மாநாடு 18 April 2025
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு கும்பகோணம் மகாமக குளத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பிய நிலையில் இரயில்வே கேட், மாதுளம் பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் வழிப்பறியில் ஈடுபட்டு தான் அணிந்திருந்த 6 பவுன் தாலி செயினை பறித்துச் சென்றதாக மாதுளம் பேட்டை, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வெண்ணிலா என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டது.
இவ்வழக்கின் புலன் விசாரணை அதிகாரியான கும்பகோணம் மேற்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் ராமமூர்த்தி குற்றவாளிகளான மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயதுடைய விக்னேஷ், 31 வயதுடைய ராம்கி ஆகியோர்கள் 18.02.2020-ம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு வழக்கின் புலன்விசாரணை முடித்து குற்றவாளிகள் மீது 22-06-2020-ம் தேதி நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கை விசாரணை செய்த மாண்புமிகு கும்பகோணம் குற்றவியல் நீதித்துறை நடுவர் 1 அவர்கள் நேற்று 17.04.2025-ம் தேதி வழக்கின் எதிரிகளான விக்னேஷ் , ராம்கி ஆகியோருக்கு இ.த.ச 392-ன் படி 3 வருட சிறை தண்டனை மற்றும் ரூ5,000/- அபராதத் தொகையும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் திறம்பட பணிபுரிந்தமைக்காக காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்றக் காவலர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டியுள்ளார்.