மாநாடு 15 February 2022
வருகிற 19ம் தேதி நடைபெற இருக்கிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகிறது. எங்கு யாரை சந்திப்பது என்பது முதல் அனைத்தும் திறம்பட திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பல பகுதிகளில் பல ஊர்களில் திமுகவும், அண்ணா திமுகவும், தாங்கள் நிறுத்திய வேட்பாளர்களுக்கு கட்சிக்காரர்கள் வேலை செய்யாமல் தேர்தலில் சுயேட்சையாக நிற்பவர்கள் மற்றும் கட்சி நிறுத்திய வேட்பாளர்களுக்கு வேலைகள் செய்யாமல் ஒத்துழைப்பு கொடுக்காமல் இருப்பவர்களை கண்டுபிடித்து பகுதி பொறுப்பு பெயர் அனைத்தையும் வெளியிட்டு திமுகவும், அண்ணா திமுகவும் தங்கள் கட்சியில் இருந்து அவர்களை நீக்கும் வேலையில் கடந்த சில நாட்களாக இறங்கியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக தான் தஞ்சாவூர் பகுதியிலும் பலர் நீக்கப்பட்டு இருக்கிறார்கள். ஏன் கட்சிக்காரர்கள் கட்சி நிறுத்திய வேட்பாளர்களுக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்று சில கட்சிகாரர்களிடம்கேட்ட போது அவர்களில் சிலர் கூறியதாவது
பல ஆண்டுகளாக எங்கள் கட்சிக்காக நாங்கள் உழைத்து வருகிறோம் எங்களுக்கான அங்கீகாரத்தை தொண்டர்களுக்கு கட்சி தருவதாக நாங்கள் நினைப்பது எங்களது செல்வாக்கு பெற்றவர்களை மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்களை கட்சி வேட்பாளராக நிறுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் இப்போது நடக்கவிருப்பது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இந்த தேர்தலைப் பொருத்தவரை அந்தந்த பகுதியில் இருப்பவர்களை வேட்பாளராக நிறுத்தினால் மட்டும்தான் அந்தப் பகுதியில் என்ன குறை இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியவரும். அதை விட்டு விட்டு வெளியே இருக்கும் யாரையாவது அந்த பகுதிக்கு வேட்பாளராக நிறுத்தினால் ஒருவேளை அவர்கள் வென்றால் கூட அவர்களால் அந்தப்பகுதியின் குறைகளைத் தீர்க்க முடியாது முன்பெல்லாம் இதையெல்லாம் மனதில் வைத்துதான் வேட்பாளர்களை அனைத்து கட்சிகளும் நிறுத்துவார்கள், ஆனால் இப்போது வேட்பாளர்களை அப்படி நிறுத்தி இருக்கிறார்களா என்றால் பல பகுதிகளில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் இதற்கும் ஒருபடி மேலே சென்று தஞ்சாவூர் பகுதியில் உள்ள ஒரத்தநாடு பேரூராட்சிக்கு தேர்தல் பணிக்குழு தேர்தலுக்கான வேலைகளை செய்வதற்காக அமைக்கப்பட்டிருக்கிறது இதில் கூட கட்சியின் அடிப்படை ஜனநாயகம் இல்லை என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் ஒரத்தநாடு பகுதியின் சேர்மனாக இருப்பவர் பார்வதி சிவசங்கர் அவர்களை தேர்தல் பணிக்குழு தலைமையாக போட்டு வேலை செய்யாமல், திருவோணம் பகுதியிலுள்ள செல்வம் சௌந்தரராஜன் என்பவரை தேர்தல் பணிக்குழுவின் தலைவராக நியமித்து உள்ளார்கள். இது எந்த வகையில் ஜனநாயகம் என்று ஒரத்தநாடு திமுகவினர் கேள்வி கேட்டு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்கள்.
மேலும் இதைப்பற்றி நாம் கேட்கும் போது ஒரத்தநாடு பகுதியில் தேர்தல் வேலைகளை பகிர்ந்து செய்ய மொத்தம் ஐந்து பணிக்குழு அமைக்கப்பட்டது அதில் நான்கு பணி குழுக்களுக்கு 4 ஒன்றிய செயலாளர்களை நியமித்திருக்கிறார்கள்.
ரமேஷ் ஒரத்தநாடு மேற்கு ஒன்றிய செயலாளர்.
நடுவூர் செல்வராஜ் ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர்.
கார்த்திகேயன் ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய செயலாளர்.
முருகையன் ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர்.இவர்களை பணிக்குழு பொறுப்பாளர்களாக போட்டுவிட்டார்கள் ஆனால் ஒரத்தநாடு சேர்மன் பார்வதிசிவசங்கர் அவர்களை எந்த குழுவுக்கும் தலைவராக போடாமல் இருப்பது திமுகவினர் இடையே சலசலப்பு உண்டுபண்ணி உள்ளது.இதனால் ஒரத்தநாட்டில் திமுகவின் தேர்தல் வேலைகள் தொய்வு ஏற்பட்டு இருப்பதாகவும் தெரியவருகிறது. இதையெல்லாம் இனிவரும் காலங்களில் சரி செய்வது நல்லது என்கிறார்கள் திமுகவின் முன்னோடிகள் சரி செய்யுமா திமுக பொறுத்திருந்து பார்ப்போம்.