மாநாடு 27 March 2024
வேலியே பயிரை மேய்ந்த கதை என்பது பழைய பழமொழி “வேகாத இட்லி யாருக்கும் எப்படி பயன்ப்படாதோ அதேபோல தான் தஞ்சாவூரில் பல அதிகாரிகளும் இருக்கிறார்கள் என்பதை நாள்தோறும் நடந்து செல்பவர்களும் பார்த்தும் பார்க்காதது போல பார்ப்பதை கடந்து செல்பவர்களும் உணர்ந்து கடந்து செல்கிறார்கள்.
ஆட்சியும் அதிகாரமும் மக்களுக்காக மக்களுக்கு சேவை செய்யவே மக்கள் பணத்தால் உருவாக்கப்பட்டது என்பதை மறந்து தாங்கள் மன்னர் போல நடக்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் வயித்தை கழுவ சம்பளம் கொடுக்கும் பொதுமக்களை சர்வ சாதாரணமாக புழுக்களாக புறந்தள்ளிவிட்டு தனக்கானதை எப்படி சேர்க்க வேண்டும் யார் மூலமாக சேர்க்க வேண்டும் என்கிற நோக்கத்தில் மட்டுமே ஆள்பவர்களும் அவர்களுக்கு துணையாக அதிகாரிகளும் இருந்து வருவதை பெரும்பாலான இடங்களில் நன்கு காண முடிகிறது.
அதே போல தான் தஞ்சாவூர் மாநகராட்சியும், மாநகராட்சி அதிகாரிகளும் ஊழியர்களும் இருப்பதாக தெரிவிக்கிறார்கள். தஞ்சாவூர் மாநகராட்சி இவர்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறதா? அல்லது இவர்கள் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள்? என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.
தஞ்சாவூர் நகராட்சியை மாநகராட்சியாக மேம்படுத்த எழில் மிகு நகரமாக வார்த்தெடுக்க பல்லாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது அதன்படி பூங்காக்கள் ஆட்களே இல்லாத இடங்களில் கட்டப்பட்டு அத்தனை கோடி ரூபாயும் அபேஸ் செய்யப்பட்டு இப்போது பூங்காக்கள் புதர்கள் மண்டி சமூக விரோதிகளுக்கு சில காலம் சரக்கு அடிக்கவும் காசு இல்லாத நேரத்தில் அங்குள்ள இரும்புகளும் , மீதமுள்ள பொருட்களும் மது வாங்க காசுக்காக விற்கப்பட்டு (Tasmac) கவர்மெண்ட் கடைக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று அங்கு அருகில் உள்ள மக்கள் கூறுகிறார்கள் அதற்கு சாட்சியாக அந்தப் பூங்காக்களின் காட்சிகளே கண்முன் நிற்கிறது.
இதுபோன்ற எண்ணற்ற அவலங்களை மக்களின் பணம் வீணடிக்கப்பட்டு யார் யார் வீட்டுக்கு சென்று இருக்கிறது என்பதை அரசியல் மாநாடு இதழில் முழுமையாக விரிவாக செய்தி வெளியிடுகிறோம் படித்துப் பகிருங்கள்.
இப்போது முக்கியமாக சாலை என்பது மக்கள் பயணிப்பதற்காக மக்களின் வரிப்பணத்தை ஒதுக்கி போடப்படுவது, மக்கள் விபத்துக்கள் ஏற்படாமல் நடந்து செல்வதற்காக தான் சாலை ஓரங்களில் நடைபாதை போடப்படுகிறது. இவ்வாறான நடைபாதைகள் நகராட்சியில் மட்டுமல்லாமல் மாநகராட்சியில் மிகவும் நேர்த்தியாகவும் முறைப்படுத்தியும் திட்டமிட்டு மேம்படுத்தியும் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தியும் போடப்படும்.
அதன்படி தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் , அரசு மகப்பேறு மருத்துவமனை, அரசு அலுவலகங்கள், வங்கிகள், தனியார் வங்கிகள், அலுவலகங்கள், நிறுவனங்கள், சூழ்ந்துள்ள பகுதிகளில் பல ஆண்டுகளாக இருந்த கட்டிடங்கள், பல கடைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை பல நெருக்கடிகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சாமல் தானே களத்தில் நின்று அகற்றி சாலைகளை விரிவுபடுத்தி தமிழ்நாட்டில் எந்த ஒரு மாநகராட்சியிலும் , எந்த ஒரு மாநகராட்சி ஆணையரும் எடுக்கத் துணியாத அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி எழில் மிகு நகராக தஞ்சாவூரை மாற்ற அரும்பாடு பட்டார் தஞ்சாவூர் மாநகராட்சியின் முன்னாள் ஆணையர் சரவணகுமார்.
அதன்படி தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் இருந்த ஆக்கிரமிப்புகளும் பல்வேறு சாலைகளில் இருந்து ஆக்கிரமிப்புகளும் அதிரடியாக அகற்றப்பட்டு சாலைகள் விரிவாக்கப்பட்டு மக்களுக்கு பயன்பட தொடங்கிய நேரம் … தஞ்சாவூர் மாநகராட்சி தமிழ்நாட்டின் தலைசிறந்த மாநகராட்சி ஆக உருவெடுக்க தொடங்கிய நேரத்தில்…
கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு ஏற்ப அந்த நேர்மையான அதிகாரியும் சிலரின் ஆலோசனைகளை கேட்டு நடைமுறைப்படுத்த முற்பட்டார். அன்றே அதை அரசியல் மாநாடு இதழிலும் மாநாடு 7592 youtube சேனலிலும் செய்திகள் வெளியிட்டு தொடர்ந்து சுட்டி காட்டி வந்தோம் அதன் பிறகு அவர் தஞ்சாவூரில் இருந்து மாறுதலாகி கரூரில் மாநகராட்சி ஆணையர் ஆனார். அங்கும் தஞ்சாவூரில் இறுதிக்கட்டத்தில் இருந்த மாநகராட்சி ஆணையராக காட்டிக்கொள்ள முயன்றதால் 1 மாதம் கூட மாநகராட்சி ஆணையராக தாக்குப் பிடிக்க முடியாமல். வேறொரு இடத்திற்கு மாநகராட்சி உதவி ஆணையராக மாறுதலானார்.
பல்வேறு நெருக்கடிகளுக்கு பிறகு தஞ்சாவூர் மாநகராட்சி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலைகள் பல இடங்களில் போடப்படவில்லை என்றாலும் சாலைகள் போட அனைத்து ஏற்பாடுகளையும் முன்னாள் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் சரி செய்து வைத்திருந்தார் ஆனால் இப்போது அந்த இடங்கள் எல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது பல சாலைகளிலும் பொதுமக்கள் பயணிக்கவே முடியாத நிலையில் சாலை நடுப்பகுதி வரை கடைகள் போடப்பட்டுள்ளது. சில இடங்களில் கட்டிடங்கள் கட்டவும் தயாராகி வருவதாகவும் செய்திகள் வருகிறது.
அதன்படி தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் சுற்றியுள்ள பகுதிகளில் குறிப்பாக அண்ணா சாலை, ஜுபிடர் தியேட்டர் சாலை நடைபாதைகளில் இந்தப் பகுதி வியாபாரம் செய்ய தடை செய்யப்பட்ட பகுதி என்று எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டிருக்கும் இடங்களில் தொடங்கும்
ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து ஜுபிடர் தியேட்டரை எல்லாம் தாண்டி தொடர்கிறது. நடைபாதையில் கடைகள் ஆக்கிரமித்து இருப்பதால் மக்கள் நடைபாதையில் நடக்க முடியாமல் சாலையில் இறங்கி நடக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் இந்த பகுதிகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும், வேலைக்குச் செல்லும் மகளிர்களும், வயது முதிர்ந்தவர்களும் அடிக்கடி விபத்துக்குள்ளாவது தொடர் நிகழ்வாகிறது. சாலை நடைபாதைகளில் கடைகளை ஆக்கிரமித்து போட்டிருப்பதை கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு மாநகராட்சி பில் கலெக்டர்கள் மூலம் கவனிக்கப்படுவதாகவும் அந்த பணம் மாநகராட்சி ஆணையர் முதல் அடி நிலையில் இருக்கும் மாநகராட்சி ஊழியர்கள் வரை பங்கு பிரித்துக் கொள்வதாகவும் கூறப்படுகிறது. காவல்துறையும் கண்டுகொள்ளாமல் இருக்கலாமா என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
மேலும் இவ்வாறாக நடைபாதையை ஆக்கிரமித்து இருப்பவர்கள் கட்டிடங்களை கட்ட திட்டமிட்டு இருப்பதாகவும் அதற்கும் இவ்வாறான அதிகாரிகள் காதையும், கண்ணையும் பொத்திக்கொண்டு காசை மட்டும் வாங்கிக் கொண்டு கண்டுகொள்ளாமல் இருப்பார்கள் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள நடைபாதையை ஆக்கிரமித்து பழக் கடைகள் நடத்தி வருபவர்கள் கிராமத்தில் இருந்து வரும் ஏழை எளியவர்களையும் வயது முதிர்ந்தவர்களையும் அநாகரிகமாக திட்டுவதாகவும் கூறப்படுகிறது. தரமான பழங்களாக இல்லையே என்று பாமரத்தனமாக உண்மையை கேட்டால் போதுமாம் தமிழில் உடனடியாக அர்ச்சனையை தொடங்கி விடுவார்களாம் பழ வியாபாரம் செய்பவர்கள். எடையும் எப்போதுமே யார் சென்றாலும் குறைவாக தான் இருக்குமாம் இதையெல்லாம் கவனிக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் , நேரமில்லாமல் வேலை செய்கிறார்களா அதிகாரிகள் என்பதே அரசியல் மாநாடு ன் அறம் சார்ந்த கேள்வி.
குறிப்பு: ஏற்கனவே தஞ்சாவூர் யாகப்பா நகர் அருகில் குழந்தை இயேசு கோவிலுக்கு நடுவில் வெளிமாநிலத்தவர்கள் போட்டிருந்த கடைகளையும், பேட்டியையும் மாநாடு youtube சேனலில் செய்தியாக வெளியிட்டு இருந்தோம் ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் அவர்கள் மீது எடுக்கப்படாமல் கடைகள் அப்படியேதான் இருப்பதாக தெரிய வருகிறது. அதையும் பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள ஆக்கிரமிப்புகளைப் பற்றியும் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரியிடம் இன்று கேட்டோம் தேர்தல் நடப்பதால் அந்த வேலையில் இருக்கிறோம் விரைவில் அனைத்தையும் அகற்றி விடுகிறோம் என்றார்.
குழந்தை இயேசு கோயில் அருகில் உள்ள ஆக்கிரமிப்புகள் செய்தி வெளியிட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது ஏன் அதை செய்யவில்லை என்று கேட்டோம் அப்படியெல்லாம் இல்லை சார் அதை அகற்றி இருப்பார்கள் மீண்டும் ஆக்கிரமிப்பாளர்கள் அந்த இடத்தில் கடைகள் போட்டிருப்பார்கள் என்றும் இப்போது தேர்தல் வேலை நடைபெறுவதால் விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றார் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி.ஆனால் அந்த இடம் ஒரு நாள் கூட அகற்றப்படவே இல்லை என்பது தெரிய வருகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியில் இருப்பவர்களும், தேர்வாகி அதிகாரிகளாக வருபவர்களும் ஒரு காட்சியை கூட மாற்றவில்லை என்றால் உங்களுக்கெல்லாம் ஆட்சி எதற்கு? அதிகாரம் எதற்கு ? என்கிறார்கள் அறம் சார்ந்த சமூக ஆர்வலர்கள்.
ஆட்சியாளர்களும் ,அதிகாரிகளும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவார்களா ? சும்மா பிதற்றுவார்களா ? பார்ப்போம்!
விரிவான செய்திகளுக்கு அரசியல் மாநாடு சமூக விழிப்புணர்வு புலனாய்வு மாத இதழை படியுங்கள்.
வீடியோ லிங்க்: https://youtu.be/fPaeD9kGzOY