மாநாடு 20 November 2022
தாய்மொழி தமிழை பாதுகாப்போம் ஆரம்பப் கல்வி முதல் ஆட்சி மொழி வரை தமிழில் வழங்க உறுதி ஏற்போம் என்ற உறுதிமொழி உடன் தனித்தமிழ் போராளி கரந்தை புலவர் கல்லூரியின் முன்னாள் முதல்வர், தஞ்சாவூரில் தமிழ்ப் புலவர் கல்லூரி நிறுவிய தனித்தமிழ் போராளி முனைவர் பி.விருத்தாசலனார் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று காலை 10 மணியளவில் தஞ்சாவூர் அருகே பள்ளியக்கரகாரம் பகுதியில் அமைந்துள்ள நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி ஆட்சி குழுத் தலைவர் முனைவர் மு.இளமுருகன் தலைமை வகித்தார். பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும், சி.பி.ஐ.எம். கட்சியின் மூத்த தலைவருமான டி.கே.ரெங்கராஜன் பொதுத்துறை நிறுவனங்கள் நேற்று, இன்று, நாளை என்ற தலைப்பிலும், நாகப்பட்டினம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஜி .கே. நிஜாமுதீன் மதச்சார்பின்மை என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்.
நிகழ்வில் பேசியவர்கள் ஐயாவைப் பற்றி நினைவுகூர்ந்ததாவது: முனைவர் விருத்தாசலனார் தமிழ் மீது அதிக பற்று கொண்டவர். ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை தமிழிலேயே பாடமாக்க வேண்டும் கற்பிக்க வேண்டும், பெற்றோர்களும் தமிழ் வழி கல்வியை ஆதரிக்க வேண்டும், பிள்ளைகளை தமிழ் வழியில் படிக்க வைக்க வேண்டும் என்று அயராது பாடுபட்டவர்.
புலவர் பட்டம் பெற்ற தமிழாசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு, சம்பள உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக போராடி பெற்று தந்தவர். கல்லூரி படிப்பு முடித்த மாணவர்களுக்கு வழங்கப்படும் பட்டங்களில் ஆங்கில மொழி மட்டுமே இடம் பெற்று இருந்தது , தமிழ் மொழியும். இடம் பெறச் செய்தவர், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பட்டங்களில் தமிழில் கையெழுத்து இட வைத்தவர்,
சென்னை பல்கலைக்கழகத்தின் இலட்சனையை தமிழ் மொழியில் இருக்க வேண்டும் என்று போராடி இலச்சனை அமைத்து தந்த பெருமைக்குரியவர் காவிரி டெல்டா மாவட்டங்களில் முதன் முதலாக தஞ்சாவூரில் தமிழ் வழி கல்வி ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியை நிறுவியவர். தனது இறுதி மூச்சு வரை தாய்மொழி தமிழைக் காக்கவும் போற்றி வளர்க்கவும், பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் வருங்கால தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கவும், இந்தி மொழி திணிப்பிற்க்கு எதிராக உறுதியான போராட்டத்தை முன்னெடுத்தவரும் , இறுதி மூச்சு வரை தனித்தமிழ் போராளியாக வாழ்ந்தவர் மறைந்த முனைவர் பி.விருத்தாசலனார் என்று நிகழ்வில் போற்றப்பட்டது.
முனைவர் வி.தமிழ்ச்செல்வன் அனைவரையும் வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் முனைவர் இரா கலியபெருமாள், முனைவர் வி.பாரி, மருத்துவர் வி.தென்றல் ஆகியோர் முன்னிலை வைகித்தனர், கல்லூரி தாளாளர் வி.விடுதலைவேந்தன் நன்றி கூறினார்.