மாநாடு 20 March 2025
மக்கள் தங்களுக்கான சேவைக்காக அலுவலகங்களுக்கு அலைந்து திரிவதை தடுக்க வேண்டும், பொது மக்களின் கஷ்டத்தை போக்க வேண்டும், லஞ்ச லாவண்யத்தை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் தான் வாரிசு சான்றிதழ், இறப்புச் சான்றிதழ் , பிறப்புச் சான்றிதழ் , பட்டா மாறுதல் உள்ளிட்ட பல சேவைகள் இணைய சேவை மூலம் (on-line) அரசால் நடைமுறைப் படுத்தப்பட்டது என்றபோதும் கூட இன்னமும் சில அதிகாரிகளைத் தவிர பல அதிகாரிகள் மக்களுக்கான சேவையை வழங்குவதில் மெத்தனம் காட்டி வருவதையும் லஞ்சம் கேட்ட சில அதிகாரிகள் பிடிப்படுவதையும் நாள்தோறும் செய்திகளின் வாயிலாகவும், நடைமுறையிலும் கண்டு வருகிறோம். பட்டாவுக்கு விண்ணப்பித்தால் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டு மக்களை அலைக்கழிப்பதை அறிந்து வருகிறோம் இதே போல ஒரு நிகழ்வு நடந்துள்ளது இதனால் பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் அந்த வழக்கின் தீர்ப்பில் நீதிபதி கூறி இருப்பதாவது :
விருதுநகர் மாவட்டம் அரசியார்பட்டியைச் சேர்ந்த கோமதி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் அரசியார்பட்டியில் உள்ள என் சொத்துக்கு பட்டா கேட்டு ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தேன் எனது விண்ணப்பத்தை நிராகரித்து ராஜபாளையம் வட்டாட்சியர் 2025 மார்ச் 5-ல் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை பிறப்பிக்கும் முன்பு வருவாய் அதிகாரிகள் என்னை விசாரிக்கவில்லை, வேறு எந்தவித ஆவணங்களையும் கேட்கவில்லை,எனவே வட்டாட்சியரின் உத்தரவை ரத்து செய்து பட்டா வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி இருந்தார்.
இந்த மனு நீதிபதி பி.பி.பாலாஜி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.கருணாநிதி வாதிட்டார். அரசு தரப்பில் பட்டா கோரி ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது அந்த விண்ணப்பத்தின் முடிவு ஆன்லைன் வழியாகவே தெரிவிக்கப்படும். ஆன்லைன் விண்ணப்ப முறை இப்படித் தான் உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் வருவாய் அதிகாரிகளை நேரில் சந்திக்கும் போது விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும். அதன் பிறகு அந்த உத்தரவு தொடர்பாக நீதிமன்றத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த வாதங்களை கேட்ட பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவில் ஏற்கெனவே உயர் நீதிமன்றம் ராணி என்பவர் தொடர்ந்த வழக்கில் பட்டா கேட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரிக்காமல் ஆவணங்களை பரிசீலிக்காமல் கோரிக்கையை நிராகரிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் மனுதாரரை விசாரிக்காமல் அவரது ஆன்லைன் பட்டா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதில் உயர் நீதிமன்ற வழிகாட்டுதல் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது. இதனால் மனுதாரரின் மனு மீண்டும் வட்டாட்சியருக்கு அனுப்பப்படுகிறது. வட்டாட்சியர் மனுதாரரிடம் விசாரணை நடத்தி ஆவணங்களை பரிசீலித்து 8 வாரத்தில் இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
தமிழகத்தில் எதிர்காலங்களில் பட்டா கேட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது உயர் நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என வருவாய் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட வேண்டும். இதற்காக இந்த உத்தரவு நகலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உயர் நீதிமன்ற பதிவுத் துறை அனுப்ப வேண்டும் என்ற வழிகாட்டலுடன் கூடிய சிறப்பான உத்தரவை பிறப்பித்துள்ளார் மாண்புமிகு நீதிபதி .