மாநாடு 11 October 2025
நீர் நிலைகளில் அரசு அலுவலகங்கள் கட்ட அனுமதி வழங்கிய அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன் அதனால் அரசு கருவூலத்துக்கு ஏற்பட்ட நிதி இழப்பும் வசூலிக்கப்படும் என சுற்றறிக்கை பிறப்பிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா நெம்மேலி கிராமத்தை சேர்ந்த பிரகாசம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் நீர் நிலை என பதிவு செய்யப்பட்டுள்ள நிலத்தில் ஆரம்ப சுகாதார நிலையம், பஞ்சாயத்து அலுவலகம் கட்டப்படுகிறது என குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில் ஆரம்ப சுகாதார நிலையம் குறிப்பிட்ட அந்த நிலத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது அது சேதமடைந்ததால் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இரு தரப்பு வாதங்களுக்கு பின்
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கரிகுளம் என்ற பெயரில் நீர்நிலை என பதிவு செய்யப்பட்டுள்ள நிலத்தில் 6 அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருவதாக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் சுட்டி காட்டப்பட்டு உள்ளது. இந்த அலுவலகங்களை வேறு இடங்களுக்கு மாற்றுவது குறித்து அரசு 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பல்வேறு அரசு அலுவலகங்கள் நீர் நிலைகளில் தான் அமைந்துள்ளன.
ஆவணங்களை சரி பார்க்காமல் அந்த கட்டடங்களுக்கு அரசு அதிகாரிகள் அனுமதி வழங்கி உள்ளனர். எனவே நீர் நிலைகளில் அரசு அலுவலகங்கள் கட்ட அனுமதி வழங்கியது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன் அரசு கருவூலத்துக்கு ஏற்பட்ட நிதி இழப்பும் வசூலிக்கப்படும் என தமிழக அரசு சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு அடுத்த விசாரணை டிசம்பர் மாதம் 3ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பல ஊர்களில் பல கட்டிடங்களும் சில அலுவலர்களால் இப்படி அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது அவர்களின் மீதும் சட்டப்படி தண்டனை கிடைக்க நடவடிக்கை விரைவில் எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.