மாநாடு 30 November 2022
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் 65 வயது உடைய மூதாட்டி போராட்டம் நடத்தியதில் பட்டுக்கோட்டை மணிக்கூண்டிலிருந்து அறந்தாங்கி முக்கம் வரை 1மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஏனாதி கிராமத்தை சேர்ந்தவர் 65 வயது உடைய மூதாட்டி சுசீலா , இவரின் கணவரும் மகனும் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர் என்று கூறப்படுகிறது, பிறகு ஏனாதியில் வாழ்ந்து வரும் சுசிலா தனக்கு இருந்த நிலத்தை விற்பனை செய்திருக்கிறார் அதில் கிடைத்த பணத்தை வைத்து அவருக்கு இருந்த கடன்களை அடைத்து இருக்கிறார் மீதம் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இருந்திருக்கிறது அந்த பணத்தை பட்டுக்கோட்டையில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் போட்டு அதில் வரும் வட்டியை வைத்து மீதமுள்ள காலத்தை கடத்தலாம் என்று முடிவு செய்து அந்த பணத்தை வங்கியில் போட்டதாக கூறப்படுகிறது,
இந்நிலையில் அதே வங்கியில் பணியாற்றி வரும் பாண்டித்துரை என்பவர் வங்கி தரும் வட்டியை விட அதிகமாக தான் மாத மாதம் உங்களுக்கு வட்டி தருகிறேன் என்று கூறி வங்கியில் இருந்த பணத்தை தன்னிடம் எடுத்து தாருங்கள் என்று கூறியதாகவும் அதன் பேரில் சுசிலா வங்கியில் போட்டிருந்த பணத்தை எடுத்து பாண்டித்துரையிடம் கொடுத்ததாகவும் தெரிய வருகிறது.
சில மாதங்களாக வங்கி ஊழியர் பாண்டித்துரை மூதாட்டி சுசிலாவிற்கு மாதம் கொடுக்க வேண்டிய வட்டி பணத்தையும் தரவில்லை, அசலையும் தரவில்லை என்று அந்த வங்கியின் மேலாளரிடம் சுசிலா முறையிட்டு இருக்கிறார், இந்தப் பிரச்சனையில் நான் எதுவும் தலையிட முடியாது என்று வங்கியின் மேலாளர் கூறிவிட்டதாக தெரிய வருகிறது, இதனால் ஆத்திரமடைந்த சுசிலா தன் உறவினர்கள் சிலரோடு வந்து வங்கியின் முன் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார், இதனால் பட்டுக்கோட்டை மணிக்கூண்டில் இருந்து அறந்தாங்கி முக்கம் வரை 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது, அதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை உதவி ஆய்வாளர் முத்துக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டி சுசிலாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் வங்கி ஊழியர் பாண்டித்துரை விரைவில் தான் கொடுக்க வேண்டிய பணத்தை கொடுப்பதாகவும் ஒப்புக் கொண்டிருக்கிறார், இதனை தொடர்ந்து மூதாட்டி நடத்தி வந்த போராட்டம் கைவிடப்பட்டிருக்கிறது, இதனால் அங்கு பரப்பரப்பு ஏற்பட்டது.