மாநாடு 17 September 2022
இன்று பெரியாரின் 144 வது பிறந்த நாளை தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பல கட்சிகள் ,பல இயக்கங்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றன. இவரின் பிறந்த நாளை தமிழக அரசு, அரசு விழாவாக கொண்டாடி வருகிறது, இந்த விழாக்களில் பேசும் பலரும் கடவுளின் பெயரால் சாதிய தீண்டாமைகள் இருப்பதாக மேற்கோள் காட்டி பேசுவார்கள்.
சாதிய கொடுமைகள் தீண்டாமைகளை எல்லாம் ஒழிப்பதற்காக பெரியார் இறுதி காலம் வரை உழைத்தார் என்றும் அதில் வெற்றியும் பெற்றார் என்றும் கூறப்படுகிறது. இவற்றையெல்லாம் ஒழிப்பதற்காக ஆட்சி அதிகாரம் தேவைப்படுகிறது என்பதற்காக தான் திராவிட கட்சிகள் தேர்தலில் ஈடுபட்டு ஆட்சி அதிகாரத்திற்கும் வந்தது என்றும் கூறி வருகிறார்கள்.
அதன்படி ஏறக்குறைய 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகளின் ஆட்சி தான் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. இந்த கட்சியின் ஆட்சிகளால் எவ்வித பெரிய தீண்டாமை ஒழிப்பும் நடைபெறவில்லை தமிழ்நாட்டில் என்பதற்கு ஆதாரமாக பல்வேறு நிகழ்வுகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது, கடந்த தேர்தலில் கூட பட்டியல் இன தலைவர்கள் கட்சிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் தனி அணிகள் உருவான வரலாறும் தமிழ்நாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோயில் அருகே உள்ள பாஞ்சான் குளம் என்கிற கிராமத்தில் பட்டியலின மாணவ, மாணவிகள் படிக்கும் பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. அந்தப் பள்ளியில் படிக்கும் சிறு குழந்தைகளுக்கு தங்களது சாதி என்ன என்பது கூட தெரிய வாய்ப்பில்லை, பள்ளியில் கொடுக்கப்பட்டிருக்கும் சாதி சான்றிதழில் கூட அரசால் கேட்கப்பட்டு குறிப்பிட்டு இருக்கும் இந்த குழந்தைகளின் சாதியை அறியாத சிறு பிள்ளைகளுக்கு மாபெரும் சாதிய கொடுமை நடந்தேறி இருக்கிறது.
இங்குள்ள அரசு பள்ளியில் படிக்கும் சிறு குழந்தைகள் பள்ளியின் அருகே உள்ள பெட்டிக்கடையில் தின்பண்டங்கள் காசு கொடுத்து வாங்கி சாப்பிடுவது வழக்கம். அதேபோல இந்நிகழ்வின் போதும் தின் பண்டங்கள் வாங்கி சாப்பிடுவதற்காக அந்த பெட்டி கடைக்கு சிறுவர்கள் சென்று இருக்கிறார்கள். உங்களுக்கு தின்பண்டங்கள் இனி கொடுக்க முடியாது, எங்கள் ஊரில் கூட்டம் போட்டு முடிவு செய்து இருக்கிறோம்.
உங்கள் சாதியினருக்கு இனி எதுவும் தர மாட்டோம், உங்களுக்கும் தின்பண்டங்கள் தர மாட்டோம் இதை உங்கள் பெற்றோரிடம் போய் சொல்லுங்கள் என்று இங்கு கடை வைத்து நடத்திக் கொண்டிருக்கின்ற 20 வயது மதிப்புடைய ராமச்சந்திர மூர்த்தி கூறி இருக்கிறார்.
இந்த வீடியோ சமூக தளங்களில் அதிகமாக பரவப்பட்டு மனிதாபிமானம் உள்ள அனைவரிடமும் ஓர் அதிர்ச்சியை உண்டு பண்ணியது. இதனைத் தொடர்ந்து சங்கரன்கோயில் கோட்டாட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் வருவாய் துறையினர் பெட்டி கடைக்கு சீல் வைத்துள்ளனர். நல்லூர் காவல் துறையினர் பெட்டி கடையின் உரிமையாளரான ராமச்சந்திர மூர்த்தியை கைது செய்துள்ளனர்.
வீடியோ காட்சியில் அந்த குழந்தைகள் ஏன் தர மாட்டீர்கள் என்று கேள்வி கேட்கும் போது கடைக்காரர் கூறிய பதிலும் அது புரியாமலேயே அந்த குழந்தைகள் பார்த்த பார்வையும் சமூக ஆர்வலர்களை பதறச் செய்தது ,சாதியை ஒழித்து விட்டோம், சாதிய கொடுமையை கடவுளின் பெயரால் தான் நடத்துகிறார்கள் என்று பல்வேறு காரணங்களை கூறிய போதிலும் இவ்வாறான செயல்கள் இன்றும் பல ஊர்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை மெய்ப்பிக்கும் ஆதாரமாக இந்நிகழ்வு நடந்தேறி இருக்கிறது, ஊரே கூடி இந்த தீண்டாமை கொடுமையை செய்திருக்கும் போது ஒரே ஒருவரை மட்டும் கைது செய்தால் போதாது இதற்கு காரணமான அந்த ஊரில் உள்ள அனைவரையுமே கைது செய்ய வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
கடவுளின் பெயரால் மட்டுமல்ல கட்சிகளின் பெயராலும் தீண்டாமை தமிழ்நாட்டில் இருக்கிறது என்பதை யாராலும் மறக்க முடியாது.