Spread the love

மாநாடு 15 September 2022

இன்று திமுகவின் நிறுவனத் தலைவர் அறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாள். இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் உள்ள சில கட்சிகளால் தமிழ்நாடு முழுவதிலும் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது.

அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுப் போட்டிகள், கவிதைகள், கட்டுரைகள், பேச்சுப் போட்டிகள் மாணவ, மாணவியரின் தனித் திறன் போட்டிகள் நடத்தப்படுவது, பரிசு கொடுப்பது வழக்கம் தான் என்றாலும், இந்த ஆண்டு தஞ்சாவூரில் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவதாக நினைத்துக் கொண்டு, திமுகவினர் பொதுமக்களை படாதபாடு படுத்தி விட்டார்கள், இந்த செயல் கட்சி சார்பற்று அனைத்து பொது மக்களையும் முகம் சுளிக்க வைத்தது, காரணம் பிரசவத்திற்காக அவசர உதவிக்காக கர்ப்பிணிப் பெண்களும், குழந்தைகளும் மருத்துவத்திற்கு செல்லக்கூடிய அரசு மருத்துவமனை சாலையை ஏறக்குறைய 2 மணி நேரம் போக்குவரத்தை துண்டித்து அடைத்து விட்டார்கள். காவலர்கள் அந்த எல்லைக் கோட்டை தாண்ட முயற்சிக்கும் அப்பாவி பொதுமக்களை தடுத்து நிறுத்தி திமுகவினருக்காக அந்த நேரத்தில் முழுவதுமாக வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

இங்கிருந்து வேறு எந்த சாலை வழியாகவும் சுற்றி கூட பெரிய ஆஸ்பத்திரிக்கு வர முடியாத அளவிற்கு நீதிமன்ற சாலையும் அடைத்து இருந்தார்கள். ஒரு அவசர கதிக்கு கர்ப்பிணி பெண்களை எப்படி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியும் என்ற சராசரி சிந்தனை கூட இல்லாமல் ,மக்களைப் பற்றி கொஞ்சமும் அக்கறை இல்லாமல் பெரிய மன்னரின் வகையறாக்கள் போல திமுகவினர் நடந்து கொண்டது மிகவும் அநாகரிகமாக இருந்தது,

மக்களுக்காக நாம் உழைக்க வேண்டும் அதற்கு அதிகாரம் நம் கையில் வேண்டும் என்ற காரணத்திற்காகவும் ஆரம்பிக்கப்பட்டதாக சொல்லப்படுகின்ற திமுகவின் இன்றைய நிலை ஒரு குடும்பத்தை மட்டும் போற்றி, புகழ வேண்டிய கட்டாயத்திற்காக தன்னை விளம்பரப்படுத்தி கொள்வதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளவர்கள் வேலை செய்வதாக திமுகவின் முன்னோடிகளில் சிலரே கூறுகிறார்கள்.

அவர்கள் கூறும்போது பேரறிஞர் அண்ணா போராட்டத்தைக் கூட எப்படி நடத்த வேண்டும் என்று சொன்னார் தெரியுமா என்று நம்மிடம் கேட்டார்கள்.

நீங்களே கூறுங்கள் ஐயா என்றோம் அப்போது அவர்கள் கூறியதாவது: மக்களின், தொண்டர்களின் சூழ்நிலை, தெரியாது ,உணராமல், நடத்துகின்ற எந்த போராட்டமும் வெல்லாது. எனவே நாம் போராட்டம் நடத்த வேண்டும் என்றாலும் கூட பொது மக்களின் ,தொண்டர்களின் சூழ்நிலை, அறிந்து செயல்பட வேண்டும், என்றார் அறிஞர் அண்ணா என்றார்கள்.

ஆனால் இன்று காலை 9 மணி அளவில் பழைய பேருந்து நிலையம், கீழவாசல் பகுதி, மருத்துவ கல்லூரி செல்கின்ற பகுதி, பழைய நீதிமன்ற சாலை செல்கின்ற பகுதி, உலகப் புகழ்பெற்ற பெரிய கோயில் செல்கின்ற பகுதி, என அத்தனை பகுதிகளையும் அடைத்து நிறுத்திவிட்டு பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் பிறந்த நாளை பெருமைப்பட கொண்டாட வேண்டும் என்று நினைத்து அண்ணாவை தஞ்சாவூர் திமுகவினர் சிறுமைப்படுத்தி விட்டார்கள் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

மேலும் பொதுமக்கள் கூறும் போது : காலையில் பள்ளிக்கூடத்திற்கு குழந்தைகளை அழைத்துச் செல்கின்ற நேரம் அந்த நேரத்தில் இப்படி தஞ்சாவூரின் பெரும்பாலான முக்கிய பகுதிகளை அடைத்து விட்டு எங்களுக்கு இடைஞ்சல் செய்துவிட்டு அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாட வேண்டுமா?

போக்குவரத்து நெரிசல் இல்லாத மதிய நேரங்களில் இவர்களின் ஆசை தீர கொண்டாடி இருக்கலாம், அல்லது வேறு எங்காவது படங்களை வைத்து அண்ணாவின் பிறந்த நாளை கொண்டாடி இருக்கலாம், இவர்களின் கட்சி அலுவலகங்களில் கொண்டாடி இருக்கலாம். இப்படிதான் பள்ளிக்கு போகின்ற பிள்ளைகளை மறித்து மருத்துவமனைக்கு செல்கின்ற கர்ப்பிணி பெண்களையும் குழந்தைகளையும் தடுத்து நிறுத்தி வருத்தி அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாட வேண்டுமா?

அது மட்டுமல்லாமல் மருத்துவக் கல்லூரி சாலையும் ஒருபுறம் முழுவதுமாக அடைக்கப்பட்டிருக்கிறது உங்களுக்கு தெரியுமா என்றார்கள் .

நீங்களே விளக்கமாக கூறுங்கள் என்றோம் அவர்கள் கூறியதாவது: பள்ளிக்கு விடுவதற்காக எங்களது குழந்தையை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு வந்தோம். ஆனால் ஈஸ்வரி நகர் சாலையில் தடுப்பு போடப்பட்டு அனைத்து வாகனங்களும் திருப்பிவிடப்பட்டு கொண்டிருந்தது .குழந்தைக்கு வேறு பள்ளிக்கு நேரமாகிக் கொண்டிருந்த காரணத்தால் உடனடியாக அவர்களிடம் விளக்கம் கேட்டு விட்டு வேறு வழியில் குழந்தையை பள்ளியில் விட சென்று விட்டேன்.

எதற்காக அங்கு அடைத்திருக்கிறார்கள் வாகனங்களை தடுத்து திருப்பி விடுகிறார்கள் என்று கேட்டதற்கு இன்று மாணவ மாணவியர்களுக்கான சைக்கிள் ஓட்டும் போட்டி அந்த சாலையில் நடைபெறுகிறதாம் அதனால் அனைத்து வாகனங்களும் திருப்பிவிடப்படுகிறது என்று கூறினார்கள்.மனசாட்சி உள்ள மனிதர்கள் சிந்தித்துப் பாருங்கள் ஈஸ்வரி நகரின் அடுத்த பகுதியாக இருக்கிற மங்களபுரத்தில் நவபாரத் பள்ளிக்கூடம் இருக்கிறது, அதை வழியாக தான் செல்வராஜ் பள்ளி, சேக்ரெட் பள்ளி ,ஜோசப் பள்ளி என பல பள்ளிக்கூடங்கள் இந்த வழியில் தான் இருக்கிறது. பல மாவட்ட மக்களும் மருத்துவத்திற்கு வரக்கூடிய மிகப் பெரிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் இங்கு தான் இருக்கிறது .

அப்படி இருக்கையில் ஏறக்குறைய ஒரு மணி நேரம் இவ்வாறு சாலையை மறித்து பொதுமக்களை அல்லல் பட வைத்தது இந்த மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியாமைலா நடந்து இருக்கும். ஏன் அனைவரும் அடுத்தவர்களின் கஷ்டத்தை புரிந்து கொள்ளாமல் இப்படி அல்லல்படுத்துகிறார்கள் இவர்களுக்கெல்லாம் மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதா? இல்லையா? சைக்கிள் போட்டி நடத்த வேண்டும் என்றால் பைபாஸ் சாலை இருக்கிறது அங்கு நடத்தி இருக்கலாம் அதையெல்லாம் விட்டுவிட்டு இது எந்த மாதிரியான போக்கு என்று தெரியவில்லை நீங்களாவது எனது பெயரை வெளியிடாமல் செய்தியாக வெளியிட்டு அவர்களுக்கு அவர்களின் தவறை சுட்டிக் காட்டுவீர்களா என்று விரக்தியில் பேசிவிட்டு நகர்ந்தார் அந்த அப்பாவி.

அண்ணாவின் பிறந்தநாளை இப்படி தான் பொதுமக்களை அல்ல படுத்தி கொண்டாட வேண்டுமா? என்று அரசியல் நோக்கர்களிடம் கேட்டபோது: இவர்களுக்கு அண்ணாவையும் தெரியாது, அவரின் கொள்கையையும் தெரியாது, எனவே தான் இவர்கள் இப்படி எல்லாம் செய்கிறார்கள் ,இவர்களுக்கு இப்போது தெரிந்ததெல்லாம் திமுக, மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ,இன்பநிதி, எந்த பெயரை சொன்னால், யாரை எவ்வளவு புகழ்ந்தால், எவ்வளவு நிதி கிடைக்கும் என்கிற அந்த புகழ், ஏக்க, மயக்கத்தில் இருக்கிறார்கள், பாவம் இப்போது இருப்பவர்கள் வரலாறு தெரியாதவர்கள், அதனால் தான் தலைகால் தெரியாமல் ஆடிக் கொண்டிருக்கிறார்கள் எவ்வளவு பெரிய உச்சியில் இருந்த சாம்ராஜ்யமும் மண்ணோடு மண்ணான வரலாறு இருக்கிறது.

மக்கள் ஆட்சி அதிகாரம் கொடுத்தால் அதனைப் பெற்றுக் கொண்டு மக்களுக்கு எவ்வளவு அதன் மூலமாக நன்மைகள் செய்ய முடியுமோ அதனை செய்ய முயற்சிக்க வேண்டும், அதை விடுத்து இதுபோல கூலிக்கு ஆள் கூட்டி வந்து கொண்டாட்டங்களில் ஈடுபடுவது இப்போது வேண்டுமென்றால் இவர்களுக்கு ஏதோ பெரிய சாதனை செய்து விட்டோம் என்று தோன்றலாம். ஆனால் எல்லாவற்றையும் மக்கள் கவனித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள், என்பதை மறந்து இவ்வாறான பொதுமக்களை கஷ்டப்படுத்தும் வேலையில் திமுகவினர் ஈடுபட்டு வருகிறார்கள் இது நல்லதல்ல.

அண்ணா பிறந்த நாளில் உண்மையிலேயே அறிஞர் அண்ணாவிற்கு திமுகவினர் பெருமையும் புகழையும் சேர்க்க வேண்டும் என்று நினைத்திருந்தால், அறிஞர் அண்ணாவின் கொள்கை பூரண மதுவிலக்கு அதை இன்று அமல்படுத்தி இருக்கலாம்,

ஏனென்றால் இப்போதெல்லாம் முதல்வர் மு.க.ஸ்டாலின் போதை ஒழிப்பு பற்றி அதிகமாக பேசிக் கொண்டு வருகிறார் இந்த நாளில் அண்ணாவின் மொழியான சாராயத்தை விற்று தான் ஆட்சி நடத்த வேண்டும் என்றால் நான் மக்களிடமே துண்டேந்தி பிச்சை பெற்று ஆட்சி நடத்துவேன், சாராயம் விற்கும் காசு திமுகவிற்கு தேவை இல்லை என்றாரே அதை இவர்கள் செயல்படுத்தி இருக்கலாம்.

மேலும் அறிஞர் அண்ணா கூறும் போது சாராயம் விற்று வரும் காசு தொழு நோயாளியின் கையில் இருக்கும் வெண்ணைக்கு சமம் என்றாரே அதை மனதில் நிறுத்தியாவது அண்ணாவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடி இருக்கலாம்.

மூட வேண்டியதை விட்டுவிட்டு  பொதுமக்கள் பயன்படுத்துகிற சாலைகளை மூடி அண்ணாவிற்கு பிறந்தநாள் கொண்டாட்டம் தேவையா?  இனியாவது சிந்தித்து திருந்த வேண்டும் இந்த ஆட்சியாளர்கள் என்றார்கள்.

இத்தனை ஆண்டுகளிலும் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு தான் வந்தது ஆனால் இன்று காலை தஞ்சாவூரில் கொண்டாடப்பட்டது போல இதுவரையில் அவரின் பிறந்த நாளை கொண்டாடுவதாக சொல்லி அண்ணாவின் புகழை யாரும் அசிங்கப்படுத்தியது இல்லை.

ஆட்சி அதிகாரம் என்பது மக்கள் மீது செலுத்தப்படுகிற விவகாரம் அல்ல, அது மக்களுக்கு ஆற்றப்படுகின்ற மாபெரும் தொண்டு என்று புரிந்து கொண்டு தவறை திருத்திக் கொண்டு மக்களிடம் நற்பெயரை பெற முயற்சி செய்ய வேண்டும் தஞ்சாவூர் திமுகவினர்.

வீடியோ லிங்க் :https://youtu.be/Ta1SH09DxfU

50180cookie-checkதஞ்சாவூரில் அண்ணாவை அசிங்கப்படுத்திய திமுக

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!