Spread the love

மாநாடு 01 October 2025

திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப்பகுதியில் கிழக்கு காவல் நிலையக் காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோரால் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. திமுக ஆட்சியில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வன்மையான கண்டனதுக்குரியது. அதிலும் குற்றத்தை தடுத்து மக்களை காக்க வேண்டிய காவலர்களே அப்பாவி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது, சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சமாகும்.

தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து சமூகக்குற்றங்களுக்கும், போதைப்பொருள் விற்பனையைக் கட்டுப்படுத்தாது, மலிவு விலையில் மது விற்கும் திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடுதான் அடிப்படை காரணமாகும். 80 வயது மூதாட்டி முதல் பச்சிளம் குழந்தைகள் வரை பாலியல் வன்கொடுமை செய்யப்படும் கொடூரங்கள் நாளும் நிகழ்ந்தேறுகிறது; இத்தனை சமூகப்பேரவலங்களும் சர்வ சாதாரணமாக நடைபெறும் ஆட்சியை, நல்லாட்சி, பொற்கால ஆட்சி, சாதனை ஆட்சி, யாராலும் குறை சொல்ல முடியாத ஆட்சி என்பதுதான் கொடுமையின் உச்சம்.

போதைப்பொருட்களை ஒழித்து சட்டம் ஒழுங்கைச் சீர்படுத்த வேண்டிய காவல்துறை ஆளும் கட்சியின் அதிகாரக் கண்ணசைவுக்குச் சேவை செய்யும் ஏவல்துறையாகச் செயல்பட்டு எதிர்க்கட்சியினரை, அரசை எதிர்த்துக் கேள்வி கேட்கும் ஊடகவியலாளர்களை, சமூக ஆர்வலர்களை அடக்கி ஒடுக்கி பொய் வழக்கு புனைந்து சிறைப்படுத்துவதையே முழு மூச்சாக செய்து வருகிறது. இதற்கு பெயர்தான் திராவிட மாடலா? இதுதான் எந்த கொம்பனும் குறை சொல்ல முடியதா ஆட்சியா? என்ற கேள்வி எழுகிறது.

தங்களின் வாழ்வாதாரத்திற்காக தமிழ் மண்ணிற்கு வந்த அண்டை மாநில இளம் பெண்ணிற்கு இழைக்கப்பட்டுள்ள இப்பெரும் கொடுமையானது, தமிழர் அறத்திற்கும், பண்பாட்டிற்கும் ஏற்பட்டுள்ள மாபெரும் இழுக்காகும்.

தமிழினத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ள இக்கொடுஞ்செயலை ஒருபோதும் மன்னிக்க முடியாது.
நம்மை நம்பி தமிழ்நாட்டிற்கு வருபவர்களை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும். அதிலும், குற்றவாளிகளிடமிருந்து மக்களை காக்க வேண்டிய காவலர்களே இக்கொடும் குற்றத்தை நிகழ்த்தியிருப்பது
வெட்கக்கேடானாதாகும். குற்றத்தில் ஈடுபட்ட காவலர்களை வெறும் பணியிடை நீக்கம் செய்வது மட்டுமே உரிய தண்டனை ஆகிவிடாது. குற்றவாளிகளை நிரந்தரம் பணி நீக்கம் செய்து, எவ்வித அரசியல் அதிகார அழுத்தங்களுக்கும் ஆட்படாமல் நேர்மையான நீதி விசாரணையை விரைவுபடுத்துவதே சரியான நடவடிக்கையாக இருக்கும்.

ஆகவே, திருவண்ணாமலையில் ஆந்திர மாநில இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த காவலர்களுக்கு விரைந்து நீதி விசாரணை முடித்து சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன் என்று அறிக்கை வெளியீட்டு வலியுறுத்தியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

84640cookie-checkகாவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் சீமான் வலியுறுத்தல்

Leave a Reply

error: Content is protected !!