Spread the love

மாநாடு 09 January 2023

விவசாயிகள் அரும்பாடு பட்டு வெள்ளாமை செய்து எடுத்து வரும் நெல்மணிகளை, கொள்முதல் செய்யும் தற்காலிக பணியாளர்கள் இன்று தஞ்சாவூரில் உள்ள அலுவலகத்தின் முன் பொது மக்களிடம் பிச்சை எடுக்கும் போராட்டத்தை செய்ய விருப்பதாக அறிவித்திருந்தார்கள் .

இன்று காலை தஞ்சாவூர் மேம்பாலம் அருகே உள்ள அவர்கள் அலுவலகத்தின் முன் ஏராளமான தற்காலிக கொள்முதல் பணியாளர்கள் பொதுமக்களிடம் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது, என்ன நடந்தது? ஏன் இவர்களின் போராட்டம் என்பதை நாம் தெரிந்து மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக போராட்டம் நடக்கும் இடத்திற்கு சென்று இருந்தோம்.அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த பிரபு என்பவரிடம் ஏன் இந்தப் போராட்டம் என்று கேள்வியை முன் வைத்தோம் அதற்கு அவர்கள் கூறியதாவது: 

நாங்கள் விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்து அரசிடம் கொடுக்கும் பணியை செய்து வருகிறோம், அதற்கு மாத சம்பளமாக பத்தாயிரம் ரூபாய் பெறுகிறோம், இவ்வாறாக பணிபுரியும் தற்காலிக ஊழியர்களான எங்களை அரசு அதிகாரிகள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆட்படுத்துகிறார்கள், அது எவ்வாறு எனில் விவசாயிகளிடமிருந்து நெல்லை 17 விழுக்காடு ஈரப்பதத்தில் நாங்கள் கொள்முதல் செய்கிறோம்.

விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த நெல்லை 48 மணி நேரத்தில் ஏற்றி விட்டு விட்டால் பெரிய பாதிப்பு யாருக்குமே ஏற்படாது நிலை இவ்வாறு இருக்க, இங்கு நடப்பதோ நெல்லை கொள்முதல் செய்து மாதக்கணக்கில் இங்கேயே  இருக்கிறது அப்படி இருக்கும் நெல் ஈரப்பதம் காய்ந்து விடுவதால் எடை குறைகிறது, இதற்கான இழப்பீட்டுத் தொகையை தற்காலிக ஊழியர்கள் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் வற்புறுத்துகிறார்கள்.

நெல்லை கொள்முதல் செய்து வைக்க வேண்டியது தான் எங்கள் வேலை, அதை நாங்கள் திறம்பட செய்து வருகிறோம், இருந்த போதும் நிர்வாகம் செய்கின்ற காலதாமத காரணத்தினால் ஏற்படும் நட்டத்தை எங்கள் மேல் முழுமையாக போட்டு அதனை கட்டிய பிறகு தான் வேலை தருவோம் என்று அடாவடியாக சொல்வது எந்த வகையில் நியாயம். எங்களுக்கு மேலதிகாரிகளாக இருக்கும் கொள்முதல் அலுவலர் , துணை மேலாளர், உள்ளிட்டவர்கள் எங்களை அடாவடியாக உடனே பணம் கட்ட சொல்வதை எப்படி ஏற்க முடியும்? மாத கணக்கில் நெல் இங்கு தங்குவதற்கும், எங்களுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? அப்படி இருக்கையில் ஒரு மூட்டைக்கு 1 கிலோ நட்டம் ஏற்படுகிறது என்று வைத்துக் கொண்டால், ஒரு லாரிக்கு 420 கிலோ நட்டம் ஏற்படும். இந்த முழு நட்டத்தையும் தற்காலிக ஊழியர்களான எங்களையே இந்த அதிகாரிகள் கட்ட சொல்கிறார்கள்.

இவ்வாறாக ஏற்படும் இழப்பை உடனே கட்ட வேண்டும் என்று எந்த அரசாணையும் சொல்லவில்லை. அது மட்டுமல்லாமல் நிலுவைச் சான்றிதழ் கேட்கிறார்கள், தற்காலிக ஊழியர்களான எங்களிடம் இவ்வாறான சான்றிதழ் கேட்க தேவையில்லை, நிரந்தர பணியாளர்களிடம் கேட்க வேண்டியதை எங்களிடம் கேட்கிறார்கள், இவ்வாறான கொடுமை எல்லாம் கடந்த 2 ஆண்டுகளாக தான் மிகவும் அதிகமாக நடக்கிறது.

தமிழ்நாட்டில் பல இடங்களில் நடந்ததாக சொல்லப்பட்டாலும் கூட தஞ்சாவூரில் நாங்கள் இதை அனுபவித்து வருகிறோம், அதுவும் ஆயிரம் மூட்டை நெல் பிடிக்க வேண்டும் என்று ஆணை வந்ததும், நாங்கள் அதனை ஏற்று ஆயிரம் மூட்டையை பிடிக்கிறோம், ஆனால் அதை சேமித்து வைப்பதற்கு சரியான முறையான இடங்கள் கூட இல்லை, இதனால் பல இடங்களில் மழைகளில் நெல் மூட்டைகள் நனையும் நிலை இருந்ததையும், செய்திகளில் வந்ததையும் அனைவருமே அறிவார்கள். பிடிக்கப்படும் நெல் ஏற்றப்படாமல் இங்கே தங்குவதால் மற்ற விவசாயிகளின் நெல் மூட்டைகளை பிடிக்க முடியாத சூழலும் உள்ளது. இதனை எல்லாம் கவனத்தில் எடுத்துக் கொண்டு அரசும், அதிகாரிகளும் எங்கள் நிலையை உணர்ந்து இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும். இந்த இழப்பீட்டிற்கான தொகையை ஈடு கட்ட வழிவகை செய்ய வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறோம். இழப்பீட்டுத் தொகையை முழுவதும் கட்டினால் தான் வேலை என்று கூறியதால் எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை என்ற நிலையை எப்படி இவர்களுக்கு உணர்த்துவது என்று தெரியாத நிலையில் தான் நாங்கள் பொதுமக்களிடம் பிச்சை எடுக்கும் நிலையில் இருக்கிறோம் என்பதை உணர்த்துவதற்காக பிச்சை எடுக்கும் போராட்டத்தை இன்று அறிவித்திருக்கிறோம் என்றார்.

மற்றொரு தொழிலாளி கூறும்போது 50 சாக்கு அதிகாரிகள் கொடுத்துவிட்டு எங்களிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு சென்று விடுகிறார்கள், அதைப் பிரித்துப் பார்க்கும்போது 40 சாக்கு ஓட்டையாக இருக்கிறது, இப்படி இருக்கின்ற சாக்குக்கும், எலி கடித்து ஓட்டையாகும் சாக்கிற்கும் தற்காலிக ஊழியர்களான நாங்கள்தான் பணம் கட்ட வேண்டும் என்று அதிகாரிகள் சொல்வது கொஞ்சமாவது நியாயமா?

இப்படி ஒரே ஒரு கொள்முதல் நிலையத்தில் 38 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். இந்த நிலையில்தான் பொதுமக்களிடம் பிச்சை எடுக்கும் போராட்டத்தை அறிவித்து அலுவலகத்தின் வாசலில் உட்கார்ந்து இருக்கும் எங்களை யாருமே வந்து இதுவரை கேட்கவில்லை இந்த வேலை பார்ப்பது எங்களின் ஏழ்மை நிலையிில் தான் இந்நிலையில் இருக்கும் எங்களை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள் இந்த அதிகாரிகள் என்றார் தற்காலிக ஊழியர்.

வீடியோவை பார்க்க இங்கு தொடவும்:https://youtu.be/aHNvLVMKfwQ

61260cookie-checkதஞ்சையில் பிச்சை எடுக்க இதுவா காரணம் பொதுமக்கள் அதிர்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!