“ஒரு முதுமையின் முனகல்…..!?”
மேஜர். D.D.ஜெயச்சந்திரன், M.A.,B.Sc.,B.T.,C.L.I.S.,C.C.H.M.
மனிதன் தான் நினைப்பதை மற்றவருக்கும் சொல்ல நினைத்த போது தான் மொழி பிறந்தது.பிறந்த குழந்தை எப்போது வாய் திறந்து மழலை மொழியில் பேசும் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடத்திலும் உண்டு. மனிதன் வளர, வளர தன் எண்ணங்கள், தன் கருத்துக்கள், தன் திட்டங்கள் எதுவானாலும் மற்றவரோடு பேசும் போது பரிமாறிக்கொள்கிறான். அவ்வாறு பேசும் போது எண்ணப்பகிர்வுகள்/கருத்துப் பறிமாற்றங்கள் அறிவு எல்லைகளை விரிவு படுத்துகிறது. நிறைகள் பகிர்ந்தளிக்கப்படுகிறது. மட்டுமல்ல குறைகள் களைந்தெறியப்படுகிறது. நிறை, குறைகள் சமன் செய்யப்படும்போது மனிதம் முழுமை பெறுகிறது.
எனவே முழுமையாக மனிதனாய் வாழக் கருத்து பரிமாற்றம் தேவைப்படுகிறது.
ஆனால் கருத்துக்களையே பரிமாறிக்கொள்ள விரும்பாதவர்களைப்பற்றி!….?
மனிதன் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் வளர வேண்டும்.
வளர்ச்சி…. ஆம்! உடல் சார்ந்த வளர்ச்சி மட்டுமல்ல. மனம் சார்ந்த வளர்ச்சியும் தான்.
மன வளர்ச்சி என்பது உடல் வளர்ச்சியைக் காட்டிலும் சில சமயங்களில் முக்கியம் வாய்ந்ததாக அமைந்து விடுகிறது. நல்ல மனநிலையை ஒவ்வொரு மனிதனும் வைத்துக் கொள்ளை பழக வேண்டும்.
“வாய் விட்டுச்சிரித்தால்,நோய் விட்டுப்போகும் – இது பழ மொழி
“மனம் விட்டுப் பேசி னால், மனிதம் மேம்படும் – இது என் மொழி.
சிறு குழந்தையாய் இருக்கும் போது பெற்றோர் நல்லுணவோடு நல்லுணர்வையும் சேர்த்துக் கொடுக்கின்றனர். வாழ்வின் தாத்பரியங்களான -உறவுகள், உண்மைகள், கடமைகள், கல்வி, அறிவு, பாசம், அன்பு, தெய்வத்துவம், வாழ்க்கை, என்னும் இன்னும் பல.
ஒரு புறம் உறவின் எல்லைகள் விரிவுபடும்போது, மறுபுறம் அதன் வேறு சில எல்லைகள் சுருங்குவது ஏன்? விளக்கம் தரப்பட்டால் மட்டுமே விளங்கி கொள்ள முடியும். எல்லோருடைய அன்பும்,பாசமும் ஒரு காரணத்தைக் கொண்டு இருக்கும், ஆனால் பொற்றோரின் அன்பும், பாசமும் எந்தவொரு காரணத்தையும் கொண்டிருக்காது. அனைவரும் பெற்றோராகும் போது மட்டும் தான் அவ்வன்பை உணர முடியும். தன் குழந்தை பேசுவதற்கு முன்பே அதன் முகபாவங்களில் இருந்து அதன் எண்ணங்களையும், உணர்வுகளையும் புரிந்து கொண்டவள் தாய். கேட்காமலேயே அக் குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுத்தவள் தாய். வளர்ந்த பிறகும், வளர்ச்சியில் பல நிலைகளை கடந்து வரும்போதும் அதே கரிசனையோடு இருப்பவர்கள் தாயும்,தந்தையுமே. முக வாட்டத்தைக் கண்டே பிள்ளையின் மன நிலையை படிப்பவர்கள் தாயும், தந்தையுமே.அப்படிப்பட்ட பெற்றோர் பலரின் இன்றைய நிலை….!?
எனது மனக்குறையை கேட்க ஆல் இல்லையே! என்ற இன்றைய சுழலில் கேட்டும் சொல்லாது, கேட்பதே தவறென சினம் கொள்ளும் பிள்ளைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
முதுமை என்பது என்ன? நெஞ்சை நிமிர்த்தி வாழ்ந்த காலம், பெருமையுடன் வாழ்ந்த காலம், உதவிகள் செய்து வாழ்ந்த காலம் இவையாவும் முடிந்த நிலையில் தளர்ந்த கால்களும், நடுங்கும் கைகளும் , ஏங்கும் கண்களும், வாடிய மனமும் வளர்த்த பிள்ளைகள் உதவுமா என்று தவிக்கும் நிலை தான் முதுமை.
வசதிகள், வாய்ப்புகளைத்தேடி வாழ்க்கையின் மிகுந்த நேரங்களை,உறவுகளை மறந்து திரிகின்ற
இளைய தலைமுறைகள் அதிகமாகிவிட்ட காலம் இது. பெற்றோரை, உற்றார் உறவினரை மறந்து வாழ்ந்திடும் வாழ்க்கையில் எல்லாம் இருப்பது போல் தெரிந்தாலும் கடுகளவு கூட நிம்மதி இருக்காது.
பெற்றோருக்கு “அன்பு இல்லங்களிலும், முதியோர் இல்லங்களிலும்,காப்பகங்களிலும்” இடம் தேடி கொடுத்து விட்டு பகட்டாய் பல அறைகள் கொண்ட மாளிகை கட்டி வசதியாய் வாழ்கின்ற இள வயதினரே ! முதுமை அனைவருக்கும் வரும்.
ஓரு முதுமையின் முனுகல் என்ற தலைப்பில் மாநாடு நாளிதழில் வந்த கட்டூ ரை மிகவும் அருமை வாழ்வியல் அர்த்தங்களை நமக்கு எடுத்து சொல்லும் வண்ணம் அமைந்துள்ளது மாநாடு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் இந்த நாளிதழில் வரும் செய்திகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
நன்றி உங்கள் கருத்துக்கள் எங்களை ஊக்கப்படுத்துகிறது.தொடர்ந்து ஆதரவு தாருங்கள் அனைவருக்கும் பகிருங்கள்