மாநாடு 15 March 2025
உழைக்காமல் லஞ்சம் வாங்கிய பணத்தை காப்பாற்றுவதற்காக வியர்க்க விருவிருக்க வியர்வை சொட்ட சொட்ட ஓடி ஒழிவதற்காக குளத்தில் குதித்த விஏஓவை விடாமல் விரட்டி பிடித்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் பேரூர் அருகே ஆலாந்துறை பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணசாமி இவர் வாரிசு சான்றிதழ் கேட்டு மத்துவராயபுரம் கிராம நிர்வாக அதிகாரி வெற்றிவேலை அணுகி உள்ளார். விஏஓ வெற்றிவேல் வாரிசு சான்றிதழ் வழங்க 5000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது அதற்கு முதற்கட்டமாக விவசாயி கிருஷ்ணசாமி 1000 ரூபாய் பணத்தை ஏற்கனவே வெற்றிவேலிடம் வழங்கிதாகவும் பாக்கி பணத்தை நேற்று தருவதாக தெரிவித்திருக்கிறார் . கிராம நிர்வாக அதிகாரி ( விஏஓ)
விவசாயியை புட்டுவிக்கி ரோட்டிற்கு வந்து பாக்கி பணத்தை தரும்படி கூறி உள்ளார். இதனிடையே விவசாயி கிருஷ்ணசாமி கோவை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் கண்காணிப்பாளர் திவ்யா மற்றும் காவலர்கள் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வழங்கி இருக்கிறார்கள். இந்த நோட்டுகளை பெற்றுக் கொண்ட கிருஷ்ணசாமி கிராம நிர்வாக அதிகாரி கூறியபடியே நேற்று மாலை சுண்டக்காமுத்தூர் சாலையில் உள்ள புட்டுவிக்கி பகுதிக்கு சென்று உள்ளார். அங்கு அவர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வெற்றிவேலிடம் வழங்கியுள்ளார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு காவலர்கள் வெற்றிவேலை பிடிக்க முயன்றுள்ளார்கள் . காவலர்களை கண்டதும் சுதாரிக்க தொடங்கிய வெற்றிவேல் அங்கு இருந்து இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடி உள்ளார்.
அப்போதும் விடாமல் திரைப்படத்தில் வருவது போல தொடர்ந்து காவலர்கள் துரத்தி வருவதை அறிந்த வெற்றிவேல் பேரூர் குளத்தேரி சாலையில் வாகனத்தை நிறுத்திவிட்டு பேரூர் குளத்தில் குதித்துள்ளார். லஞ்சமாக வாங்கிய பணத்தையும் குளத்தில் வீசி எறிந்து உள்ளார். அவருக்கு பின்னால் துரத்தி வந்து கொண்டு இருந்த காவலர்களும் குளத்தில் குதித்து கிராம நிர்வாக அதிகாரி வெற்றிவேலை பிடித்துள்ளனர் .
குளத்தில் வீசப்பட்ட ரூபாய் நோட்டுகளில் சிலவற்றை மட்டும் நேற்று காவலர்கள் கைப்பற்றியுள்ளார்கள் .
இதனை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேலை பேரூர் தாசில்தார் அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்பு காவலர்கள் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குளத்தில் உள்ள ரூபாய் நோட்டுக்களை தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது . இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.