Spread the love

மாநாடு 7 April 2022

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், கூட்டத்தில் இருந்து துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் உட்கட்சி தேர்தல் 25 மாவட்டங்களில் நடைபெற்று முடிந்து உள்ள நிலையில், மீதமுள்ள 49 மாவட்டங்களில் உட்கட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவதா, இரண்டு கட்டமாக நடத்துவதா என்பது குறித்து அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினர்கள்.

அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் மாலை 6.30 மணியில் இருந்து நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, கட்சியின் மூத்த நிர்வாகிகள் கே.பி.முனுசாமி ஆர்.வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார்,சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் மனோஜ் பாண்டியன் ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே கார சார விவாதங்கள் நடைபெற்றன. பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்து வரும் இந்த கூட்டத்தின் உள்ளே சலசலப்பு ஏற்பட்டது. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் கூட்டத்திலிருந்து வெளியேறினார்.

வைத்திலிங்கம் வெளியேறும் போது அவரை சமாதானப் படுத்துவதற்காக அவரை பின்தொடர்ந்து சட்டசபை உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் வந்தார்.ஆனால் வைத்தியலிங்கத்தின் கார் நிற்காமல் சென்றுவிட்டதாக தெரியவருகிறது.

வைத்திலிங்கத்தை சமாதானப்படுத்துவதற்காக, அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், அவர் தங்கி இருக்கும் ஓட்டலுக்கு சென்றார். ஆனால் அங்கு வைத்திலிங்கம் இல்லாததால் அவர் திரும்பி வந்தார். பின்னர் கொஞ்ச நேரம் கடந்து வைத்தியலிங்கம் கூட்டத்திற்கு வந்துவிட்டார்.

அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் 3 மணி நேரம் 40 நிமிடங்கள் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பதாவது:

இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாவது கட்ட உட்கட்சி தேர்தலை சிறப்பாக நடத்துவது குறித்து, அனைவரும் கலந்தாலோசனை நடத்தினோம். எந்த வாக்கு வாதமும் ஏற்படவில்லை, எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது.

வைத்திலிங்கம் வெளியேறியது ஏன்? என்று பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்தார்.

அனைவரும் மகிழ்ச்சியாக வெளியே வந்ததை நீங்களே பார்த்தீர்கள். ஆரோக்கியமான விவாதம் நடைபெற்றது. வைத்தியலிங்கத்திற்கு வேலை இருந்ததால் சென்று விட்டார். மீண்டும் வந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று சிரித்துக்கொண்டே கூறினார் ஜெயக்குமார்.

29160cookie-checkஅதிமுக கூட்டத்தில் இருந்து வைத்தியலிங்கம் வெளியேறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!