் பரிசோதனை செய்ய வைத்து விடுகிறார்கள்.
பணம் அற்ற ஏழைகள் இங்கே சென்று மருத்துவம் பார்த்து எப்படியாவது உயிரைக் காக்க வேண்டும் என்று போகிறவர்களை இவர்களின் சொந்த பணத்திலிருந்து எடுத்து மருத்துவம் பார்ப்பது போல படாதபாடு படுத்துவதை காண முடிகிறது. அரசுகள் மருத்துவத் துறைக்கு என்று தனியாக அமைச்சர்களை போட்டு இந்த சேவையை திறம்பட செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காக ஒவ்வொரு பொது மக்களிடம் இருந்தும் வரும் வரி வருவாயில் இதற்கென நிதி ஒதுக்கப்படுகிறது, ஆனாலும் இவர்கள் படுத்தும் பாட்டில் பலர் அரசு மருத்துவமனை என்றாலே அலறி ஓடி தனியார் மருத்துவமனையில் சேர வேண்டும் என்ற நிர்பந்தத்தை இவ்வாறான அரசு மருத்துவமனை நிர்வாகிகள் செய்கிறார்கள். இவர்களின் செயலால் நோயாளிகளுக்கும் ,பொது மக்களுக்கும் மட்டும் பிரச்சனை என்று தான் பலரும் நினைத்துக் கொண்டிருப்போம்.
ஆனால் உண்மை நிலை வேறு மாதிரியானது அதனைப் பற்றி அறிவோம்.
மாற்றுத்திறனாளிகளாக உள்ள மருத்துவமனை ஊழியர்கள் கையெழுத்து போட்டுவிட்டு அங்கே செக்போஸ்ட் தடுத்து விடுவதால் அரை கிலோ மீட்டர் சுற்றி பணி இடத்திற்கு வரவேண்டிய நிலையில் இருப்பதாக தெரிய வருகிறது.
நான் மேலே குறிப்பிட்டது போல அரசுகள் பல சலுகைகள் செய்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தரம் உயர்த்தி இருக்கிறது அதன் காரணமாக கட்டிடங்கள் புதிது புதிதாக முளைத்திருக்கிறது ஆனால் நோயாளிகளுக்கு சேவை செய்யும் நிலையில் உள்ள செவிலியர்களின் நிலை பரிதாபம்.
செவிலியர்கள் சிறுநீர் கழிப்பதற்கு கூட கழிப்பறைகள் இல்லாத நிலை தான் இப்போது அங்கு இருக்கிறது. நோயாளிகளின் கழிவறைகள் பெரும்பாலும் சரிவர பராமரித்து சுத்தம் செய்யப்படாமல் துர்நாற்றத்தோடு தான் இருக்கிறது. இந்த மருத்துவமனையில் லிப்ட் பழுதாகி வெகு நாட்களாகியும் இந்நாள் வரை சரி செய்யப்படவில்லை என்று தெரிய வருகிறது.
முக்கியமாக இரண்டாம் நிலையில் உள்ள செவிலியர் கண்காணிப்பாளர்கள் இந்த மொத்த மருத்துவமனைக்குமே சேர்த்து 4 பேர் தான் இருப்பதாக தெரிய வருகிறது. அதிலும் ஒருவர் எதாவது விடுப்பில் இருந்து விட்டால் மீதமுள்ள 3 பேர் மட்டுமே இரண்டாம் நிலை செவிலிய கண்காணிப்பாளராக இருப்பதால் அங்குள்ள 300 படுக்கை கட்டிடம் உட்பட மொத்த கட்டிடங்களில் உள்ள அனைத்து நோயாளிகளின் நிலையை நேரில் சென்று பார்வையிட வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.
கட்டிடங்களைப் பெருக்கி காசு பார்க்கும் நோக்கில் இருக்கும் மேல்மட்ட மருத்துவர்கள் இவர்களின் நிலையையும் எண்ணிப் பார்க்க வேண்டாமா? நல்ல நிலையில் உள்ள கட்டிடங்களை பராமரிப்பது குறைவு என்றும் புதிது புதிதாக கட்டிடங்களை கட்டுகிறார்கள் என்றும் தெரிய வருகிறது.
90 நோயாளிகளுக்கு 1 செவிலியர் விதம் தான் இங்கு பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
மொத்த மருத்துவமனைக்கும் 4 செவிலிய கண்காணிப்பாளர்களும் 90 நோயாளிகளுக்கு 1 செவிலியரும் பணி அமர்த்தபட்டால் அங்கு மருத்துவம் எந்த நிலையில் சாமானிய மக்களுக்கு கிடைக்கும் என்று கொஞ்சமாவது சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? இவ்வாறு மன உளைச்சலோடு பணியாற்றிக் கொண்டிருக்கும் செவிலியர்கள் பலருக்கும் பணி மூப்பு பலன்கள் கிடைக்காமலேயே பணி ஓய்வு பெறவேண்டிய துர்பாக்கிய நிலையில் வைத்திருக்கிறது அதிகாரிகளும், அரசுகளும்,
தற்போது ஆட்சி புரிகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் மா. சுப்பிரமணியன் சுகாதாரத்துறை அமைச்சர் ஆனவுடன் பலமுறை செவிலியர்கள் தங்களது குறைகளை மனுவாக அமைச்சரிடம் கொடுத்திருப்பதும் அதைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் இன்று வரை சீனியாரிட்டி முறைப்படி கவுன்சிலிங் நடத்தப்பட எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதும் மிகப்பெரிய அவலம்.
இவ்வாறு பல்வேறு குறைகளோடு வெளியில் இருந்து பார்ப்பவர்களின் கண்ணில் மண்ணை தூவி விட்டு பணத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டிருக்கும் மருத்துவமனை நிர்வாகம் திருந்த வேண்டும், மருத்துவத்துறை அமைச்சரும், மாவட்ட நிர்வாகமும் கண்காணித்து திருத்த வேண்டும்,
மனிதர்களை தடுத்து நிறுத்தும் மருத்துவமனை நிர்வாகம் நாய்களை நோயாளிகளின் அறைகளில் அனுமதிப்பது ஏன் நாய்களை தடுத்து நிறுத்தினால் பணம் தராது என்பதற்காகவா?
பணம் பிடுங்குவதை நிறுத்த வேண்டும், நிர்வாக சீர்கேடுகளை திருத்த வேண்டும், தவறினால் ஒவ்வொன்றாக ஆதாரத்தோடு வெளியிடும் மாநாடு.
வீடியோ லிங்க் இதோ :https://youtu.be/fP3FxLWopUo
உண்மைதான் எனது நண்பர் இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும்போது புதிய பேருந்து நிலையம் அருகில் விபத்தில் சிக்கினார் அவருடைய கால் எலும்பு முறிந்து விட்டது அருகில் உள்ளவர்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார்கள் அங்கு அறுவை சிகிச்சை செய்ய காலம் கடத்தியதால் அன்று இரவே தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்படார்
மறு நாள் காலை அவருக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது .
இதே போல் தனியார் மருத்துவமனையில் இருக்கும் ஒரு சில நோயாளிகளும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து இடை தரகர்கள் மூலம் இங்கு கொண்டுவந்து சேர்க்கப்பட்டுள்ளார்கள்.அவர்களுக்கு தமிழக அரசின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க படுவதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.