மாநாடு 14 February 2022
தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சொந்தமான பல இடங்கள் வணிக வளாகங்கள் கட்டிடங்கள் என அனைத்தும் அரசியல் பக்க பலத்துடன் ஏறக்குறைய 50 ஆண்டுகளாக பல பெரும்புள்ளிகள் ஆக்கிரமித்து வைத்திருந்த இடங்களை அரசின் சொத்துக்களை மிகவும் சாதுர்யத்துடன்,துணிச்சலாக, எந்த அச்சுறுத்தலுக்கும் பின்வாங்காமல் அதிரடி நடவடிக்கையாக நூறு கோடிக்கும் மேல் மதிப்புள்ள சொத்துக்களை மீட்டு மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து சேர்த்த பெருமை முழுவதும் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் அவர்களையே சாரும் .
இதில் சில பொது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட போதிலும் அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று கோரிக்கை இருப்பினும் கூட அரசாங்க சொத்தை மீட்டெடுத்த ஆணையரின் செயல் அனைவராலும் வரவேற்கக்கூடியது தான்.
அதனடிப்படையில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அண்ணா சிலைக்கு எதிர்ப்புறம் இருந்த ராமநாதன் சபா ஆணையர் அவர்களால் மீட்டெடுத்து சீல் வைக்கப்பட்டிருந்தது.
அந்த இடங்களில் செல்போன் கடை, மதுபான கடை, தனியார் பார், தனியார் உணவு விடுதி , ஏடிஎம், பேக்கிரி, நைட்டி கடை ,பெட்டிக்கடை, போன்ற பல கடைகளும் இயங்கி வந்தன.
அவ்வப்போது இந்த மஹாலில் புத்தக கண்காட்சிகள், சில நேரங்களில் நாடகங்களும் நடைபெற்று வந்தன அந்த இடத்தை இப்போது தஞ்சை மாநகராட்சி இடித்து தரைமட்டமாக்கி கொண்டிருக்கிறது.
மேலும் நாம் இதைப்பற்றி இவ்வாறான கேள்விகளை முன்வைத்தோம்.
பல இடங்களில் அரசுக்கு சொந்தமான வாடகை பாக்கி பெருமளவு கட்டாமல் இருக்கிறார்கள். வரிகள் பெருமளவு கட்டாமல் இருக்கிறார்கள் அல்லது குறைத்துக் கட்டுகிறார்கள் எப்படி இது சாத்தியமாகிறது?
அப்போதெல்லாம் மாநகராட்சி அலுவலர்கள் ,ஊழியர்கள், மாநகராட்சி நிர்வாகங்கள் என்ன செய்கின்றன ?
என்கிற கேள்வியை வைக்கிற போது சிலர் சொல்கிறார்கள்.
உதாரணத்திற்கு ஒரு வருடத்திற்கு ஒரு லட்ச ரூபாய் வாடகை கட்ட வேண்டுமென்றால் பாக்கி வைத்து விடுவார்களாம் .
அந்த வாடகையை மாநகராட்சி கட்ட சொல்லும்போது அந்த அலுவலகங்களில் இதற்கென தரகு வேலை செய்வதற்காக பல ஊழியர்கள் இருக்கிறார்களாம். அவர்களிடம் இதை சொன்னால் எந்த அதிகாரிக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும்.தங்கள் பங்கு தொகை எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று சொல்வார்களாம், அதன்படி பார்த்தால் வாடகை ஒரு லட்ச ரூபாய் என்று இருந்தால் இவர்களை சரிக்கட்ட வெறும் 20,000 ரூபாய் இருந்தால் போதுமாம். அதுமட்டுமல்லாமல் வரிகளைக்கூட குறைத்து கட்ட இவர்களிடம் பல வழிகள் இருக்கிறதாம் இப்படி தான் அரசுக்கு சேர வேண்டிய வருவாய்கள் இழப்பு ஏற்படுவதாகவும் கூறுகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் யாராவது ஒருவர் நேர்மையாக இருந்துவிட்டால் அவர்களுக்கு எவ்வளவு இடையூறு கொடுக்க வேண்டுமோ அவ்வளவும் கொடுப்பார்களாம்.இதைப்பற்றி எந்தவித புகாரும் கூட யாரும் அனுப்பினாலும் கூட சேரவேண்டிய நேர்மையான அதிகாரிக்கு போய் சேராதாம்.
அரசு ஊழியர்களாக இருந்து கொண்டு இந்த மாதிரி தரகர் வேலைகளை செய்யும் அதிகாரிகளை மீறி திரு சரவணகுமார் ஆணையர் அவர்கள் இவ்வாறான செயல்களை செய்ததே மிகப்பெரிய சாதனையாக தான் பார்க்கப்படுகிறது.
தஞ்சாவூர் மாநகராட்சியில் இவ்வாறாக முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளை ஆணையர் அவர்கள் களை எடுக்க வேண்டும்.
இப்போதும் கூட தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் இவ்வாறான வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் பட்டியல் ஆதாரங்களோடு விரைவில் நமது மாநாடு இதழ் மூலம் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் அவர்களிடம் சமர்ப்பித்து, நமது இதழில் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது .
மீண்டும் ஒரு முறை நமது மாநாடு இதழ் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கிறது.