Spread the love

மாநாடு 11 September 2022

சென்னை சாஸ்திரி நகரில் வாழ்ந்து வருபவர் 57 வயது உடைய மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன்

கடந்த 35 ஆண்டுகளாக தமிழக பத்திரிக்கை உலகில் நன்கு அறியப்பட்டவர்.தீக்கதிர், துக்ளக் போன்ற ஏடுகளில் நீண்ட காலம் எழுதி வந்தவர். தந்தி தொலைக்காட்சியிலும் சில காலம் முக்கிய பொறுப்பு வகித்தவர் இவரை இன்று காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்று இருக்கின்றார்கள் இச்செயலுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கீழ்க்கண்டவாறு கடும் கண்டனத்தை தனது அறிக்கையின் மூலம் தெரிவித்திருக்கிறார்.

ஸ்ரீமதி மரணம் குறித்து எழுதியதற்காக பத்திரிக்கையாளர் சாவித்திரி கண்ணனைக் கைதுசெய்வதா? 

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து எழுதியதற்காக மூத்த பத்திரிகையாளர் ஐயா சாவித்திரி கண்ணன் அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். ஒவ்வொரு மனிதருக்குமான அடிப்படை சனநாயக உரிமையான கருத்து சுதந்திரத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுள்ள இக்கைது நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.

இதுவரை இல்லாத நடைமுறையாக, வழக்குக்குறித்து புலனாய்வுசெய்து செய்தி வெளியிட்ட பத்திரிகையாளரைக் கைதுசெய்வதும், அதுகுறித்துப் பேசுவதற்கும், எழுதுவதற்கும் தடைவிதிப்பதுமான போக்குகள் எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும். ஸ்ரீமதி மரணத்தில் புலப்படாதிருக்கும் பல உண்மைகளை வெளிக்கொண்டு வரவும், பாதிக்கப்பட்டக் குடும்பத்தினருக்கு நீதியைப் பெற்றுத்தரக் கோரியுமாக இயங்கி வரும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகள் ஏற்கவே முடியாத சனநாயகப் படுகொலையாகும்.

ஸ்ரீமதி மரணத்திற்கு நீதிகேட்டுக் கருத்துப்பரப்புரை செய்த, போராடிய இளைஞர்களைக் கைதுசெய்து சிறையிலடைப்பதும், இதுகுறித்துப் பேசவிடாது ஊடகவியலாளர்களின் குரல்வளையை நெரிப்பதுமான திமுக அரசின் அதீதச்செயல்பாடுகள் பெரும் ஐயத்தைத் தோற்றுவிக்கிறது. யாரைக் காப்பாற்றுவதற்காக? எல்லோரையும் பேசவிடாது, நெருக்கடி கொடுத்து இவ்வாறு முடக்குகிறார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது.

பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் மீதான கைது நடவடிக்கையைக் கைவிட்டு, அவரை எவ்வித வழக்குமின்றி விடுவிக்க வேண்டுமெனவும், கருத்து சுதந்திரத்திற்கெதிரான இக்கொடுங்கோல்போக்கை முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டுமெனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என்று தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார் சீமான்.

49920cookie-checkபத்திரிக்கையாளர் கைது சீமான் கடும் கண்டனம்

Leave a Reply

error: Content is protected !!