மாநாடு 19 September 2022
சமீப காலமாக போதைப்பொருள் ஒழிப்புக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செய்து வருவதாக கூறப்படுகிறது, அதன் தொடர்ச்சியாக பள்ளிக்கல்வி, கல்லூரி மாணவ, மாணவியரிடம் போதைப்பொருள் தடுப்பு ஒழிப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நடத்தப்பட்டு வருகிறது.
அதே சமயத்தில் மறுபுறத்தில் மது கடைகள் நாள்தோறும் பல்வேறு இடங்களில் திறக்கப்பட்டு வருகிறது, இதனை எதிர்த்து பல்வேறு கட்சிகளும், அந்த பகுதியில் வாழ்கின்ற மக்களும், தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
இன்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்ப்பு முகாமில் புதிதாக திறக்கப்பட இருக்கின்ற மது கடையை திறக்கக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் பூபேஸ் குப்தா மனு ஒன்றை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்திருக்கிறார் .
அதன் விவரம் பின்வருமாறு:தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், வேப்பங்காடு கிராமம் அம்பேத்கர் காலனியில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் அன்றாடம் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகின்றனர். இவர்களின் மாணவ, மாணவிகளும் அரசு பள்ளியில் படித்து வருகின்றார்கள். இளம்பெண்கள் நிறைய பேர் உள்ளனர் .இந்த இடத்தில் தற்போது புதிதாக டாஸ்மாக் மதுக்கடை கட்டப்பட்டு திறக்க உள்ளனர். புதிய கடை திறக்கப்பட்டால் இப்பகுதியில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பின்மை, மாணவ,மாணவியர்கள் படிப்பதற்கு இடையூறு என பல தொல்லைகள் வர வாய்ப்புள்ளது. இப்பகுதியில் ஒற்றுமை சீர்குலைந்து, பொது அமைதி கெட வாய்ப்புள்ளது.டாஸ்மாக் கடைக்கு வருகிறவர்கள் அம்பேத்கர் காலனி பகுதியை திறந்த. வெளி பாராக மாற்றிவிடுவார்கள். அம்பேத்கர் காலனியில் புதிதாக டாஸ்மாக் கடை கட்டப்பட்ட போது கடைகட்டக் கூடாது என மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், கலால் பிரிவு உள்ளிட்டு மனு அளித்து எவ்விதமான நடவடிக்கையும் இல்லை, தற்போது புதிதாக கட்டப்பட்ட டாஸ்மாக் மதுகடையை திறக்க கூடாது என கிராம மக்கள் சார்பிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பட்டுக்கோட்டை ஒன்றியம் சார்பிலும் இன்று மாவட்ட ஆட்சியரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் க.பூபேஸ்குப்தா கோரிக்கை மனு அளித்தார்.
அதன் பிறகு பூபேஷ் குப்தா கூறியதாவது: மாவட்ட ஆட்சியரிடம் இன்று திங்கட்கிழமை குறைதீர்க்கும் நாளில் கோரிக்கை மனு அளித்துள்ளேன். மாவட்ட ஆட்சியரும் இந்த முறை நடவடிக்கை எடுக்காவிட்டால் இப் பகுதி மக்கள் அனைவரையும் திரட்டி கடையை திறக்க விடாமல் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.