மாநாடு 12 ஏப்ரல் 2023
இப்போதெல்லாம் எது போலி, எது நிஜம் என்று அறிய முடியாத அளவிற்கு நாம் பயன்படுத்தும் பொருட்களிலும், அன்றாடம் நாம் உண்ணும் உணவுகளிலும் என பெரும்பாலானவைகளில் நீக்கமற நிறைந்து கலந்து இருக்கிறது போலிகள்.
அடிப்படையாக கல்வி , மருத்துவம் , உணவுகள் ஆகியவற்றில் கலப்படமோ, போலிகளோ இருந்தால் அங்கு வாழ்கின்ற மக்கள் நிம்மதியாக வாழ முடியாது என்பதே நிதர்சனம்.
இந்நிலையில் சமீப காலமாக அதிக அளவில் மருத்துவம் பார்க்கின்ற மருத்துவர்கள் போலி என்று தெரியவந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள் என்கிற நிலையில் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள் . மருத்துவரையோ அவர்கள் கொடுக்கும் மருந்தையோ சாமானிய மக்கள் ஆய்வு செய்ய இயலாது என்கிற நிலையில் இது போன்ற போலி மருத்துவர்கள் அதிகரித்து இருப்பதும் அவர்களிடம் மக்கள் மருத்துவம் பார்க்கச் செல்வதும் மிகப்பெரிய ஆபத்தான விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்தும் பொதுமக்களை காக்கும் பொருட்டு அதிகாரிகளும், அரசுகளும் இவ்வாறான போலி மருத்துவர்கள் வேறு எங்கெங்கு இருக்கிறார்களோ அவர்கள் அனைவரையும் கண்டு கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
சில நாட்களுக்கு முன்பு திருவாரூர் மாவட்டத்தை சுற்றி பல இடங்களிலும் இவ்வாறான போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களில் சிலர் ஹோமியோபதி பயின்றுவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்ததாகவும் தெரிய வருகிறது. சிலரோ மருத்துவம் படிக்காமல் மருந்தாளுநர் பயின்றுவிட்டு மக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்ததாகவும் தெரிய வருகிறது. அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து பூந்தோட்டம் , நன்னிலம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சில போலி மற்றவர்களை கண்டு கைது செய்திருக்கின்றனர் காவலர்கள் அவர்களின் விவரம் பின்வருமாறு :
பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய மாரியப்பன் ஹோமியோபதி படித்துவிட்டு மக்களுக்கு ஆங்கில மருத்துவம் செய்து வந்தது ஆய்வில் தெரிய வந்ததையடுத்து கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
கொல்லுமாங்குடி அருகில் இருக்கும் சிறு புலியூர் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய சிவகுமார் என்பவர் ஹோமியோபதி பயின்றுவிட்டு மக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்ததால் அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
நன்னிலம் அருகேயுள்ள மாப்பிள்ளை குப்பம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் மருந்தாளுநருக்கு படித்துவிட்டு மருந்தகம் நடத்தி வந்தவர் மக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்திருக்கிறார் அவரையும் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றார்கள்.
நாச்சிகுளத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம், இடும்பாவனம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், பெருக வாழ்ந்தான் பகுதியைச் சேர்ந்த சிவகுருநாதன், அம்மனூர் சிவசுப்பிரமணியன் , திருப்பத்தூர் துரைராஜ், திருத்துறைப்பூண்டி குமார், சவுரி ராஜ் உள்ளிட்டவர்களையும் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து இருக்கிறார்கள்.
இதுபோலவே சில நாட்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் ஓமலூரில் ஆங்கில மருத்துவ படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்த இரண்டு போலி மருத்துவர்களை காவல்துறையினர் கைது செய்தார்கள் என்பதும் இவர்கள் மீது ஊரக மற்றும் மருத்துவத்துறை இணை இயக்குனர் சாந்திக்கு புகார் வந்ததையொட்டி கொட்டையூர் பகுதியில் உள்ள முனுசாமி என்பவர் கிளினிக்கில் சாந்தி நேரில் ஆய்வு செய்ததில் மருத்துவம் படிக்காமல் மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்திருக்கிறது அதன்பிறகு பெண்ணாகரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருக்கிறார் பென்னாகரம் காவலர்கள் கைது செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான போலி மருத்துவர்களை ஒழிக்க அரசு செய்ய வேண்டியது எல்லாம் அரசு நடத்தும் மருத்துவமனை மிகவும் தரமாகவும், சரியாகவும் மருத்துவர்கள் பற்றாக்குறை இல்லாமலும் மக்களுக்கு சிறந்த மருத்துவம் கிடைத்தாலே பொதுமக்கள் தனியார் மருத்துவர்களையும், இதுபோன்ற போலி மருத்துவர்களையும் நாடிச் சென்று ஏமாற மாட்டார்கள் என்பதை அரசு உணர்ந்து இனியாவது அனைவருக்கும் அனைத்து மருத்துவமும் அரசிடமே இலவசமாக எந்நேரமும் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்.
போலிகளை ஒழிக்க வேலி அமைக்கும் அரசு பொறுத்திருந்து பார்ப்போம்.