மாநாடு 15 March 2025
2025-2026 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக, தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம், பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்திருந்தன. இந்த நிலையில் தமிழக பட்ஜெட்டை கண்டித்து வரும் 23 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அதிரடியாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டம் முடிந்த பிறகு ஜாக்டோ ஜியோ
அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டுத்தலைமைகளான மாயவன், சேகர், பார்த்தசாரதி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை இன்று சட்டமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை ஜாக்டோ ஜியோவுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. ஜாக்டோ ஜியோ போராட்டங்களை எதிர்க்கட்சியாக இருக்கும் போது தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியல் ஆக்கிக் கொண்டார்.
பொதுப் பணித்துறை அமைச்சர் நேற்று எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பிறகு நேற்று இரவே முதலமைச்சரை சந்தித்தோம் எங்கள் கோரிக்கைகளை எடுத்து கூறினோம் . இதுவரை இந்த நான்கு ஆண்டுகளில் 8 முறை முதலமைச்சரை நேரடியாக சந்தித்து காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை தெளிப்படுத்தினோம்.
4 ஆண்டுகளாக தொடர்ந்து பேசிக் கொண்டு தான் இருக்கிறோம் . இதுவரை தமிழகத்தை ஆண்ட முதலமைச்சர்கள் எல்லாம் பேச்சு வார்த்தை என்று அழைத்துப் பேசினால் சாதகமான அறிவிப்பு அறிவிப்பார்கள் அதுதான் வரலாறு அதே போல இந்த முதலமைச்சரும் எங்களுக்கு நல்ல அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்ப்போடு பட்ஜெட்டில் ஏதாவது அறிவிப்பு வரும் என்று நம்பி இருந்தோம். நேற்று சந்தித்து பேசியபோது கூட முதலமைச்சர் காது கொடுத்து எங்கள் கோரிக்கைகளை கேட்டார் ஆனால் இந்த இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கூறாத போதே எங்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விட்டது. மிச்சம் மீதி இருந்த நம்பிக்கையும் இன்றைய பட்ஜெட் அறிவிப்புக்கு பின்பு போய்விட்டது எந்த முதலமைச்சர் கடந்த காலத்தில் எங்களுக்கு ஆதரவு அளித்தாரோ அவர் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்று நம்பி இருந்தோம். ஆனால் அதில் ஒரு இம்மி அளவு கூட நிறைவேற்றவில்லை என்பது எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதனால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களிடம் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை வெளிப்படுத்தும் விதமாக வரும் 23 ஆம் தேதி, இதுவரை தமிழ்நாடு கண்டிராத வகையில் 6 லட்சம் வரையிலான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்கள். மேலும் மார்ச் 30 ஆம் தேதி ஜாக்டோ ஜியோ குழு கூடும். அதுவரை அரசுக்கு நேரம் கொடுக்கிறோம். தொடர் மறியல் போராட்டம் நடத்துவோம் அதிலிருந்து பின் வாங்க மாட்டோம். எங்களை நம்புங்கள் என்று வாக்குறுதி அளித்தார் முதலமைச்சர். எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது நாங்களும் அவரை நம்பினோம். முன்பு அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் ஆட்சி காலங்களிலும் பற்றாக்குறை பட்ஜெட் தான். அப்போது மட்டும் உபரியாக பட்ஜெட் இருந்ததா என்ன? என்ற கேள்வியை எழுப்பியவர் மீண்டும் தொடர்ந்தார் எங்களின் கோரிக்கைகளை ஏற்க முடியாததற்கு நிதி பற்றாக்குறை என்று சொல்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. இந்த அரசுக்கு கொடுக்க மனமில்லை.சரண் விடுப்பை அடுத்த ஆண்டு நிறைவேற்றுவதாக சொல்வது போகாத ஊருக்கு வழிவகுப்பதாக உள்ளது. சரண் விடுப்பு தடை ஆணையை நீக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல போராட்டங்களை நடத்தி உள்ளோம். இதுதொடர்பான பட்ஜெட் அறிவிப்பு பெரிய ஏமாற்றத்தை தான் கொடுத்துள்ளது.110 விதி கீழ் முதலமைச்சர் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். டெட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். தமிழக முதலமைச்சரை சில அதிகாரிகள் தவறாக பயன்படுத்துகிறார்கள். அவர் அதிகாரிகள் பேச்சை கேட்காமல் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.மருத்துவத்துறை, கல்வித்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். உடனடியாக 31 ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து பேச வேண்டும் என்று தான் இந்த உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட உள்ளது என்று கொந்தளிப்புடன் கூறி முடித்தார்.அரசு அடுத்த கட்டமாக என்ன செய்யப் போகிறது? அரசு ஊழியர்கள் அடுத்து என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.