மாநாடு 28 April 2025
தஞ்சாவூர் டெல்டா பகுதியில் புகழ்பெற்ற மருத்துவமனையாக சிறப்பான உயர் சிகிச்சையை வழங்கி வரும் மீனாட்சி மருத்துவமனை அதன் வெற்றிகரமான 25-வது சிறுநீரக மாற்று சிகிச்சையை செய்து சாதனைப் படைத்திருக்கிறது.
37 ஆண்டுகள் வயதுள்ள ஒரு நோயாளிக்கு அவரது மனைவியிடமிருந்து தானமாகப் பெற்ற சிறுநீரகத்தைக் கொண்டு இச்சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், காவிரி டெல்டா பிராந்தியத்தில் NABH ன் அங்கீகாரம் பெற்றிருக்கும் ஒரு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் முதல் சிறுநீரக உறுப்புமாற்று அறுவைசிகிச்சை இது என்ற பெருமையையும் இதன் மூலம் இம்மருத்துவமனை பெற்றிருக்கிறது.
ஒரு அரிதான மருத்துவ நிகழ்வாக மனைவியின் சிறுநீரகம் மரபியல் ரீதியில் அவரது கணவருக்கு பொருத்தமானதாக இருந்தது. இத்தகைய நிலையானது வழக்கமான நெருக்கமான இரத்த உறவினர்கள் மத்தியில் மட்டுமே காணப்படும். இந்த அசாதாரண பொருத்தத்தை கண்டறிந்த மருத்துவமனையின் நிபுணர்கள் குழு
உயிருள்ள நபரிடமிருந்து எடுக்கப்பட்ட சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக செய்திருக்கிறது. சிறுநீரகத்தை தானமாக வழங்கிய மனைவியும் மற்றும் பொருத்தப்பட்ட சிறுநீரக உறுப்பு நிராகரிப்பிற்கான அறிகுறிகள் எதுவுமில்லாமல் அதனைப் பெற்றிருக்கும் கணவரும் நன்றாக குணமடைந்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறையின் நிபுணர் டாக்டர். எஸ். கௌரி சங்கர் தலைமையிலான மருத்துவ நிபுணர்கள் குழுவில் சிறுநீர் பாதையியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர், R ரவிச்சந்திரன், இதய மார்பறை மற்றும் இரத்தநாள அறுவைசிகிச்சை துறையின் முத்த நிபுணர் டாக்டர். பி. சுரேஷ் பாபு, சிறுநீர் பாதையியல் துறையின் முதுநிலை மருத்துவர் டாக்டர். V. பிரவீன் மற்றும் மயக்கவியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். அரிமாணிக்கம் மற்றும் மயக்கவியல் துறையின் நிபணர் டாக்டர் நாராயணன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். பல்வேறு துறைகளைச் சேர்ந்த இம்மருத்துவ நிபுணர்களின் நிபுணத்துவமும், துல்லியமும் மற்றும் இம்மருத்துவமனையில் அமைந்துள்ள உயர்தொழில்நுட்ப வசதிகளும் இந்த அறுவைசிகிச்சையின் வெற்றியை உறுதிசெய்து நோயாளிக்கு ஒரு புதிய வாழ்க்கையை தந்திருக்கிறது.
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறை சிறப்பு நிபுணர் டாக்டர். கௌரி சங்கர் இது குறித்து கூறியதாவது –
மீனாட்சி மருத்துவமனையில் வெற்றிகரமாக 25 சிறுநீரக உறுப்புமாற்று சிகிச்சைகளை செய்து ஒரு முக்கியமான மைல்கல்லை கடந்திருப்பதில் நாங்கள் பெருமையடைகிறோம். NASH-ன் அங்கீகாரம் பெற்ற ஒரு மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் முதல் சிறுநீரக உறுப்புமாற்று சிகிச்சை செய்யப்பட்டிருப்பதால் இந்த நோயாளிக்கு செய்யப்பட்டிருக்கும் சிகிச்சை இன்னும் அதிக சிறப்பானதாக இருக்கிறது. சமுதாயத்தில் அனைத்து நபர்களுக்கும் உயர்தரமான, எளிதில் அணுகிப் பெறக்கூடிய சிகிச்சையை வழங்குவதில் நாங்கள் கொண்டிருக்கும் பொறுப்புறுதியை இது பிரதிபலிக்கிறது.
சமீபத்தில் சிறுநீரக உறுப்புமாற்று சிகிச்சை செய்யப்பட்ட இந்த நோயாளி குறித்து பேசுகையில் மூன்று குழந்தைகளின் தந்தையான, திருவையாறு ஊரைச் சேர்ந்த இந்நோயாளிக்கு 2019-ம் ஆண்டில் நாட்பட்ட தீவிர சிறுநீரக நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது ஏற்பட்டதற்கான துல்லியமான காரணம் அறியப்படவில்லை. இவரது நிலைமை மோசமானதால், பிற நோய்களின் அதிக பாதிப்பிற்கும் மற்றும் உயிரிழப்பிற்குமான இடர்வாய்ப்பு கணிசமாக இருந்தது. பல மாதங்களாக ஹீமோடயாலிசிஸ் சிகிச்சையை இவர் பெற்று வந்திருக்கிறார். 2025-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் உயிருள்ள நபரான அவரது மனைவியிடமிருந்து பெறப்பட்ட சிறுநீரகத்தை இவருக்குப் பொருத்தும் சிகிச்சையை நாங்கள் மேற்கொண்டோம். இந்த மருத்துவ செயல்முறை சிக்கலானது என்றாலும், எவ்வித பிரச்சனையுமின்றி வெற்றிகரமாக நடந்த இச்சிகிச்சைக்குப் பிறகு பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிப்பிற்கான எந்த அறிகுறிகளின்றி நோயாளி நலமுடன் இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கிறார். குறிப்பாக உறுப்பு மாற்று சிகிச்சைக்கு முன்பு அவரது இரத்தத்தில் கிரியாட்டினின் ஏறக்குறைய 5 என்ற நிலையிலிருந்து இப்போது குறைந்து 1 என்ற அளவிற்கு வந்திருக்கிறது. சிறுநீரகம் மிக நேர்த்தியாக இயங்குவதையே இது குறிக்கிறது. இந்த சிகிச்சையின் நீண்டகால வெற்றியை உறுதி செய்வதற்கு இனிவரும் காலங்களில் உணவுமுறை கட்டுப்பாடுகளை தவறாமல் கடைப்பிடிப்பதும் மற்றும் குறித்துரைக்கப்பட்டுள்ள மருந்துகளை தவறாமல் தொடர்ந்து எடுத்துக்கொள்வதும் அவசியமாகும்” என்று விளக்கமளித்தார்.
பொருத்தமான தானமளிக்கும் நபராக அவரது மனைவியே இருப்பதை கண்டறிந்திருப்பதால் இந்நோயாளியை ஒரு அதிர்ஷ்டசாலி என்றே குறிப்பிடலாம். அனைவருக்கும் இத்தகைய பொருத்தம் அமைவதில்லை. உறுப்பு தானமளிப்பவர்கள் மிக குறைவான எண்ணிக்கையிலேயே இருக்கின்றனர் என்று குறிப்பிட்ட டாக்டர். S. கௌரி சங்கர், தங்களது குடும்பத்தில் உயிரிழந்த நபர்களின் சிறுநீரகங்களை தானமாக வழங்கி, மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற குடும்பங்கள் தாராள மனதுடன் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
NABH-ன் முழுமையான அங்கீகாரம் பெற்ற மருத்துவமனையான மீனாட்சி மருத்துவமனை, இத்தகைய நுட்பமான மருத்துவச் செயல்முறைகளை மேற்கொள்வதற்கு இப்பிராந்தியத்தில் ஒப்புதல் பெற்ற ஒரே மையமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த உறுப்புமாற்று சிகிச்சை வெற்றிகரமாக நடைபெறுவதற்கு தேவையான ஒப்புதல்களையும். ஆவணமாக்கல் நடைமுறைகளையும் இம்மருத்துவமனையின் நிர்வாகப் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர். நோயாளிக்கும் மற்றும் அவரது குடும்பத்திற்கும் நிதி ரீதியாக சமாளிக்கக்கூடியதாக இந்த சிகிச்சை செயல்முறை இருப்பதையும் அவர்கள் உறுதி செய்திருந்தனர்.
செய்தி – தஞ்சை N.செந்தில் குமார்