உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கேள்வி
பிரதமர் மோடியே வெறுக்கதக்க பேச்சுகளை பேசலாமா? முன்னாள் நீதிபதி கேள்வி
நாட்டில் மதச் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளை பாஜக தலைவர்கள் பேசுவதும் ஆதரிப்பதும் தொடர்பாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமன் அண்மையில் கவலை தெரிவித்துள்ளார்.
மும்பையில் உள்ள டிஎம் ஹரிஷ் சட்டக்கல்லூரியில் கடந்த 14ந்தேதி நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டவர் “சட்டத்தின் ஆட்சியின் அரசியலமைப்பு அடித்தளங்கள்” என்ற தலைப்பில் அவர் சிறப்புரை நிகழ்த்தினார்.
அப்போது பேசியதாவது ரோகிண்டன் பாலி நாரிமன் வெறுப்புப் பேச்சுகளை கண்டு ஆளும் கட்சியின் உயர்மட்டத்தில் இருப்பவர்கள் மவுனமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அதனை கிட்டத்தட்ட ஆமோதித்தும் வருவது துரதிர்ஷ்டவசமானது.
நாடு முழுவதும் பதிவாகும் பல வகுப்புவாத குற்றச் சம்பவங்கள் குறித்து அவர் பேசியப்போது கடந்த சில வாரங்களாக, இந்துத்துவா மேலாதிக்கவாதிகள்,
முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு அழைப்பு விடுத்து, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை சீர்குலைத்து, கிறிஸ்தவர்களைத் தாக்கினார்கள் என்றும் ஆன்லைன் தளங்களில் முஸ்லிம் பெண்கள் மீது மோசமான கருத்துகள் வெளியிடப்பட்டன. இரு சமூகங்களுக்கிடையில் பகையை உருவாக்குவதற்காக போலி சீக்கிய பெயர்களைப் பயன்படுத்தி முஸ்லின் பெண்களை “ஏலத்தில்” விடுவதற்கான போலி செயலிகளை உருவாக்கினார்கள் என்றும்
இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டாலும், குற்றவாளிகளுக்கு எதிராக குரல் கொடுக்காததற்காக பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய அரசையும் பலர் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் மத்திய பாஜக அரசை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமன் விமர்சித்துள்ளார்.
முகலாய ஆட்சியாளர் ஔரங்கசீப்பையும், மராட்டிய ஆட்சியாளர் சிவாஜியையும் ஒப்பிட்டுப் பேசியதற்காக மோடியின் பெயரைக் குறிப்பிடாமல் அவரை ரோகிண்டன் பாலி நாரிமன் விமர்சித்தார். மதசார்பற்ற சிவாஜிக்கு எதிராக மதவெறி கொண்ட ஔரங்கசீப் செயல்பட்டதாக ஆளுங்கட்சியினர் கூறுவதை கேட்க முடிகிறது.
உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் கடந்த டிசம்பர் மாதம் காசி விஸ்வநாதர் கோயிலில் நடைபெற்ற விழாவில் பேசிய பிரதமர் மோடி அவர்கள் ஔரங்கசீப்பையும், சிவாஜியையும் ஒப்பிட்டு பேசினார். ஆக்கிரமிப்பாளர்கள் இந்த நகரத்தைத் தாக்கினார்கள் அழிக்க முயன்றார்கள். ஔரங்கசீப்பின் அட்டூழியங்களுக்கும், அவரது பயங்கரத்துக்கும் வரலாறு சாட்சியாக இருக்கிறது அவர் வாளால் நாகரீகத்தை மாற்ற முயன்றார். கலாச்சாரத்தை வெறித்தனத்தால் நசுக்க முயன்றார். ஆனால் இந்நாட்டின் மண் உலக நாடுகளிலிருந்து வேறுபட்டது. இங்கே ஒரு ஔரங்கசீப் வந்தால், ஒரு மராட்டிய வீரர் வீருகொண்டு எழுகிறார்.” என்று அந்த விழாவில் மோடி பேசினார் என்பது கவனிக்கத்தக்கது.
இதற்கு எதிர்வினையாற்றியுள்ள ரோகிண்டன் பாலி நாரிமன், “உண்மையில், நமது அரசியலமைப்பில் சகோதரத்துவம் ஒரு முக்கிய மதிப்புவாய்ந்தது அதன்படி, சகோதரத்துவத்தை நோக்கி மக்களை ஈடுபடுத்த விரும்பினால், நீங்கள் பாபர் அல்லது அவரது பேரன் அக்பர் போன்ற முகலாய பேரரசரை உதாரணத்துக்கு தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். அக்பர் எந்தக் காலத்திலும் எந்த நாடும் அறிந்திராத மதச்சார்பற்ற ஆட்சியாளர்களில் ஒருவராக திகழ்ந்தார் என்று தெரிவித்தார்.
வெறுப்பூட்டும் பேச்சுக்களுக்கு குறைந்தபட்ச தண்டனை விதிக்கும் வகையில் பாராளுமன்றம் சட்டங்களை திருத்த வேண்டும் என்று முன்மொழிந்த ரோகிண்டன் பாலி நாரிமன், “துரதிர்ஷ்டவசமாக, நடைமுறையில், ஒரு நபருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என்றாலும், இது உண்மையில் நடக்காது, ஏனெனில் குறைந்தபட்ச தண்டனை என்பது பரிந்துரைக்கப்படவில்லை. நமது அரசியலமைப்பில் உள்ள சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்த உண்மையிலேயே விரும்பினால் குறைந்தபட்ச தண்டனைகளை வழங்குவதற்காக பாராளுமன்றம் இந்த சட்டங்களை திருத்த வேண்டும் என்று நான் கடுமையாக பரிந்துரைக்கிறேன், இதனால் வெறுப்பு பேச்சுகளை வெளியிடும் மற்றவர்களுக்கு அது தடையாக இருக்கும்.” என்று பேசினார்.
இளைஞர்கள், மாணவர்கள், நகைச்சுவை நடிகர்கள் மற்றும் அரசை விமர்சிப்பவர்கள் மீது தேசத்துரோகச் சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுவது குறித்தும் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமன் கவலை தெரிவித்தார்.