மாநாடு 18 July 2022
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவி ஸ்ரீமதி மாடியில் இருந்து விழுந்து இறந்துவிட்டார் என்று பள்ளி நிர்வாகத்தால் கூறப்பட்டது.
ஸ்ரீமதியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர்கள் கூறினார்கள், அதனை அடுத்து இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும், ஸ்ரீமதியின் பிரேதத்தை மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்களும், உறவினர்களும் பல வகையான அமைதி வழி போராட்டங்களில் மூன்று நாட்களாக ஈடுபட்டு வந்தார்கள்.
மூன்று நாட்கள் அமைதியாக நடந்த போராட்டம் திடீரென்று நேற்று கலவரமாக மாறியது, கலவரத்தில் பள்ளியில் உள்ள பேருந்துகள் எரிக்கப்பட்டது, வேறு சில பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டது,
அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி நிகழ்வு தனக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்துவதாகவும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் அரசை நம்பி போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் அமைதி காக்க வேண்டும் என்று ட்விட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார், மேலும் தலைமைச் செயலாளர் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரை உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து செல்லும்படியும் உத்தரவிட்டிருந்தார், அதனை தொடர்ந்து மேல்மட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர், சக்தி பள்ளியின் நிர்வாகிகள் 3 பேரை நேற்று கைது செய்தது, இன்று இரண்டு ஆசிரியர்களை காவல்துறை கைது செய்துள்ளது.
நேற்று பள்ளியின் வாகனங்கள், பொருட்கள் சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து தனியார் பள்ளிகள் இன்று முதல் இயங்காது என்று அறிவிக்கப்பட்டது, இந்த அறிவிப்பு பொதுமக்களால் மிகப்பெரிய விமர்சனத்திற்கு உள்ளானது.
தமிழகம் முழுவதும் இன்று 91% தனியார் பள்ளிகள் இயங்கியுள்ளதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மெட்ரிகுலேஷன் பள்ளிகள் 89%, நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் 95%, சி.பி.எஸ்.இ பள்ளிகள் 86% இயங்கியுள்ளதாகவும், மாவட்டம் வாரியாக இன்று இயங்கிய தனியார் பள்ளிகள் விவரங்கள் குறித்தும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சரோடு தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது நாளை முதல் வழக்கம் போல அனைத்து பள்ளிகளும் இயங்கும் என்று தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.