மாநாடு 24 September 2022
தஞ்சாவூரில் முன்பெல்லாம் அதிக அளவில் திரைப்படங்களின் படப்பிடிப்பு நடந்து வந்தது, சமீப காலமாக அவ்வாறான படப்பிடிப்புகள் தஞ்சாவூரில் அதிகமாக நடைபெறவில்லை, அந்த குறையை போக்கும் அளவிற்கு ஒவ்வொரு நாளும் தஞ்சாவூரில் மக்களால் ,மக்களுக்கு பணி செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ,சமூக ஊடகங்கள் மூலமாகவும், காட்சி ஊடகங்கள் மூலமாகவும் வெறும் படப்பிடிப்பையே அதிகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது,
அந்தந்த பகுதிகளில் இருக்கின்ற குறைகளை சுட்டிக்காட்டி அவ்வப்போது செய்திகளை நமது மாநாடு இதழின் மூலமாகவும் ,மாநாடு யூட்யூப் சேனல் மூலமாகவும், தெரியப்படுத்தி வருகிறோம் ,அதன் நோக்கம் அங்கு இந்த குறைகள் இருக்கிறது என்று தெரிந்தால் அதனை சம்பந்தப்பட்டவர்கள் சரி செய்வார்கள், மக்கள் பலன் பெறுவார்கள் என்கிற நோக்கில் நாம் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகிறோம்,
அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பாக தஞ்சாவூரில் சாலைகள் சரியில்லாததையும், குப்பைகள் கண்டபடி கண்ட இடங்களிலும் கொட்டி கிடப்பதையும், ஆதாரத்தோடு செய்தியாக வெளியிட்டிருந்தோம். முக்கிய சாலைகளில் மின்விளக்குகள் எரியாமல் இருப்பதை சுட்டிக்காட்டும் விதமாக சில நாட்களுக்கு முன்பாக செய்தி வெளியிட்டு இருந்தோம். அந்த செய்தியை தொடர்ந்து தஞ்சாவூரில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எங்கள் பகுதியிலும் மின்விளக்குகள் எரியாமல் இருக்கிறது, அதன் காரணமாக விரும்ப தகாத நிகழ்வுகள் இந்த பகுதியில் நடக்க வாய்ப்பு இருக்கிறது, அதிகமாக விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது, இதனையும் வெளியிடுங்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள்,
அதன்படி முதற்கட்டமாக நேற்று இரவு அவர்கள் குறிப்பிட்டு இருந்த பகுதிகளில் மிகவும் முக்கியமான பகுதியான பெரிய கோயில் அருகே மருத்துவக் கல்லூரி,புதிய பேருந்து நிலையம் , திருச்சிக்கு சொல்லும் வழித்தடத்தை இணைக்கும் தஞ்சாவூர் நகரப் பகுதியில் அமைந்திருக்கும் முக்கிய பாலத்திற்கு சென்றிருந்தோம். இந்த மேம்பாலத்தில் மின் விளக்கு போடப்படாமல் மிகவும் இருட்டாக இருந்தது இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியுற்றார்கள். இதனை ஒளிப்பதிவு செய்வதற்கு கூட முடியாத அளவிற்கு அந்த பாலமே முழு இருளில் சூழ்ந்திருந்தது அதனால் புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டு வந்து விட்டோம்.
இந்த மேம்பாலத்தில் சாதாரணமாகவே விபத்து ஏற்படும் என்று கூறப்படுகிறது அப்படி இருக்கையில் மின்விளக்கு எறியப்படாமல் முழுவதுமாக இருள் சூழ்ந்த நிலையில் தஞ்சாவூரின் முக்கிய மேம்பாலம் இருப்பது மிகவும் வெட்கக்கேடானது. இந்த மேம்பாலத்தில் பல நாட்களாக இப்படி தான் மின் விளக்கு எரியாமல் இருட்டாக தான் இருக்கிறதாம்.
தஞ்சாவூரில் மாநகரப் பகுதியில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கின்ற போது இதையெல்லாம் தீர்க்காமல், ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் சொல்லுங்கள் நான் தீர்த்து வைக்கிறேன் என்று மனுவை வழங்கிக் கொண்டிருப்பதும், நம்மவார்டு நம்ம மேயர் என்கிற பெயரில் சில பகுதிகளுக்கு சென்று புகைப்படம் போடுவதும், ஊடகங்களில் தமிழ்நாட்டிலேயே தஞ்சாவூரை முதன்மையான மாநகராட்சியாக ஆக்குவேன் என்று பேட்டி கொடுத்துக் கொடுப்பது போன்ற வேலைகளில் தீவிரமாக ஈடுபடும் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் மக்களின் அடிப்படை பிரச்சனையான சாலைகள், சுகாதாரம், போன்றவற்றில் அதிக அக்கறை எடுத்துக்கொண்டு உண்மையிலேயே மக்களின் வேலைக்காரராக செயல்பட வேண்டும் என்கிறார்கள் மக்கள்.
இனிவரும் காலங்களிலாவது அவர் ஜாக்கிங் செய்யும் பகுதி எப்படி மேடு, பள்ளம் இல்லாமல் சமமாக இருக்கிறதோ, அப்படி பொதுமக்கள் வாக்கிங் செல்கின்ற பகுதிகளையும் தஞ்சாவூர் மாநகர மேயர் சண்.ராமநாதன் மாற்ற வேண்டும்.மாற்றினால் அதையும் நமது மாநாடு இதழில் வெளியிட தயாராக இருக்கிறோம்.மாற்றுவாரா ? ஏமாற்றுவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.