மாநாடு 16 February 2022
தமிழகத்தில் வரும் 19ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், ஏற்கனவே திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட 107 பேர் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் அவர்கள் அறிவித்திருந்தார்.
கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக சொல்லி திமுக பொதுச்செயலாளர் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டார்.
இந்நிலையில், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக மேலும் 19 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கி துரைமுருகன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஏற்கெனவே கட்சி உறுப்பினர்கள், நிர்வாகிகள் சுயேட்சையாக போட்டியிட கூடாது என்று திமுக தலைமை எச்சரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நடவடிக்கை பற்றி திமுகவினர் சிலரிடம் கேட்டபோது முன்பெல்லாம் எங்கள் தலைவர் கலைஞர் எங்கள் விருப்பப்படி கட்சி நடவடிக்கைகள் அனைத்தையும் செய்வார் ஆனால் இப்போதெல்லாம் அப்படியெல்லாம் இல்லை. ஏற்கனவே நடந்த சட்டமன்றத்தேர்தலில் கூட ஒரு தனியார் நிறுவனத்திடம் தான் கட்சியின் வெற்றியை கொடுத்தார்கள்.
அதுவே எங்களுக்கு மிகப்பெரிய மனக்கஷ்டத்தை தந்தது இருப்பினும் வெற்றி பெற்றது சற்று ஆறுதலை தந்தது,ஆனால் இந்த உள்ளாட்சித் தேர்தலில் எங்கள் கட்சி பல ஊர்களில் பல இடங்களில் எங்கள் விருப்பப்படி எந்த முடிவும் எடுக்கவில்லை என்பது தான் உண்மை.
ஒன்றை திமுகவினர் நினைவுபடுத்திப்பார்க்கின்றோம் எங்கள் தலைவர் காலத்தில் பல தோல்விகளை சந்தித்து வந்த இயக்கம் தான் திமுக எந்த தோல்வியிலும் நாங்கள் துவள மாட்டோம், சோர்ந்துவிட மாட்டோம், ஏனென்றால் எங்கள் தலைவர் கலைஞர் எங்களோடு அப்படி உறவில் இருந்தார், எங்களை அரவணைத்து கழகத்தை வழிநடத்தினார்.
எந்த தனியார் நிறுவனமும் எங்களுக்கு நடுவில் இருந்ததில்லை ஆனால் இப்போது எல்லாமே மாறிக்கொண்டு வருகிறது இதே நிலைமை தொடர்ந்தால் கட்சிக்கு நல்லதல்ல என்பது மட்டும் உண்மை என்று கூறினார்கள் அந்த உடன்பிறப்புகள்.