மாநாடு 15 July 2022
இலங்கையில் நிலவி வந்த பொருளாதார நெருக்கடிக்கு தவறான முறையில் இலங்கையை ஆட்சி செய்த அதிபரே காரணம் என்று மக்கள் வீதி இறங்கி ஒன்று கூடி தொடர்ந்து போராடினார்கள்.
மக்கள் மீது பல்வேறு அடக்குமுறைகளை ஏவி விட்டும் அவர்களின் ஆவேசத்தை எதிர்கொள்ள முடியாமல் இலங்கை அதிபர் திக்கு முக்காடி வந்தார். இந்நிலையில் சொந்த மக்களால் துரத்தப்பட்டு இலங்கையை விட்டு தப்பி ஓடிய அதிபர் கோட்டா பய ராஜபக்சே சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்திருக்கிறார் என்ற செய்தி நேற்று உறுதி செய்யப்பட்டது.
இருந்த போதும் கோட்டா பய ராஜபக்சே பதவி விலகல் விவகாரம் இழுப்பறியாகவே இருந்தது. இந்த நிலையில் இப்போது இலங்கை சபாநாயகர் மகிந்த யாப்பா கோட்டா பய ராஜபக்சேவின் ராஜினாமா கடிதம் சிங்கப்பூரில் இருந்து இணையத்தின் வழியாக வந்து சேர்ந்தது என்பதை உறுதி செய்ததுடன் இலங்கையின் 8வது அதிபராக பதவி வகித்த கோட்டா பய ராஜபக்சே பதவி விலகினார் என்கிற செய்தியையும் தற்போது அறிவித்துள்ளார் இதனை அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் ஆடல் பாடலுடன் துள்ளலாக கொண்டாடி மகிழ்கின்றனர். இலங்கை அரசியல் வரலாற்றில் அதிபர் ராஜினாமா செய்திருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
