மாநாடு 10 February 2023
விவசாயிகளின் நிலையை எழுத நினைத்தால் எழுத்தில் அடங்காது சொல்ல நினைத்தால் சொல்லிமாளாது. விதைத்த விதையை பயிராக்கி அறுவடை செய்து களத்து மேட்டுக்கு கொண்டு வந்து உழைத்ததற்கான காசை கண்ணில் பார்ப்பதற்குள் எண்ணில் அடங்கா பிரச்சினைகளை ஒவ்வொரு நாளும் சந்தித்து வருகிறார்கள் விவசாயிகள்.
தற்போது கூட தஞ்சை உட்பட பல பகுதிகளில் காலம் தவறி பெய்த மழையால் பயிர்கள் சேதமானதை கண்டு கண்ணீரோடு வெம்பி நிற்கும் விவசாயிகளையும், விளைநிலங்களையும் பார்வையிடுவதற்காக மாநில அரசின் அமைச்சர் வந்திருந்தார், அதனைத் தொடர்ந்து மத்திய அரசின் குழுவும் ஆய்வு செய்வதற்காக வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அறுவடை செய்து வந்த நெல்லை கொள்முதல் செய்யாமல் ஏறக்குறைய 20 நாட்களாக ஏழை விவசாயியை காக்க வைத்து விட்டு அவருக்கு பின்னால் வந்த ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட ஆளுங்கட்சியினருக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களின் நெல்லை கொள்முதல் செய்து கொண்டிருப்பதாகவும் அதனை நாங்கள் நேரில் சென்று கண்டு, தடுத்து நிறுத்தி மன்னார்குடி கோட்டாட்சியரிடம் மனு கொடுத்துவிட்டு வந்தோம் என்கின்ற செய்தியை நமது மாநாடு செய்தி குழுமத்திற்கு தெரியப்படுத்தினார் இராம. அரவிந்தன்.
மேலும் என்ன நடந்தது, எங்கு நடந்தது, என்கின்ற தகவலை அவர் கொடுக்க நாம் அறிந்தோம் அத்தகவல்கள் பின்வருமாறு: மன்னார்குடி பகுதியில் கோட்டூர் அருகே உள்ள பாலையகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நெல் கொள்முதல் மையம் அமைந்திருக்கிறது, இந்த மையத்தில் விவசாயி ஏறக்குறைய 20 நாட்களாக அறுவடை செய்து வந்த நெல்லை விற்றுவிட்டு செல்வதற்காக காத்து கிடந்திருக்கிறார், ஆனால் இவரின் நெல்லை பிடிக்க காலம் தாழ்த்தி விட்டு இவருக்கு பின்னால் வந்த ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதாக இராம.அரவிந்தனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது,
அதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் கையூட்டு,ஊழல் ஒழிப்பு பாசறையின் மாநில தலைவராக இருக்கின்ற இராம.அரவிந்தன் பாலையகோட்டை கொள்முதல் நிலையத்திற்கு நேரில் சென்று இருக்கின்றார், அப்போது அங்கு நெல் பிடிக்கப்படுபவர் என்று குறிப்பிட்டு இருந்த ஏட்டில் தமிழ்மணி என்ற பெயர் இருந்ததாகவும், நெல் பிடிக்கப்படும் நபரின் பெயரை கேட்டதற்கு சொல்ல தயங்கியதாகவும்
அதன் பிறகு வலியுறுத்தி கேட்ட பிறகு பெயரை கூறினாராம், ஏட்டில் குறிப்பிட்டிருந்த நபர் இவர் இல்லை என்பதும், மாற்று நபர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களின் நெல்லை முதலில் கொள்முதல் செய்வது தெரிய வந்திருக்கிறது,
இந்தப் போக்கினை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திவிட்டு அங்கிருந்து மன்னார்குடி கோட்டாட்சியரிடம் மனு கொடுப்பதற்காக நாங்கள் வந்தோம் அவர் இல்லாததால் அவரின் நேர்முக உதவியாளரிடம் மனுவை கொடுத்துவிட்டு எங்களது கோரிக்கையையும் கூறிவிட்டு வந்தோம் என்றார் இராம.அரவிந்தன்.
உழவர்கள் அனைவரும் ஒருவரே என்றுணர்ந்து பண்போடு பணிபுரிய வேண்டும் பணியாளர்கள், அதை விடுத்து ஆளும் கட்சிக்காரர்கள் என்பதற்காகவும் ,ஆண்ட கட்சிக்காரர்கள் என்பதற்காகவும் ,ஆளப்போகும் கட்சிக்காரர்கள் என்பதற்காகவும் தனித்தனி முக்கியத்துவம் கொடுத்து உழவர்களின் ஒற்றுமையை குலைக்க யாருமே முயலக் கூடாது.