மாநாடு 22 March 2025
லஞ்சம் வாங்கியவருக்கு 1லட்சம் அபராதமும் 5 ஆண்டு சிறை தண்டனையும், புகார் கொடுத்தவரே குற்றவாளியை தப்பிக்க வைக்கும் நோக்கில் பிறழ் சாட்சியாக மாறி பொய்சாட்சி சொன்னதற்காக அவர் மீதும் நடவடிக்கை எடுக்கச் சொல்லி அதிரடி உத்தரவிட்டுள்ளார் நீதிபதி.
சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரம் விரிவு பகுதியைச் சேர்ந்தவரான கட்டட ஒப்பந்ததாரர் முருகன் கடந்த 2008 ஆம் ஆண்டு வேளச்சேரியில் புதிதாகக் கட்டிய வீட்டுக்கு இரண்டு புதிய மின் இணைப்பு கேட்டு வேளச்சேரி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
அந்த விண்ணப்பத்தை பரிசீலித்த மின் வாரியப் பொறியாளர் வெங்கடேசன் மின் இணைப்பு வழங்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்ச பணம் கேட்டதாகவும் அவ்வளவு தொகையை தன்னால் தர இயலாது என முருகன் சொல்லப்படுகிறது . பிறகு பேச்சுவார்த்தை நடத்தியதின் அடிப்படையில் 5,000 ரூபாய் லஞ்சமாக கொடுக்கும் படி கூறிய வெங்கடேசன் முன்பணமாக 2000 ரூபாய் தரும்படி சொல்லி இருக்கிறார்.
இந்நிலையில் மின்வாரிய அதிகாரி லஞ்சம் கேட்பதாக முருகன் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் பிரிவில் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அறிவுறுத்தலின் பேரில் 2000 ரூபாய் லஞ்சப் பணத்தை முருகன் கொடுத்த போது அதை பெற்றுக் கொண்ட வெங்கடேசனை அங்கு வளைவிரித்து காத்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்துள்ளனர்.
இவ்வழக்கு தொடர்பான விசாரணை சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரியா முன்னிலையில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கடேசன் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் , 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் புகார்தாரரான முருகன் சம்பவம் குறித்து தெளிவாக சாட்சியம் அளித்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட நபரை காப்பாற்றும் நோக்கில் குறுக்கு விசாரணையின் போது பிறழ்சாட்சியாக மாறியுள்ளார். ஆகையால் குற்றம் சாட்டப்பட்டவரை சட்டத்தின் பிடியில் இருந்து விடுவிக்கும் நோக்கத்துடன் புகார்தாரர் செயல்பட்டிருப்பது தெரிகிறது. பொய் சாட்சி அளித்ததற்காக புகார்தாரர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார் சிறப்பு நீதிமன்ற நீதிபதி.