மாநாடு 11 March 2022
தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தடுத்து நிறுத்த அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக சொல்கின்ற போதிலும் தொடர்ந்து பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு வழக்கம் போல தான் இருந்து வருகிறது. அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே பிளாஸ்டிக் உபயோகத்தை தடுக்க முடியும் பிளாஸ்டிக் மொத்த கடைகளை தொழிற்சாலைகளை அப்படியே விட்டுவிட்டு கண்டும் காணாமலும் இருந்து கொண்டு சிறு கடைகளிலும் ரோட்டோரத்தில் உள்ள உணவகங்களிலும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக்கூடாது என்று ஆய்வு செய்து தண்டத்தொகை வசூலித்தால் மட்டும் பளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்திவிடலாம் என்று சொல்வது கட்டுப்படுத்தி விட்டது போல காட்டுவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் ஒரு செயலாகும்.
வடநாட்டிலிருந்து பெரிய நிறுவனங்களில் இருந்து வரும் பொருட்கள் பெரும்பாலும் பிளாஸ்டிக்கினால் உரை இடப்பட்டு தான் வருகிறது அதன் தன்மையின் அளவுகள் மாறுபட்டாலும் கூட அது அரசு நிர்ணயித்த அளவு தான் என்பதை ஆய்வு செய்கிறார்களா என்பதும் ஒரு கேள்விக்குறி தான்.
இவ்வாறான பிளாஸ்டிக் பைகள் சுற்றுச்சூழலுக்கும் நமது செல்லப் பிராணிகளுக்கும் மிகப்பெரிய தீங்கை விளைவிக்கிறது அப்படிப்பட்ட நிகழ்வுதான் இந்த ஜல்லிக்கட்டு காளைக்கும் நடந்துள்ளது.
பிளாஸ்டிக் பைகளால் கால்நடைகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. என சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசு கடுமையாக பிரச்சாரம் செய்து வந்த போதிலும் இந்த பிரச்சாரத்தில் உண்மை உள்ளது என்பதை மீண்டும் நிருபிக்கும் விதமாக தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இயங்கி வரும் தேனி கால்நடை மருத்துவகல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு கடந்த 4 மாதங்களாக தேனியை சேர்ந்த சீரஞ்சிவி என்பவரின் 3 வயதான ஜல்லிகட்டுகாளை எவ்வித தீவனமும் சாப்பிடாமலும், அதன் வயிறு கடுமையாக வீக்கம் அடைந்து இருந்ததால் இந்த காளையை சிகிச்சைக்காக கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இந்த மாட்டிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இந்த மாட்டின் வயிற்றில் ஏரளமான பிளாஸ்டிக் பைகள் அடைத்து இருப்பதை முதல்கட்ட பரிசோதனையில் கண்டு பிடித்தனர்.இதனை அகற்ற மருத்துவர்கள் குழு அமைக்கபட்டு மாட்டுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது.
அதனடிப்படையில் மாட்டிற்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது.இந்த அறுவை சிகிச்சையின் முடிவில் மாட்டின் வயிற்றில் இருந்து 35 கிலோ பிளாஸ்டிக் பைகள், கட்டுகம்பிகள், சாவி, துணி தைக்கும் ஊசி, மற்றும் நைலான் கயிறு, போன்ற பொருள்களை அதன் வயிற்று பகுதியில் இருந்து அகற்றினார்கள்.
இந்த சிகிச்சைக்கு பின்னர் மாட்டின் உரிமையாளர்களுக்கு தீவனம் தொடர்பாகவும், மாட்டின் உணவு மற்றும் பராமரிப்பு பற்றியும் கால்நடை மருத்துவர்கள் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்கள்.
தற்போது அனைத்து மாவட்ட ஆட்சியர்களின் மாநாடு தமிழக முதல்வரின் தலைமையில் நடைபெற்று கொண்டிருக்கிறது இதிலாவது இந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு நிரந்தர தடை விதிப்பை முறைப்படுத்துமா அரசு பொறுத்திருந்து பார்ப்போம்.