Spread the love

மாநாடு 25 January 2026

மொழிப்போர் ஈகியர் தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரலாற்று சுவடுகளை நினைவு படுத்தியும், தாய் மொழி தமிழ் மொழி அழியாமல் காக்க இன்னுயிர் ஈந்த மறவர்களை போற்றும் விதமாகவும்,

தற்காலத்தில் தீ பரவட்டும் என்று திரைப்படம் மூலம் வசனங்கள் வைத்துவிட்டு அதனை பெருமையாக பேசி வரும் திமுக அரசு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்தில் ஏன் தமிழ்நாடு என்று எழுதியிருந்ததை அழித்தீர்கள் என்ற விவாதத்தில் தமிழ்நாட்டில் தானே அந்த பேருந்துகள் ஓடுகிறது அதனால் தமிழ்நாடு என்று எழுதத் தேவையில்லை அரசு போக்குவரத்து என்று எழுதினாலே போதும் என்று அந்தத் துறையின் அமைச்சர் பதிலுரைக்கும் போது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்து விட்டு

மொழியை காக்க திமுக தான் முன்னின்று போராடியது என்று மார்தட்டிக் கொள்வது எந்த விதத்தில் நியாயம் என்றும் தமிழ்நாட்டில் தானே தலைமைச் செயலகம் இருக்கிறது அங்கு ஏன் தமிழ்நாடு அரசு என்று குறிப்பிடப்படுகிறது? முதலமைச்சர் தமிழ்நாட்டில் தானே இருக்கிறார் பிறகு ஏன் சட்டப்பேரவையில் கூட பலமுறை தமிழ்நாடு முதலமைச்சர் என்று கூற வேண்டும்? போன்ற பல்வேறு கேள்விகள் எழுப்பி தங்கள் உயிரை ஈகம் செய்தவர்கள் கனவை குழைக்கும் விதத்தில் யாருமே எப்போதுமே நடந்து கொள்ள கூடாது என்பதையும் இளம் தலைமுறை என்றால் என்ன அந்த நாளின் மகத்துவம் என்ன என்பதையும் சுட்டிக்காட்டி கீழ்க்கண்டவாறு அறிக்கை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது ;

அறிக்கை: *உயிர் நிகர் தாய்த்தமிழ்மொழி காக்க தங்கள் இன்னுயிர் ஈந்த மொழிப்போர் மறவர்களது பேரீகப் பெரும்புகழ் போற்றுவோம்! – செந்தமிழன் சீமான் அவர்களின் மொழிப்போர் ஈகியர் நாள் அறிக்கை* | நாம் தமிழர் கட்சி

மொழி என்பது வெறுமனே தொடர்புக்கருவி மட்டுமல்ல! அது தலைமுறைகள் வாழ்வதற்கு மூதாதைகள் விட்டுச் செல்கிற பண்பாட்டு மூச்சுக்காற்று. மொழியானது ஒவ்வொரு தேசிய இனத்தின் முகம், முகவரி, அடையாளம். மொழி என்பது மனிதப் பரிணாமத்தின் மாபெரும் பாய்ச்சல்.

மொழி என்பது ஒரு மனிதனின் உயிரையும் உடலையும் ஒலி வழியாக இணைக்கும் உருவமற்ற ஒழுங்கின் வடிவம்! பல்லாண்டு காலமாக நம் மூதாதையர் தம் எண்ணங்களையும், கருத்துக்களையும் கடத்த தொடர்ச்சியாக பயன்படுத்தும் வரையறுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட ஒலி குறிப்புகளின் ஒழுங்கமைக்கப்பட்ட தொகுப்பு மொழியாகும். மொழி என்பது வெறும் மொழி குறிப்புகளாக மட்டுமல்லாமல் கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு உள்ளிட்ட மக்களின் வாழ்வியலை தன்னகத்தே சேமித்து வைத்துள்ள கொள்கலன் ஆகும். ஒரு மொழி எத்தனை பழமையானதோ அந்த இனமும் அத்தனை பழமையானது! அதன் வரலாறும், பண்பாடும், கலை, இலக்கியமும் அத்தனை பழமையானது; செம்மையானது!
உலகின் மிகப் பழமையான மூத்த முதல் மொழியும், உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியுமான,
அன்னைத் தமிழின் பிள்ளைகளான நாம்தான் உலகின் மூத்த தொல்குடி மக்களாவர்.

மொழியை உலகிலுள்ள உயிர்களில் மனிதர்களுக்கு மட்டுமேயான அமுதச்சுரபி என்கிறார்கள். தேசப்பரப்பை வரையறுக்கிறபோது நிலப்பரப்பை வைத்தோ, மதங்களை வைத்தோ வரையறுப்பதில்லை. மொழியை வைத்துத்தான் தேசங்களும், தேசிய இனங்களும் வரையறை செய்யப்படுகின்றது. தமிழர் என்ற தேசிய இனத்தின் முகமாக, முகவரியாக விளங்குவது நம் தாய்மொழி தமிழேயாகும். ‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்று பாடினார் புரட்சிப்பாவலர் பாரதிதாசன். உயிருக்கு நிகரான தமிழ்மொழிக்கு இந்தி மொழித்திணிப்பினால் தீங்கு ஏற்படக்கூடாது என்பதற்காக பல நூற்றுக்கணக்கான வீரமறவர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து தாய்மொழி காக்கத் துணிந்தனர். ‘செந்தமிழுக்கு ஒரு தீங்கு வந்த பின்னும் இந்த தேகம் இருந்ததொரு லாபம் உண்டோ?’ எனப் பாடிய புரட்சிப்பாவலர் பாரதிதாசனின் வரிகளுக்கேற்ப ஏப்ரல் 21, 1934 அன்று ராஜாஜி தலைமையிலான சென்னை மாகாண அரசு இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்க அரசாணை வெளியிட்டபோது தமிழர்கள் கொதித்தெழுந்து தமிழ்மொழி காக்க, தன்னுயுயிரைத் தாரைவார்க்க வீதிகளில் திரண்டனர்.

சென்னையில் மொழிப்போராட்டத்தில் பங்கேற்றுச் சிறைக்கு சென்ற ஐயா நடராசன் அவர்கள் தன் உடல்நலம் குன்றியபோதும் போராட்டத்தில் இருந்து பின்வாங்காது சாவுக்குத் துணிந்து நின்றார். மன்னிப்புக்கடிதம் எழுதிக்கொடுத்தால் விடுதலை செய்வதாக அரசு அறிவித்தும் கூட மன்னிப்புக் கேட்க மறுத்து, சனவரி 15, 1939 அன்று சிறையிலேயே வீரச்சாவைத் தழுவினார். மொழிப்போராட்டக்களத்தில் ஐயா நடராசன் அவர்கள் செய்த உயிரீகம் இலட்சக்கணக்கான தமிழர்களைத் தட்டியெழுப்பியது. அதன் தொடர்ச்சியாக, கும்பகோணத்தைச் சேர்ந்த ஐயா தாளமுத்துவும் சனவரி 13, 1939 அன்று சென்னை சிறையில் உயிர்நீத்தார். இவ்விரண்டு உயிரீகங்களால் போராட்டம் மேலும் தீவிரம் அடையவே இந்தியை பயிற்று மொழியாக்குவது தொடர்பான அரசாணையை அப்போதைய மதராஸ் மாநில அரசு பிப்ரவரி 21, 1940 அன்று திரும்பப்பெற்றது.
இந்திய துணைக்கண்டம் விடுதலை பெற்ற பின்னர் காங்கிரசு தலைமையிலான இந்திய அரசு, இந்தியைப் பள்ளிகளில் கட்டாயமாக்க மாநிலங்களை வற்புறுத்தியது. அதன்படி சென்னை மாகாணத்தில் ஐயா ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தலைமையிலான காங்கிரசு அரசு 1948ஆம் ஆண்டு இந்தி கட்டாயப் பாடமாக்கப்படும் என ஆணை பிறப்பிக்கப்பட்டபோது அதை எதிர்த்து, மீண்டும் கிளர்ச்சி ஏற்பட்டதால் அரசு பின்வாங்கியது. பாராளுமன்றத்தில் அப்போதைய பிரதமர் நேரு இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே ஆட்சி மொழியாக தொடரும் என அளித்த உறுதிமொழியால் போராட்டம் அப்போதைக்கு மௌனித்தது.

மீண்டும் 26-1-1965 அன்று முதல் இந்திய ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே இருக்கும் என்கின்ற ஆட்சிமொழி சட்ட மசோதாவால் மீண்டும் தமிழ்நாடு போராட்டக்களமானது. கீழப்பழுவூர் சின்னசாமி சனவரி 25, 1964 அன்று தமிழ் மொழி காக்க திருச்சி தொடர்வண்டி நிலையம் எதிரே தீக்குளித்து உயிரீகம் செய்தார். அவரது வரிசையில் பல தமிழர்கள் இன உணர்வினால் தன் தாய்மொழி காக்க தன்னுயிர் தந்து தமிழின வரலாற்றில் விதைகளாக மாறிப்போனார்கள். சென்னை நடராசன், கும்பகோணம் தாளமுத்து, கீழப்பழுவூர் சின்னசாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து, சிவகங்கை ராஜேந்திரன், சத்தியமங்கலம் முத்து, அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன், விராலிமலை சண்முகம், பீளமேடு தண்டபாணி, மயிலாடுதுறை சாரங்கபாணி என தமிழ் மொழி காக்க தன்னுயிர் தந்த மொழி ஈகிகளின் பட்டியல் நீளுகிறது.

இவ்வாறு தன் தாய்மொழிக்காக தன் உயிரை இழக்கத் துணிந்த கூட்டம் உலக வரலாற்றில் தமிழர்களைப் போல எவரும் இல்லை என்கிற தனித்த வரலாற்றுப்பெருமை நம் இனத்திற்குண்டு. ஆனாலும், இந்நொடி வரை நம் உயிருக்கு நிகரான தமிழ் மொழி அரச மொழியாகவோ, அதிகார மொழியாகவோ, நீதிமன்ற மொழியாகவோ, வழிபாட்டு மொழியாகவோ மாறுவதற்கு இன்னும் நாம் போராடிக்கொண்டிருக்கிறோம் ‘எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!’ என சொல்லி ஆட்சிக்கு வந்த திராவிட ஆட்சியாளர்கள் Ôஎங்கேயும் இல்லை தமிழ்Õ என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள்.

தமிழ்நாடு அரசு என்ற பெயரை பேருந்துகள் முதல் மருத்துவமனை, கல்லூரி, பல்கலைக்கழகம் வரை வைக்கச் சொல்லி போராடும் நிலையே இன்றைக்கும் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் இல்லை. ஆவின் பால் முதல் அரசின் ஆணைகள் வரை தமிங்கல விளம்பரங்கள். குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப்பெயர்கள் சூட்டுவது குறைந்துவிட்டது. நம்ம சிலீமீஸீஸீணீவீ, நம்ம ஷிநீலீஷீஷீறீ என்று ஆங்கிலம் கலந்து பேசுவதையும் எழுதுவதையும் தமிழ்நாடு அரசே ஊக்குவிக்கும் அவல நிலை இன்றுள்ளது. இடையிடையே ஆங்கிலம் கலந்து பேசுவதையே நல்லியல்பு, அதுவே நவீன நாகரீகம் என்று எண்ணுகிற மூடத்தனம் விரவிக் கிடக்கிறது. அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை புகுத்தி தாய்மொழிக் கல்வியை சிதைத்துள்ளது திராவிட மாடல் அரசு. இந்தி ழிமீஸ்மீக்ஷீ, இங்கிலீஷ் ணிஸ்மீக்ஷீ என்றவர்கள் ஆட்சியில் எங்கு காணினும் ஆங்கிலமே ஆதிக்கம் செலுத்துகிறது. மும்மொழி கொள்கை எப்படி மோசடி கொள்கையோ, அதைப்போலவே இருமொழி கொள்கையும் ஏமாற்று கொள்கையே ஆகும்.

பேருந்துகளில் தமிழ்நாடு என்று ஏன் பெயர் வைக்கவில்லை என்று கேட்டால் எழுத்து நீளமாக வரும், மருத்துவமனை, கல்லூரி என்று எல்லா இடங்களிலும் எழுத வேண்டும் என்று கேட்பார்கள்’ என்று திமுக அமைச்சர் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தெரிவிக்கின்றார். நாம் தமிழ்நாட்டில் தானே இருக்கிறோம், பிறகு ஏன் எழுத வேண்டும்? என்றும் கேட்கிறார்.
பள்ளி, கல்லூரி, மருத்துவமனை என எல்லா இடங்களிலும் தமிழ்நாடு அரசு என்று எழுதினால் என்ன தவறு? தலைமைச் செயலகம் தமிழ்நாட்டில் தானே இருக்கிறது? அமைச்சர் கூறுவது போல அங்கு ஏன் வெறும் அரசு தலைமைச்செயலகம் என்று எழுதாமல் தமிழ்நாடு அரசு தலைமைச்செயலகம் என்று எழுதப்பட்டுள்ளது? முதலமைச்சர் தமிழ்நாட்டில்தானே இருக்கிறார்? அரசின் முதலமைச்சர் என்று மட்டும் கூறாமல், ஏன் வார்த்தைக்கு வார்த்தை தமிழ்நாடு முதலமைச்சர் என்று அதே அவையில் அமைச்சர் கூறுகிறார்? இவர்கள்தான் தமிழ்நாடு என்று நாங்கள்தான் பெயர் வைத்தோம் என்று மார்தட்டியவர்கள். தமிழில் பெயர் வைக்கக்கோரி தண்டவாளத்தில் தலை வைத்தவரின் வழிவந்த வாரிசுகள் என்று பூரிப்பவர்கள்.
பெயருக்குத்தான் இது தமிழ்நாடு! ஆனால், தமிழுக்கும், தமிழருக்கும் இது சுடுகாடு என்கின்ற நிலைக்கேற்ப தமிழ்நாட்டு வீதிகளில் எங்கும் தமிழ் இல்லை என்றாகிவிட்டது. தமிழர் நாவினில், தமிழர் வாழ்வினில் தமிழுக்குப் பஞ்சம். தூய தமிழ் பெயர்ப்பலகைகளை தமிழ்நாட்டில் காண்பது அரிது. ‘மணக்க வரும் தென்றலிலே, குளிரா இல்லை? தோப்பில் நிழலா இல்லை! தணிப்பரிதாம் துன்பமிது தமிழகத்தின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை’ என்று பாவேந்தர் வருந்திப்பாடி 70 ஆண்டுகளை கடந்தும் இன்றும் அதே அவல நிலையே நீடிப்பதுதான் வரலாற்றுப் பெருந்துயரம். தமிழர்கள் தங்கள் தாய்மொழியில் பெயர் வைத்துக் கொள்ளத் தயங்குகிறார்கள். தமிழ் படித்தால் வேலை கிடைக்குமா? என்று கேட்கின்ற இழிநிலை; தாழ்வு மனப்பான்மையால், தமிழர் தன் சொந்த நிலத்திலேயே வாழ்விழந்து, தன் மொழியின் உரிமையிழந்து தவித்து வருகிறார்கள்.
கடந்த 2009ஆம் ஆண்டு ஈழத்தில் நடைபெற்ற தமிழினப் படுகொலைக்குப் பிறகான காலகட்டத்தில் தமிழர் என்கின்ற தன்மான உணர்ச்சி தமிழ்நாட்டில் எழுச்சிபெற்று வருகிறது. தமிழ் இளையோர் தம் மொழி காக்க, நிலம் காக்க, ‘நாம் தமிழர்’ என ஓர்மையுடன் அணி வகுக்கின்ற காலம் உருவாகி இருக்கிறது. மொழி வாழ்ந்தால்தான் இனம் வாழும்; இன உணர்வு இருந்தால்தான் நாம் நம் நிலத்தில் நிலைத்து வாழ முடியும்’ என்கின்ற புரிதலும், பொறுப்புணர்வும், வரலாற்று அறிதலும் தமிழருக்கு ஏற்படவேண்டும். அதற்கு மொழிப்போர் ஈகிகளது வரலாற்றை உலகெங்கும் கொண்டுபோய் சேர்க்க வேண்டியது தமிழர்கள் ஒவ்வொருவரது தார்மீகக்கடமை என்பதை உணர வேண்டும்.

நாவில் வாழாத தமிழ்நாட்டில் எப்படி வாழும்? ஆகவே, என்னரும் தமிழ்ச் சொந்தங்கள் நல்ல தமிழில் பேசுவோம்; நல்ல தமிழில் எழுதுவோம்; வணிக நிறுவனங்களுக்கு நல்ல தமிழ் பெயர் வைப்போம்; நம் குழந்தைகளுக்கு நல்ல தமிழில் பெயர் சூட்டி மகிழ்வோம்!

தூங்குதல் போன்றது சாக்காடு – பின்னர்த் தூங்கி விழிப்பது நம் பிறப்புத் தீங்குள்ள இந்தியை நாம் எதிர்ப்போம் – உயிர் தித்திப்பை
எண்ணிடப் போவதில்லை! மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை –
நமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை! ஏங்கவிடோம் தமிழ்த் தாய்தனையே – உயிர் இவ்வுடலை விட்டு நீங்கும் வரை!
என்ற பாவேந்தர் பாரதிதாசனின் புரட்சிகர பாடல்வரிகளை
நெஞ்சில் ஏந்தி தன்னலம் இல்லாமல், தன் குடும்பம் பாராமல்,
நம் மொழி காக்க தன்னுயிரை தந்த மான மறவர்களான
மொழிப்போர் ஈகியர்களை நினைவில் சுமந்து, அவர்கள் எந்த புனித நோக்கத்திற்காக தங்கள் இன்னுயிரை ஈந்தார்களோ, அன்னைத் தமிழுக்கு ஓர் இன்னல் நேராமல் என்றும் காத்திடுவோம் என உறுதியேற்போம்!

உயிர் நிகர் தாய்த்தமிழ் காக்க தங்கள் இன்னுயிர் ஈந்த
மொழிப்போர் மறவர்களின் பேரீகப் பெரும்புகழ் போற்றுவோம்!

89470cookie-checkசீமான் மொழிப்போர் ஈகியர் நாள் அறிக்கை, வரலாற்றுச் சுவடுகளும், வாஞ்சையான கேள்விகளும்

Leave a Reply

error: Content is protected !!