மாநாடு 04 January 2023
கடந்த வாரம் சென்னை விருகம்பாக்கம் பகுதிக்கு உட்பட்ட தசரதபுரம் பேருந்து நிறுத்தத்தில் திமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியும், பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியனும், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.
பொதுக் கூட்டத்திற்கு பாதுகாப்பிற்கு வந்த 22 வயது பெண் காவலரிடம் திமுகவின் பொறுப்பாளர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு பெரும் தொந்தரவு செய்ததை தாங்க முடியாத பெண் காவலர் சத்தமாக கதறி அழுதுள்ளார் இதனை அடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களையும் பிடித்து விசாரித்ததில் அவர்கள் இருவரும் திமுகவின் பொறுப்பாளர்கள் என்பதும் ஒருவர் சாலிகிராமம் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய பிரவின் என்பதும் மற்றொருவர் சின்மயா நகர் பகுதியை சேர்ந்த 24 வயது உடைய ஏகாம்பரம் என்பதும் தெரிய வந்தது, இரண்டு திமுக பொறுப்பாளர்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரிக்க முற்பட்டபோது அதனை விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா தடுத்து நிறுத்தியதோடு இச்சம்பவத்தை பெரிது படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது பெரிய சலசலப்பை ஏற்படுத்தியதோடு ஊடகத்தில் பல்வேறுபட்ட விமர்சனங்களுக்கும் உட்படுத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று பாலியல் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பொறுப்பாளர்களும் திமுகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள், திமுகவில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டவுடன் காவலர்கள் அந்த இரண்டு இளைஞர்களையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் , குற்றம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவிலும் உள்ள பதிவுகளையும் சேகரித்து விசாரணை நடத்தி வருவதாகவும், அதன் அடிப்படையில் மூன்று பிரிவுகளில் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது.
திமுக எடுத்த இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது , இனிவரும் காலங்களில் இது போன்ற அருவருக்கத்தக்க நிகழ்வு நடைபெறாமல் இருக்க கடுமையான நடவடிக்கைகள் எடுத்து இது போன்றவர்களை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும். அதேபோல
மாற்றுக் கட்சியினர் தவறிழைத்தால் தூற்றுவதும், தனது கட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் தவறிழைத்தால் பாதுகாப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் போக்கினை மற்ற கட்சிகளும் நிறுத்தி , திருத்திக் கொள்ள வேண்டும்.