Spread the love

மாநாடு 26 March 2025 

கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை கடையில் ஒருவர் ரத்தம் சொட்ட சொட்ட தன்னை காவலர் தாக்கி விட்டார் என்று கூறி சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் ரத்தம் சொட்ட நின்று கொண்டிருந்தவர் அதே ஊரை சேர்ந்தவரிடம் 1.63 கோடியை வேலை வாங்கித் தருவதாக பெற்றுக் கொண்டு தராமல் மிரட்டி வந்ததும், காவலர்களுக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் உள்நோக்கத்தோடு வீடியோ வெளியிட்டுள்ளார் என்ற செய்தியும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது,

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையை சேர்ந்த கலியபெருமாள் மகன் மோகன் தாஸ் அதே ஊரில் மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறார்.
அம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த காசிநாதன் மகன் சிதம்பரம் தற்போது சென்னை மயிலாப்பூரில் வசித்து வருகிறாராம் , இவர்கள் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் 2014ம் ஆண்டு முதல் சிதம்பரத்துக்கும், மோகன்தாசுக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும்
அச்சமயத்தில் மோகன் தாஸ் தன்னை ஒரு அரசியல் புள்ளி எனவும் எம்பி, எம்எல்ஏக்களுடன் நல்ல
தொடர்பு இருப்பதாகவும், அமைச்சர் ஒருவரிடம் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக கூறியதுடன், சிதம்பரத்திடம் அவரது மகனுக்கு உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியதாகவும்,
அமைச்சர்கள் உள்ளிட்ட பலருக்கும் பணம் கொடுக்க வேண்டும் வேலை கிடைக்கா விட்டால் பணத்தை திருப்பி தந்து விடுவதாகவும் மோகன் தாஸ் கூறியதாக தெரிய வருகிறது.
மோகன்தாஸ் சொல்லியதை உண்மை என்று நம்பி சிதம்பரம் ரூ.93 லட்சம் கொடுத்ததாகவும் பிறகு 19 லட்சத்து 50 ஆயிரத்தை மோகன்தாசின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளதாகவும் மேலும் மோகன் தாஸ் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சிதம்பரம் கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டு நச்சரித்ததால் மொத்தம் 1 கோடியே 63 லட்சம் தொகை பெற்றுக் கொண்டதற்கான ஒப்பந்த பத்திரத்தையும், 9
காசோலைகளையும் சிதம்பரத்திடம் மோகன்தாஸ் வழங்கியதாகவும் தெரிய வருகிறது ஆனால் மோகன்தாஸ் கொடுத்த காசோலைகள் வங்கியில் பணம் இல்லை என்று திரும்பி வந்துவிட்டதாம்.
இது குறித்து சிதம்பரம் பலமுறை மோகன்தாசிடம் கேட்ட போதும் பணத்தை தர முடியாது என்று மிரட்டினாராம். இது குறித்து சிதம்பரம் என்பவர் கடந்த மாதம் 21ம் தேதி தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மோகன்தாஸ் மீது புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு காவலர் மோகன்தாஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்ததாகவும் இது தொடர்பாக கடந்த 20ம் தேதி காவலர் அவரது கடைக்கு சம்மன் நோட்டீஸ் வழங்க சென்ற போது அதனை மடை மாற்றும் உள்நோக்கத்தோடு காவலர் தன்னை பணம் கேட்டு தாக்கியதாக தன்னை தானே காயப்படுத்திக்கொண்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மோகன்தாஸ் சேர்ந்துள்ளார் என்பது தெரிய வருகிறது. இந்த நிலையில் நம்பிக்கை மோசடி செய்து வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பணம் பெற்ற மோகன்தாசை நேற்று காவலர்கள் கைது செய்து விசாரித்து வருகின்றனர் விசாரணையின் முடிவில் வேலை வாங்கி தருவதாக வேறு யாரிடமும் மோகன்தாஸ் ஏமாற்றியுள்ளாரா? என்பதும் ஏன் காவலர்களுக்கு அவதூறு ஏற்படுத்தும் விதத்தில் இவர் இப்படி நடந்து கொண்டார் ? பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கித் தராமல் இருந்தது மட்டுமல்லாமல் உண்மைக்கு புறம்பான வீடியோவை சமூக வலைத்தளத்தில் பரப்ப எப்படி தைரியம் வந்தது? இவருக்கு பின்னால் இருப்பவர்கள் யார் ?என்ற பல திடுக்கிடும்  உண்மைகளும் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் அதனையும் மாநாடு செய்தி குழுமம் வெளியிடும்.

77350cookie-checkதஞ்சையில் வேலை வாங்கித் தருவதாக கூறி 1.63 கோடி மோசடி கைது, திடுக்கிடும் தகவல்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!