மாநாடு 18 June 2025
பொதுமக்கள் கொடுத்த மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் 25000 ரூபாய் அபராதம் விதிக்க நேரிடும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது விபரம் பின்வருமாறு :
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் வழக்குகள் விசாரணையை துவங்கும் முன் வழக்கறிஞர் ஒருவர் முறையீடு ஒன்றை முன்வைத்தார். அதில் அரசுக்கு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள பொது நல வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அப்போது சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம், அரசுக்கு அளிக்கும் விண்ணப்பங்கள் மீது 30 நாட்களுக்குள் முடிவெடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு பதிலளிக்குமாறு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அரசாணையின் படி 30 நாட்களுக்குள் விண்ணப்பங்களை பரிசீலிக்காததால் ஏராளமான பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன என சுட்டிக்காட்டினார். நாளை பொது நல வழக்குகள் விசாரணைக்கு வரும்போது அரசுக்கு மனு அளிக்கப்பட்ட 30 நாட்களில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படவில்லை என்றால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரித்தார். இந்த விவகாரத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் உறுதி அளித்தார். அரசு அலுவலகங்களில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு 3 நாட்களுக்குள் ஒப்புகை வழங்க வேண்டும். புகார் கிடைத்ததில் இருந்து அதிகபட்சம் 1 மாத காலத்திற்குள் தீர்வு காண வேண்டும். கால அவகாசம் தேவைப்பட்டால் அதுகுறித்து மக்களிடம் எழுத்துப் பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசு அனைத்து துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனைச் சுட்டிக்காட்டியே சென்னை உயர் நீதிமன்றம் இன்று கேள்வி எழுப்பி எச்சரித்துள்ளது இனியாவது கடமையை செய்வார்களா? கவர்மெண்ட் அலுவலர்கள்? பொறுத்திருந்து பார்ப்போம்.