Spread the love

மாநாடு 10 ஏப்ரல் 2023

ஒரு மாநிலத்தின் முதல்வர் மண் மீதும் மக்கள் மீதும் அக்கறை கொண்டு பேரன்போடு நேசித்து ஆட்சி செய்தால் மக்கள் எவ்வளவு வளம் பெற்று நலமோடு வாழ முடியுமோ அதற்கு நிகராக ஒவ்வொரு மாவட்டத்தின் ஆட்சியர்கள் அந்த மாவட்டத்தின் மீது மிகுந்த பற்று கொண்டு நிர்வாகம் செய்தால் எவ்வளவு நன்மைகள் மக்களுக்கு கிடைக்கும் என்பதை ஆரவாரம் இல்லாமல் ஆடம்பரம் செய்யாமல் அடிதட்டு மக்களுக்கு உதவி செய்து அம்மக்களின் வாழ்வு சிறக்க பல்வேறு திட்டங்களை தீட்டி அதனை திறம்பட செயல்படுத்தி காட்டி வருகிறார் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை பற்றி முதலில் சுருக்கமாக அறிவோம். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் இவரின் பெற்றோர்கள் கல்லூரி பேராசிரியர்களாக பணியாற்றி இருக்கிறார்கள். தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் 2003 ஆம் ஆண்டு குரூப் 1 தேர்வு எழுதி வெற்றி பெற்று கன்னியாகுமரியில் தனது பணியை தொடங்கி இருக்கிறார்.

2004 ஆம் ஆண்டில் இருந்து 2006 ஆம் ஆண்டு வரை உசிலம்பட்டி ஆர்டிஓ வாக பணியாற்றியிருக்கிறார். அதன் பிறகு 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற மதுரை மேற்கு இடைத்தேர்தல் அதிகாரியாகவும் இருந்திருக்கிறார் மதுரை ஆர்டிஓவாகவும், பொறுப்பு கலெக்டர் பணியிலும் இருந்திருக்கிறார். 

2012 ஆம் ஆண்டு ஐஏஎஸ் முடித்து பதவி உயர்வு பெற்று தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக இருந்திருக்கிறார். அதன் பிறகு சென்ற இடங்களில் எல்லாம் திறம்பட பணியாற்றியிருக்கிறார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக வருவதற்கு முன்பு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்திருக்கிறார். இந்த ஊர் பொதுவாகவே வறட்சியான பகுதி என்பதால் அந்தப் பகுதிகளில் விவசாயிகள் மிகவும் துன்பப்பட்டு அச்சத்துடனே வேளாண்மை செய்து கொண்டிருந்த நேரத்தில் அந்த விவசாயிகளை ஊக்கப்படுத்தி ஒருபோகம் வேளாண்மை செய்து கொண்டிருந்த விவசாயிகளுக்கு உறுதுணையாக நின்று இரண்டு போகும் சாகுபடி செய்வது குறித்து ஆலோசனைகள் கொடுத்து ஊக்கப்படுத்தி இரண்டு போகம் விவசாயம் செய்ய வைத்திருக்கிறார் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

இவ்வாறாக தான் சென்ற இடத்தில் எல்லாம் நின்று பெயர் சொல்லும் அளவிற்கு பணியாற்றி வந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்தவர் தஞ்சை மாவட்டம் விவசாய பூமி நான் எப்போதும் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து துணை நிற்பேன் என்றார்.

என்னதான் மாவட்ட ஆட்சியராக இருந்தாலும் அவருக்கும் பல்வேறு வகையில் பல்வேறு நெருக்கடிகள் வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு வர தான் செய்யும் என்பது பொது வாழ்க்கையை உணர்ந்த அனைவருக்குமே தெரியும். அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு மிகவும் சாதுரியமாக தனது பதவியை வைத்து தாழ்ந்து கிடப்பவரை தாங்கிப் பிடிக்கும் வேளையில் தொடர்ந்து ஈடுபட்டு தொண்டாற்றி வருகிறார் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

அதை நானே பலமுறை பார்த்திருக்கிறேன் . ஊடகச் செய்திகள் மூலம் படித்திருக்கிறேன் ஒரு ஆண்டுக்கு முன்பு ஒரு அம்மா என்னிடம் தொடர்பு கொண்டு தனக்கென்று தற்போது யாரும் இல்லை தங்குவதற்கு ஒரு வீடும் இல்லை என்ற தன் சூழ்நிலையை எடுத்துச் சொல்லி உதவி கேட்டார். அவர் பிரபல முக்கிய கட்சியில் வார்டு தேர்தலில் முன்பு நின்று வென்றவர் என்றும் ஆனால் அந்தக் கட்சியில் தனது கணவர் இறந்த பிறகு எதுவும் செய்யவில்லை என் மகனும் இறந்து விட்டார் இப்போது எனக்கு உதவ யாரும் இல்லை என்று தன் சூழலை சொல்லி எனக்கு ஏதாவது ஒரு வழி காட்டுங்கள் என்றார் அந்த வயது முதிர்ந்த பெண்மணி. எனக்கு உடனடியாக நினைவிற்கு வந்தது தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தான் தங்களுக்கு உடனடியாக ஒரு வீடு வேண்டும் அல்லவா உடனடியாக என்னிடம் கூறியதை எழுத்துக்கள் மூலம் நமது மாவட்ட ஆட்சியருக்கு தெரியப்படுத்துங்கள் மற்றவை தன்னால் நடக்கும் என்று ஆறுதல் கூறினேன்.

அதேபோல அவர் செய்ததாகவும் தற்போது அவருக்கு வீடு தர ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் சில நாட்களுக்கு முன்பு என்னிடம் கூறினார். அப்போதே நமது மாவட்ட ஆட்சியரைப் பற்றி ஒரு செய்தி செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன் ஏனென்றால் கடமையை கச்சிதமாக செய்து கொண்டிருக்கும் இவர் போன்ற அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பக்கத்தை ஒதுக்கி செய்தி செய்வதால் மற்ற அதிகாரிகளும் மக்கள் நலனில் அக்கறை செலுத்தி பணி செய்வார்கள் என்று நம்புகிறேன்.

ஒருவேளை எவ்வேளையும் செய்யாத அதிகாரிகளை பல பக்கங்கள் ஒதுக்கி செய்திகள் செய்து மக்களிடம் கொண்டு சேர்க்கும் வேலையை மாநாடு செய்தி குழுமம் உறுதியாக செய்யும் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொண்டு தொடர்கிறேன்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வந்த பிறகு ஆதரவற்றவர்களுக்கு வீடு கட்டி கொடுத்திருக்கிறார். மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார் இலவச வீட்டு மனை பட்டா கொடுத்திருக்கிறார் இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி கொடுத்திருக்கிறார் இது போன்ற பல்வேறு மக்கள் நல பணிகளை மனதார செய்து கொண்டிருக்கிறார்.

மேலும் தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ரெட்டவயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கண்ணையா செல்வி தம்பதியினர் இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றார்கள். மூத்த மகள் பாண்டி மீனா என்பவர் நர்சிங் படித்துள்ளார். இரண்டாவது மகள் பாண்டீஸ்வரி என்பவர் மாற்றுத்திறனாளி இவர்களின் தந்தை கண்ணையா 2021 ஆம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு மரணம் அடைந்திருக்கிறார் இவர்களின் தாய் செல்வி கடந்த ஜூன் மாதம் 2022 ஆம் ஆண்டு உயிரிழந்திருக்கிறார். அதன் பிறகு இந்த சகோதரிகள் சேதம் அடைந்த நிலையில் இருந்த தங்களது கூரை வீட்டில் வசித்து வந்திருக்கிறார்கள்.

இந்த நிலையை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் வாட்ஸ் அப் மூலமாக தங்கள் வீட்டின் புகைப்படத்தையும் இணைத்து அனுப்பி எங்களுக்கு வாழ்வதற்கு வீடு வேண்டுமென்று உதவி கேட்டு இருக்கிறார் பாண்டி மீனா. இதனையொட்டி பாண்டி மீனா வீட்டிற்கு நேரில் சென்று பார்வையிட்ட பிறகு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் . பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2.40 லட்சம் ரூபாய் பணத்திற்கு ஏற்பாடு செய்து தன் விருப்ப நிதியில் இருந்து 1.50 லட்சம் ரூபாய் கொடுத்து தன்னார்வலர்களையும் இணைத்து நிதி கொடுக்கும் படி கேட்டிருக்கிறார். அதன்படி பேராவூரணி லயன்ஸ் கிளப் சார்பில் 1.50 லட்சம் ரூபாய் நிதி கிடைக்கப்பெற்று இருக்கிறது.

முழுவதுமாக வீடு கட்டும் பணி முடிவடைந்த பிறகு 2022 ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி காலை பாண்டி மீனாவின் வீட்டிற்கு சென்ற தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் புதிய வீட்டினை பாண்டி மீனாவிடம் ஒப்படைத்து

வீட்டில் ரிப்பன் வெட்ட வைத்து குத்து விளக்கு ஏற்ற வைத்து அந்த ஏழை குடும்பத்தினர் மனம் மகிழும் படி செய்திருக்கிறார் அதோடு பாண்டி மீனாவுக்கும் அவரது தங்கைக்கும் புத்தாடைகளும் வழங்கி இருக்கிறார்.

அதேபோல இன்னொரு நிகழ்வும் கூட இந்நேரத்தில் நினைவு கூறலாம் அதாவது பேராவூரணி ஒன்றியம் களத்தூர் கிராமத்தில் 21 வயது உடைய சந்தோஷ் குமார் என்பவரும் 17 வயதுடைய விஷ்ணுவர்தன் என்பவரும் கருணாநிதி சரளா தம்பதிக்கு மகன்களாக பிறந்தனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்களின் பெற்றோர்களான தந்தை கருணாநிதியும் தாய் சரளாவும் மரணம் அடைந்திருக்கின்றார்கள் அதன்பிறகு இவர்களில் பாட்டியான 65 வயது உடைய ரேணுகா வீட்டில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் பாட்டியின் வீடு முழுவதுமாக சிதைந்து வீட்டுக்கான அடையாளமே இல்லாமல் சுவர்கள் விழுந்த நிலையில் இருந்திருக்கிறது. தங்களின் பரிதாப நிலையை படம் பிடித்து புதிய வீடு கட்டி தர வேண்டும் என்ற கோரிக்கையை இணைத்துவாட்ஸ் அப்பில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு அனுப்பி இருக்கிறார்கள். இவர்களுக்கு முதல்வரின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து தன் விருப்ப நிதியை வழங்கி தன்னார்வலர்களையும் நிதி வழங்க செய்து அதன் மூலம் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தரமான வீட்டைக் கட்டி அந்த ஏழை சகோதரர்களிடம் ஒப்படைத்தார் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர். 

இவ்வாறு பல்வேறு நற்காரியங்களை தொடர்ந்து செய்து வரும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை தட்டிக் கொடுத்து பாராட்டி மகிழ்கிறது மாநாடு செய்தி குழுமம்.

மற்ற அதிகாரிகளும் காரணம் சொல்லாமல் கையில் இருக்கும் அதிகாரத்தை வைத்து கச்சிதமாக கடமையை செய்தால் அவர்களையும் பாராட்ட காத்திருக்கிறது மாநாடு செய்தி குழுமம்.

68520cookie-checkமக்கள் போற்றும் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!