மாநாடு 13 October 2022
தமிழ்நாட்டில் அலுவலகத்தில் சாதி சான்றிதழ் வாங்குவதற்காக எவ்வளவு பொதுமக்கள் துன்பப்பட வேண்டி இருக்கிறது, சில நேரங்களில் உயிரையே கொடுக்க வேண்டியதாக இருக்கிறது என்பதற்கான சான்றாகவும், தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டை அனைவரும் அறியும் படியான சம்பவமாக அமைந்திருக்கிறது நடந்து முடிந்த இரண்டு தற்கொலை மரணங்கள்.
அதன் விவரம் பின்வருமாறு: கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் மலை குறவர் சமூகத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவர் தனது பத்தாம் வகுப்பு படிக்கும் மகனுக்கு சாதி சான்றிதழ் கொடுக்காமல் அதிகாரிகள் அலைக்கழித்த விரக்தியில் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்தார், அவரை அங்கிருந்த காவலர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்கள் 90 விழுக்காடு தீக்காயங்களோடு மீட்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ஏறக்குறைய கடந்த 100 நாட்களில் சாதி சான்றிதலுக்காக விண்ணப்பித்து கிடைக்காத விரக்தியில் நடைபெறும் 2வது தற்கொலை சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தீக்குளித்து மரணம் அடைந்த வேல் முருகனுக்கு முன் கடந்த ஜூன் 4-ஆம் தேதி கொண்டாரெட்டி சாதி சான்றிதலுக்காக விண்ணப்பித்த முதியவர் பெரியசாமி என்பவர் பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
சாதி சான்றிதழுக்கு விண்ணப்பித்த ஒரு மாதத்தில் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்பது விதி. ஆனால் அவ்வாறு அலுவலகங்களில் நடைபெறவில்லை என்பதை வெளி உலகத்திற்கு எடுத்துக்காட்டும் விதமாக அமைந்திருக்கிறது இவ்விருவரின் தற்கொலை மரணம்.
கொண்டா ரெட்டி , மலைக்குறவர் ஆகிய இரு சாதிகளும் பழங்குடியினர் சாதி பட்டியலில் 12 ,23 ஆகிய இடங்களில் இருக்கிறது, இருந்த போதும் பலமுறை அலையவிட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறார்கள் . இந்நிலையில் நேற்று முன்தினம் தீக்குளித்த வேல்முருகன் மரணம் அடைந்ததும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும் கூறியதாவது: வடமாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து குடியேறியவர்களுக்கும் ,நரிக்குறவர் சாதி சான்றிதழ் வழங்கப்படுவதால் தமிழக குறவர்களின் அடையாளம் அழிக்கப்படுகிறது, எனவே மலைக்குறவர் சமூகத்தினருக்கு ஒரே விதமான சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்றார்கள். மேலும் மரணம் அடைந்த வேல்முருகன் மனைவி சித்ராவிற்கு அரசு வேலை வழங்க வேண்டும், வேல்முருகனின் பிள்ளைகளுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும், அவரின் மகள்களின் படிப்பு செலவை அரசு ஏற்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன் வைத்தார்கள்,
இந்த நிலையில் வழக்கறிஞர் எஸ், சூரிய பிரகாசம் உயர்நீதி மன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் ஆஜராகி நரிக்குறவர் ஒருவர் சாதி சான்றிதலுக்காக விண்ணப்பித்து கிடைக்காத நிலையில் மன உளைச்சலுக்கு ஆளாகி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார் ,இதனை உயர் நீதிமன்றமே தானாக முன்வந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்றார். இதனை ஏற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் தானாக முன்வந்து உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கும் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றார்.
தற்கொலை செய்து கொண்ட வேல்முருகனின் மகனுக்கு என்ன காரணத்திற்காக சாதி சான்றிதழ் வழங்காமல் அதிகாரிகள் இழுக்கடித்தனர் என்று நீதிமன்றம் முன் தெரிவிக்க வேண்டும்,. அரசு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களையும் பெறுவதற்கு சாதி சான்றிதழ் மிகவும் முக்கியமாக இருக்கின்ற நிலையில் அதனை அதிகாரிகள் தராமல் ஏன் அலையவிட்டார்கள் என்று தெரிய வேண்டும், இது சம்பந்தமாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு இந்த வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதி முன்பாக பட்டியலிட உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார்.
நமது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறவர்கள் வீட்டில் உணவு உண்பது முக்கியமல்ல, குறவர்கள் தங்கள் உரிமைக்காக உயிர் விடுவதை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு சாதி சான்றிதழ் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.