மாநாடு 04 August 2025
அலட்சியம் வாழ வேண்டிய இளைஞரின் உயிரை பறித்திருப்பது திருப்பூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது ஆபரணத்தின் வைரமாக இருந்தாலும் வயிற்றுக்குள் சென்று விட்டால் குடலை கிழித்து விடும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நிகழ்ந்துள்ளது இந்த துயர, சோக சம்பவம் இனியேனும் மக்கள் அலட்சியமாக இருக்க கூடாது , உயிர் உன்னதமானது என்பதை உணர வேண்டும் என்பதை உணர்த்தி இருக்கிறது திருப்பூர் சம்பவம் விவரம் கீழ்க்கண்டவாறு: வளர்ப்பு நாய் கடித்தும் தடுப்பூசி போடாமல் இருந்த வாலிபர், ரேபிஸ் தாக்கி பலியானார். திருப்பூர் மாவட்டம், அவிநாசி, மடத்துப்பாளையம் ரோட்டில் வசித்து வருபவர் வெங்கடேஷ். வெல்டிங் ஒர்க்ஷாப் உரிமையாளர். இவரது மகன் சஞ்சய், 21. மூன்று மாதம் முன், இவரது வீட்டில் வளர்த்து வந்த லேப்ரடார் இனத்தை சேர்ந்த நாயிடம் சஞ்சய் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அதில், அவரது கையில் சிறியளவில் நாய் கடித்து காயம் ஏற்பட்டுள்ளது. அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வீட்டில் வளர்த்து வரும் நாய் தானே என்று அலட்சியப்படுத்தி ரேபிஸ் தடுப்பூசி போடாமல் இருந்தார்.
கடந்த 15 தினங்கள் முன், உடலில் அசவுகரியமாக உணர்வதாக பெற்றோரிடம் கூறினார். உடல் வலி, காய்ச்சல் ஆகியவற்றுக்கு ஊசி போட்டு வந்துள்ளார். ஓரிரு நாட்களில் அதிக காய்ச்சல், உடல் மற்றும் கழுத்து வலி, என பல்வேறு உபாதைகள் உடலில் ஏற்பட்டதால், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் நாய் கடித்ததால், ரேபிஸ் தாக்கியது தெரியவந்தது. அதன்பின், கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், தனிப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ள நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.