மாநாடு 24 August 2022
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. பல்வேறு குழுக்களாக பிரிந்து வழிநடத்த வேண்டியவர்கள் நிற்கிறார்கள் அதன் காரணமாக தொண்டர்களும் மிகவும் சோர்வடைந்து இருக்கிறார்கள்.
எதிர்க்கட்சியாக இருந்து ஆக்கப்பூர்வமான பல செயல்களை செய்து, போராட்டங்களை முன்னெடுத்து தொண்டர்களை ஊக்கப்படுத்தி வழிநடத்த வேண்டியவர்கள் அவர்களுக்கு கட்சியில் சரியான வழி கிடைக்குமா கட்சியின் தலைமை பொறுப்பிற்கு தாங்கள் வர முடியுமா என்கிற தேடலில் இருக்கிறார்கள்.
அதிலும் தற்போது அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்று இபிஎஸ் தரப்பும், ஒற்றை தலைமை கூடாது ஒருங்கிணைப்பாளர் ,துணை ஒருங்கிணைப்பாளர் என்ற அமைப்பே தொடர வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்த சூழ்நிலையை பயன்படுத்த மத்தியில் ஆளும் பாஜகவும், மாநிலத்தை ஆளும் திமுகவும் சரியாக காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றது.அதன் ஒரு பகுதியாக அதிமுகவை கொங்கு மண்டலத்தில் பலவீனப்படுத்த திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான வேலைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கோவையைப் பொருத்தவரை திமுகவின் வளர்ச்சிக்காக முழு பொறுப்பையும் ஏற்று பங்காற்ற அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அவரும் அந்த வேலையை மிகவும் நேர்த்தியாக செய்து வருகிறார். ஏற்கனவே அதிமுகவின் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், மக்கள் நீதி மையத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகி மகேந்திரன் உள்ளிட்டவர்களை திமுகவில் இணைத்திருந்தார் தற்போது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கோவையில் உள்ளார் இந்நிலையில் இன்று அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.சி.ஆறு குட்டி அவரது ஆதரவாளர்களோடு திமுகவில் இணை உள்ளதாக தெரிகிறது.
இவர் அதிமுக சார்பில் கவுண்டம்பாளையம் தொகுதியில் சட்டமன்ற வேட்பாளராக 2011 ,2016 ஆம் ஆண்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் சிறிது காலம் அதிமுகவின் நடவடிக்கைகளை பார்த்துக்கொண்டு கொஞ்சம் ஒதுங்கி இருந்தார் இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 17ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறு குட்டி ஒற்றை தலைமை பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும், அதே நேரத்தில் ஒற்றை தலைமைக்கு எடப்பாடி பழனிச்சாமியும் வேண்டாம், ஓ.பன்னீர்செல்வமும் வேண்டாம் வேறு யாராவது தலைமை பொறுப்புக்கு வந்தால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும் அதிமுகவை சாதி கட்சி ஆக்கி விடாதீர்கள் என்று பேசினார்.
இந்த பேச்சு அப்போது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது, மேலும் கொடநாடு கொலை வழக்கு விசாரணையில் ஆறு குட்டியையும் அவரது மகனையும் காவல்துறை விசாரித்தது, இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து திமுகவில் தான் இணைய விருப்பம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி இன்று மாலை நடக்கும் நிகழ்ச்சியில் அதிமுகவிலிருந்து விலகி தனது ஆதரவாளர்களோடு திமுகவில் ஆறு குட்டி இணை உள்ளதாக தெரிய வருகிறது. இந்த நிகழ்வு மூலம் கொங்கு மண்டல அதிமுகவின் பலம் சற்று குறைய தான் செய்யும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள், இதை உணராத ஓபிஎஸ், இபிஎஸ், தரப்பினர் தங்கள் பக்கம் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள் என்ற பலத்தை நிரூபிப்பதற்காக சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று குமுறுகிறார்கள் அதிமுக தொண்டர்கள். இன்று திமுகவில் இணைய போகும் அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறு குட்டி ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.