மாநாடு 22 April 2025
செல்லும் இடமெல்லாம் அதிரடி காட்டும் காவல் உதவி ஆய்வாளர் ஜீவானந்தம்…!
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் தான் ஜீவானந்தம் இவர் சட்டவிரோத கும்பலிடமும் சமூகவிரோத கும்பலிடமும் இருந்து மக்களை காப்பதில் வல்லவராகவும் எளியவர்களுக்கு நல்லவராகவும் செயல்பட்டு வருகிறார். காவல் துறையின் முக்கிய கடமைகள் யாதெனில் : சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதல், குற்றங்கள் நடைபெறாமல் தடுத்தல், குற்றவாளிகளை கைது செய்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் , குற்றச்சாட்டுகளை விசாரித்து, தண்டனை வாங்கி தர வழிவகை செய்தல் போன்றவை ஆகும்.
ஜீவானந்தம் தனது கடமைகளை பாரபட்சமற்ற முறையில் செய்து, பொதுமக்களுக்கு உதவுவதிலும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதிலும் திறம்பட செயல்படுகிறார்.
பேராவூரணி காவல் நிலையத்தில் உள்ள காவலர்களை கண்டு சமூக விரோதிகள் அஞ்சுகின்றார்களோ ?இல்லையோ ? ஆனால் காவல் உதவி ஆய்வாளர் ஜீவானந்தத்தை கண்டு அஞ்சி நடுங்குகின்றனர் சமூக விரோதிகள், எப்போதுமே காவலருக்கு உள்ள தனி மிடுக்கோடு தனக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்து வருகிறார் பேராவூரணி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜீவானந்தம். எத்தனையோ மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தலைமையில் காவலர்கள் பேராவூரணி காவல் நிலையங்களில் தொடர்ந்து 4 வருடங்களாக பணியில் இருந்து உள்ளனர் ஆனால் தற்போது பேராவூரணி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சமூக ஆர்வலர்கள் அனைவரின் பார்வையும் தற்போது பணியில் இருக்கும் காவல் உதவி ஆய்வாளர் ஜீவானந்தத்தின் பக்கம் திரும்பி இருக்கின்றது என்கின்றார்கள் அப்பகுதி சமூக ஆர்வலர்கள்.
இதனால் பேராவூரணி சுற்றுவட்டார பகுதியில் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வரும் ஒரு சில சமூக விரோதிகளுக்கு உறுதுணையாக இருக்கும் உயர் பதவியில் உள்ள சில அதிகாரிகளும், ஒரு சில பிரபல சங்கத்தினரும் மற்றும் கட்சி பிரமுகர்களும் காவல் உதவி ஆய்வாளர் ஜீவானந்தத்தின் நேர்மையான பணியை பொறுத்துக் கொள்ள முடியாமல் மறைமுகமாக வேறு விதமாக பேசி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதையெல்லாம் கண்டு கொள்ளாத காவல் ஆய்வாளர் ஜீவானந்தம் தன்னுடைய நேர்மையான மக்கள் பணியை தொடர்ந்து செய்து வருகிறார் எனத் தெரிய வருகிறது. எது எப்படியோ தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் சமூக விரோதிகளின் கூடாரங்களை ஒட்டு மொத்தமாக ஒழித்துக் கட்ட வேண்டும் என சமீபத்தில் நடந்த காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ள நிலையில் இது போன்ற சமரசமற்ற காவல்துறை அதிகாரியை ஊக்குவிக்க வேண்டியது சமூக அக்கறையுள்ள ஒவ்வொருவரின் கடமை, தவறு செய்பவர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்துவரும் பேராவூரணி காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் ஜீவானந்தத்துக்கு மக்களின் சார்பாக மாநாடு செய்தி குழுமம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து மகிழ்கிறது. செய்தி – அருள்