மாநாடு 29 மார்ச் 2023
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த பல்வீர் சிங் என்பவர் குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வரப்படும் கைதிகளை மிகவும் கொடுமைப்படுத்தி அவர்களின் பற்களை கூலாங்கற்களால் அடித்து உடைத்து எடுத்தார் என்ற பதப்பதைக்கு வைக்கும் செய்தி வெளியில் வந்து மனித உரிமை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரையும் கொதிப்படைய செய்தது.
அதன் காரணமாக கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்கள் ஊடகங்கள் உள்ளிட்டவற்றில் பலராலும் விவாதிக்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது அது மட்டுமல்லாமல் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
இன்று கூடிய சட்டமன்ற பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கீழ்க்கண்டவாறு விளக்கம் அளித்திருக்கிறார். அதில் ஏ.எஸ்.பி விவகாரத்தை பொருத்தமட்டில் குற்றச் செயலுக்காக விசாரணைக்கு வந்த கைதிகளின் பற்களை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு வந்தது . சேரன்மாதேவி சார் ஆட்சியர்/ உட்கோட்ட நடுவர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணை தொடங்கப்பட்டு இச்சம்பவத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஏ.எஸ்.பி பல்வீர்சிங் உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல் சம்பவங்களில் எந்தவித சமரசங்களையும் இந்த அரசு மேற்கொள்ளாது என்பதை இந்த அவையில் ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன் அந்த வகையில் இந்த விரும்பத்தகாத சம்பவத்தில் ஈடுபட்ட அம்பாசமுத்திரம் கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டிருக்கிறேன் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
இது சம்பந்தமாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் இக்கொடுஞ்செயலை செய்த உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதாக கூறி தப்பிக்க வைக்கும் முயற்சியை தமிழக அரசு செய்யக்கூடாது என்று வலியுறுத்தி கீழ்க்கண்டவாறு அறிக்கை விட்டிருக்கிறார் .
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் கைதுசெய்யப்படுவர்களது பற்களைப் பிடுங்கியும், பிறப்புறுப்புப்பகுதியில் கொடூரமாகத் தாக்கியுமென காவல் உதவிக்கண்காணிப்பாளர் பல்வீர் சிங் கொடுஞ்சித்திரவதையில் ஈடுபடும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. விசாரணை எனும் பெயரில் வரம்பு மீறி, கொடூரமான மனிதவதையை அரங்கேற்றியுள்ள பல்வீர் சிங்கின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
மனிதநேயம் துளியுமில்லாத பல்வீர் சிங் போன்றவர்கள் மக்கள் சேவைப்பணிகளில் இருக்கவே தகுதியற்றவர்கள். ஏற்கனவே, காவல்துறைக்கும், பொது மக்களுக்குமிடையே பிணைப்பில்லாத தற்காலச்சூழலில், இதுபோன்ற கொடும் நிகழ்வுகள் காவல்துறை மீது மக்களுக்கு பெரும் வெறுப்பை உருவாக்கிவிடும். பல்வீர் சிங்கை காத்திருப்புப்பட்டியலுக்கு மாற்றியிருப்பது போதுமான நடவடிக்கை இல்லை. எளிய மக்களிடம் அத்துமீறித் தாக்குதலில் ஈடுபடும் காவலர்களை சடங்குக்கு ஏதாவது ஒரு துறைசார்ந்த நடவடிக்கைக்கு மட்டும் உட்படுத்திவிட்டு, அவர்கள் செய்த தவறுக்கான தண்டனையை அளிக்காது சட்டத்தின் பிடியிலிருந்து அவர்களைத் தப்பவிடும் அரசின் செயல்பாடு வெட்கக்கேடானது.
ஆகவே, காவல் உதவிக்கண்காணிப்பாளர் பல்வீர் சிங்கை உடனடியாக நிரந்தரப் பணிநீக்கத்திற்கு உட்படுத்த வேண்டுமெனவும், அவர் மீது கொலைமுயற்சி வழக்குப் பதிவுசெய்து, சிறைப்படுத்த வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இத்தோடு, தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ஒரு இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும், அவர்களுக்கு தகுந்த மருத்துவச்சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும் கேட்டுக் கொள்வதாக அவ்வரிக்கையில் சீமான் தெரிவித்திருக்கிறார்.