Spread the love

மாநாடு 13 September 2022

தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி 11 ஆம் தேதிகளில் முதலமைச்சர் தலைமையில் சென்னையில் போதைப் பொருள் ஒழிப்புக் கூட்டம் நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் போதைப்பொருள் ஒழிப்பு விவகாரத்தில் தமிழக அரசு தீவிரமாக இருக்கிறது, இந்த விஷயத்தில் நான் சர்வதிகாரியாக நடந்து கொள்வேன் எனக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் ,சட்டமன்ற உறுப்பினர்களும், காவல்துறை கண்காணிப்பாளர்களும் உறுதுணையாக இருந்து தமிழகத்தில் போதை பொருட்களை ஒழிக்க தீவிரம் காட்ட வேண்டும், ஒவ்வொரு காவல்துறை ஆய்வாளரும் எனது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போதை பொருட்கள் விற்பதை தடுப்பேன், என்பதை உறுதி எடுத்துக் கொண்டு விட்டால் சுலபமாக தமிழ்நாட்டில் இருந்து போதை பொருட்களை அகற்றி விடலாம் அதன் மூலம் இளைஞர்களை காத்து விடலாம், ஒவ்வொரு நாளும் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வருவதை காண முடிகிறது, இதனை உடனடியாக நாம் தடுத்து நிறுத்தி இளைஞர்களை காக்க வேண்டிய கட்டாய சூழ்நிலையில் இருக்கின்றோம் என்று பேசினார். இது அனைத்து ஊடகங்களிலும் அன்று முக்கிய செய்தியாக திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்ததை அனைவரும் நன்கறிவோம்.

அது மட்டுமல்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் போதைப்பொருள் தடுப்பு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணிகளும், பள்ளிக்கூடங்களில் கூட்டங்களும் நடைபெற்றது. 1 வாரம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வந்தது, அதை படம் பிடித்து அனைத்து ஊடகங்களும் வெளியிட்டுக் கொண்டிருந்தது .

கடந்த அதிமுக ஆட்சியில் டாஸ்மாக்கை இழுத்து மூட வேண்டும் என்றும் திமுக ஆட்சி அமைத்து விட்டால் தமிழகத்தில் ஒரு சொட்டு மது கூட இருக்காது என்றும் ஸ்டாலின் பேசியதை சமூக அக்கறை உள்ளவர்கள் இன்னுமும் நினைவில் நிறுத்தி இருக்கிறார்கள்.

மேலும் திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி டாஸ்மாக்கைப் பற்றி பேசும்போது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் இளம் விதவைகள் அதிகம் இருக்கிறார்கள், அதற்கு காரணமான டாஸ்மாக் தமிழகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும் என்று பேசியது அப்போது பரபரப்பாக பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைத்திருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகம் நம்பி வாக்களித்த மக்களிடத்தில் வெறும் வாக்குறுதியை மட்டுமே கொடுத்துக் கொண்டிருப்பதிலும் வெற்று விளம்பரங்கள் படுத்துவதிலுமே ஆட்சியின் பெரும்பாலான நேரங்களை கழித்துக் கொண்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

இதனை மெய்ப்பிக்கும் வகையில் தஞ்சாவூர் மாவட்டம் பள்ளியகிரகாரம் மனக்கரம்பை ஊராட்சிக்கு உட்பட்ட ஜமீல் அகமது நகர் என்கிற பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்காக புதிய கட்டிடங்கள் கட்டி அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக கூறி பொதுமக்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள், என்றும் அவர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியும் களத்தில் குதித்து இருக்கிறது என்பதும் நமக்கு தெரியவந்ததையொட்டி விசாரணையில் இறங்கினோம்.

நம்மிடம் பொதுமக்கள் கூறியதாவது:

இப்போது புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க திட்டமிட்டிருக்கும் பகுதி தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை NH-36 ஆகும். இந்த சாலையில் நாள் ஒன்றுக்கு ஏறக்குறைய 80 ஆயிரம் வாகனங்கள் பயணிக்கின்றன ஏற்கனவே சாலைகள் நிலாவில் காணப்படுவது போல குண்டும் குழியுமாக தான் இருக்கிறது.இதனாலையே இந்த பகுதியில் அதிகமாக விபத்துகளும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நாங்கள் வாழ்கின்ற ஜமீல் அகமது நகர் பகுதியின் அருகிலேயே டாக்டர் நல்லி குப்புசாமி பெண்கள் கலைக் கல்லூரி அமைந்திருக்கிறது, அதற்கு அடுத்தார் போல் டாக்டர் வெள்ளைச்சாமி நாடார் கல்வியியல் கல்லூரி மற்றும் டாக்டர் வெள்ளைச்சாமி நாடார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும் அதன் அருகிலேயே பெண்கள் மட்டும் தங்கும் கல்லூரி விடுதியும் அமைந்திருக்கிறது. சுமார் 500 மீட்டர் தொலைவில் அபி&அபி கலை மற்றும் அறிவியல் தொழில்நுட்பக் கல்லூரியும் இந்த பகுதியை சுற்றி பல கல்வி நிறுவனங்களும் ,புகழ்பெற்ற வழிபாட்டுத்தலங்களும் இருக்கின்றது, எங்கள் ஜமீல் அகமது நகரில் 500 குடியிருப்புகள் இருக்கிறது ,மேலும் இந்நகரை சுற்றி

 சக்தி நகர் உட்பட பல நகர்களும் இருக்கின்றது ,அங்கும் பல குடியிருப்புகள் வரத் தொடங்கி விட்டன நிலை இவ்வாறு இருக்க ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் டாஸ்மாக்கை ஒழிப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்றக் கழகம் எங்களை ஏமாற்றி விட்டது.

இங்கு  டாஸ்மாக் கடை வந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது ,தேசிய நெடுஞ்சாலை அருகில் இருப்பதால் விபத்துகளும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது ,அருகிலேயே சுற்றி பெண்கள் கல்லூரிகளும், பெண்கள் மட்டும் தங்கும் விடுதிகளும் இருக்கிறது ,அவர்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்து விடும், குடிகாரர்கள் குடித்துவிட்டு வீசி எரியும் பாட்டில்களாலும், நெகிழி குப்பைகளாலும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படவும், நோய் தொற்றும் அபாயமும் இருக்கிறது இதை அனைத்தையும் சுட்டிக்காட்டி ஜமீல் அகமது நகர் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தஞ்சாவூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர், தஞ்சாவூர் மாவட்ட உதவி ஆணையர் கலால் பிரிவு மற்றும் சென்னை டாஸ்மாக் மேலாண்மை இயக்குனருக்கு மனுவாக கொடுத்திருப்பதாக ஜமீல் அகமது நகர் மக்கள் தெரிவிக்கிறார்கள்.

இதனை மீறியும் இங்கு டாஸ்மாக் கடை அமைக்க எவ்வித ஏற்பாடும் செய்யாமல் எங்களை நிம்மதியாக அரசு வாழ விட வேண்டும் என்று கூறுகிறார்கள்.

நாம் தமிழர் கட்சியினர் கூறியதாவது:

தமிழக அரசு நாள்தோறும் நாடகம் போட்டுக் கொண்டிருக்கிறது. வாக்களித்த மக்களை வக்கற்றவர்களாக ஆக்கும் அத்தனை வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறது முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு.

அந்தப் போக்குகளை ஒவ்வொன்றையும் மக்களுக்கு அரணாக நின்று தடுத்து காத்து வருகின்றோம். அப்படிதான் இது. தேசிய நெடுஞ்சாலை அருகில் இருப்பது தெரிந்தும், அருகில் மாணவிகள் படிக்கின்ற கல்விக்கூடங்கள் இருக்கிறது என்று தெரிந்தும் , மக்களின் வாழ்விடத்திற்கு அருகிலேயே டாஸ்மாக் கடையை திறக்க அனுமதி கொடுத்திருக்கின்ற இந்த மாவட்ட நிர்வாகத்தையும் ,மது கொடுத்து மயக்கியே ஆட்சி நடத்த வேண்டும் என்று திட்டம் தீட்டி கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் போதை பொருளாகிய டாஸ்மாக் சாராயக் கடையை தொடர்ந்து திறந்து கொண்டிருக்கும் தமிழக அரசையும் வன்மையாக கண்டிக்கின்றோம்.

எங்களின் நோக்கம் இந்த ஊரில் மட்டுமல்ல எந்த ஊரிலும் மது இருக்கக் கூடாது என்பதுதான்.

கடந்த காலங்களில் கையில் பதாகை ஏந்தி கொண்டு மதுவை ஒழிக்க வேண்டும் என்று போராட்டம் செய்து போட்டோவுக்கு போஸ் கொடுத்து போராட்டம் நடத்தியவர் இந்த மு.க.ஸ்டாலின்.

தற்போது கூட போதைப்பொருள் ஒழிப்பு என்கின்ற நடவடிக்கையை தீவிரமாக எடுப்பேன் என்று கூறி போதைப் பொருள் ஒழிப்பு வாரம், போதை பொருள் ஒழிப்பு தினம் போன்றவற்றை கடைப்பிடித்தவரும்  இந்த மு.க.ஸ்டாலின் தான் , அதில் பேசிய போது கூட போதை பொருள் விற்பவர்களின் சொத்துக்களை அரசு பறிமுதல் செய்யும் என்று கடுமையாக எச்சரித்தவரும் இதே மு.க.ஸ்டாலின் தான் , இப்படி எல்லாம் பேசிவிட்டு செயலில் அதற்கு எதிர்மறையாக செயல்படுகிறார்,  திமுகவிற்கு இது ஒன்றும் புதிதல்ல, மக்கள்தான் பல நேரங்களில் இதனை மறந்து விடுகிறார்கள். இருந்தாலும் இவர்கள் நம் மக்கள், எனவேதான் இந்த பகுதியில் வாழ்கின்ற மக்களுக்காக நாம் தமிழர் கட்சியின் கிளை பிரிவான வீரத்தமிழர் முன்னணி முன்னின்று மக்களை காக்கின்ற பெரும் பணியில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றது, அதனை எடுத்துரைக்கும் விதமாக தான் நாங்கள் கண்டன சுவரொட்டிகள் ஒட்டி இருக்கிறோம். இதனை ஏற்று டாஸ்மாக் கடை திறப்பதை நிறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.

ஜனநாயக வழியில் எங்களது கண்டனத்தை தெரியப்படுத்தி இருக்கிறோம்,அதனை மீறி டாஸ்மாக் கடையை திறக்க திமுக அரசு முயற்சி செய்யக் கூடாது என்றும் ஏற்கனவே திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் ஜூலை 15-2015 ஆம் ஆண்டு படிக்க பள்ளிக்கூடம் திறந்த காமராசர் பிறந்த நாளில் திறந்திருந்த டாஸ்மாக் கடையை அடித்து உடைத்த வரலாறும் எங்களுக்கு உண்டு என்பதையும் நினைவுபடுத்துகிறோம்,

அதற்காக நாங்கள் வன்முறையின் மீது காதல் கொண்டவர்கள் என்று நினைத்து விட வேண்டாம் எங்களை அந்த நிலைக்கு தள்ளாமல் இருக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாகும்.

மக்களின் வாக்கை வாங்கி தன் மக்களின் வாழ்க்கையை செழிக்க செய்வதற்காக தொடங்கப்பட்டதல்ல நாம் தமிழர் கட்சி,

மக்களோடு மக்களாக நின்று மக்களின் வாழ்க்கையை செழிக்க செய்வதற்காக தொடங்கப்பட்டது நாம் தமிழர் கட்சி.

இதனை உணர்ந்து மக்கள் வாக்களிக்கும் போது போராட வேண்டிய நிலையே இல்லாமல் நாங்கள் ஆட்சி செய்வோம் இது விரைவில் நடக்கும், அதுவரை மக்களுக்கு அரணாக நின்று அரசுகள் செய்கின்ற அட்டூழியங்களை அம்பலப்படுத்தி தடுத்து நிறுத்துவோம்.

இந்த ஒத்த டாஸ்மாக் கடையை திமுக அரசு திறக்க முயற்சித்தால் மொத்த கடையையும் இழுத்து மூட வேண்டிய நிலையை அப்போதே உருவாக்குவோம் என்று கோபத்தோடு தெரிவித்தார்கள் நாம் தமிழர் கட்சியினர்.

டாஸ்மாக்கில் விற்பது போதைப் பொருள் தான் என்பதை எப்போதுதான் இந்த அரசு உணரப்போகிறதோ ?

49980cookie-checkதஞ்சாவூரில் நாம் தமிழர் கட்சியினர் எச்சரிக்கை மொத்ததையும் இழுத்து மூடுவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!