மாநாடு 1 October 2022
திமுக ஆட்சிக்கு வந்தாலே நாட்டில் ரவுடிசமும், கட்டப்பஞ்சாயத்தும் தலைதூக்கும் சாமானியர்கள் நிம்மதியாக வாழ முடியாது என்று தேர்தல் நடப்பதற்கு முன்பே பல கட்சிகளும் பல இயக்கங்களும் கூறிவந்தது.
கடந்த 10 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லை அதுவும் புதிதாக திமுகவின் தலைமை பொறுப்பிற்கு வந்திருக்கும் மு.க.ஸ்டாலின் திமுகவை திறம்பட வழி நடத்துவார் அவருக்கு வாக்களித்தால் ஆட்சி சிறப்பாக இருக்கும் என்று ஐபேக் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்ட செய்தியை பல ஊடகங்களும் வெளியிட அதற்கேற்றார் போல் திமுகவின் தலைவர், தற்போதைய முதல்வர் பல ஊர்களுக்கும் நேரில் சென்று மக்களை சந்தித்து பல வாக்குறுதிகள் கொடுத்து மக்களின் கோரிக்கைகளையும் கேட்டு மனுகளையும் பெற்று வந்தார்.அதன் காரணமாக திமுக மக்களிடத்தில் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்தது, மு.க.ஸ்டாலின் முதல்வரானார், பதவி ஏற்றவுடன் திமுகவிற்கு வாக்களித்தவர்கள் மகிழும் படியும் ,திமுகவிற்கு வாக்களிக்காதவர்கள் இவ்வளவு நன்மைகள் செய்கின்ற திமுகவுக்கு வாக்களிக்காமல் போய்விட்டோமே என்று வருந்தும் படியும் நான் ஆட்சி செய்வேன் திமுகவின் ஆட்சி எல்லோருக்குமான ஆட்சியாக இருக்கும் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார் .
ஆனால் தினந்தோறும் ஊடகங்களில் வரும் செய்திகளும் ,மக்கள் படும் பாடுகளும், ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. திமுக அமைச்சர்கள் முதல் கவுன்சிலர்கள் உட்பட பலரும் பேசும் பேச்சுக்கள் ,சமூக ஊடகங்களிலும் ,செய்திகளிலும், நாள்தோறும் வெளிவந்து கொண்டிருக்கிறது .அது திமுகவினரின் அராஜகத்தை தோலுரித்து காட்டிக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் திமுகவினரே பல இடங்களிலும் ரவுடிசம் செய்வதாகவும் செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. இதனால் திமுகவின் மீது மக்களுக்கு நாளுக்கு நாள் அதிருப்தி அதிகமாகி கொண்டே போகிறது.கட்சியை காப்பாற்றவாவது இவற்றையெல்லாம் தடுத்து மக்களை காக்க வேண்டிய முக்கிய பொறுப்பில் இருக்கும் திமுகவின் தலைமை பல நேரங்களில் மௌனமாகவே இருப்பதாக கூறப்படுகிறது, இதனால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாக வேண்டியுள்ளது.
இதை மெய்ப்பிக்கும் வகையில் இன்று புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மேற்பனைக்காடு என்கிற கிராமத்தில் கோகிலா என்பவர் அதிகாலை 4 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கோகிலா எழுதி வைத்த கடிதம் கிடைத்துள்ளது.
அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: எனது சாவுக்கு காரணம் திமுகவின் அராஜகம் என்றும் திமுகவின் இளைஞர் அணி மாவட்ட பொறுப்பில் இருக்கும் எம்.எம்.குமார் கட்சியின் பவரை பயன்படுத்தி எங்கள் மீது பொய் வழக்கு போட வைத்து எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டார் என்றும் அவருக்கு உடந்தையாக இருந்து கொண்டு புகாரை சரிவர விசாரிக்காமல் திமுகவினருக்கு ஆதரவாக செயல்பட்டு எங்கள் மீது பொய் போட்டு கீரமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் மற்றும் பெண் காவலர் கிரேசியும் அதிகாலை எங்கள் வீட்டிற்கு வந்து தூங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பி மிரட்டி உன் மீது கொலை வழக்கு போட்டு திருச்சி சிறையில் அடைக்கப் போகிறோம் என்று சொல்லி காவல் நிலையத்திற்கு இழுத்து சென்றார்கள்.
என் கணவர் மீதும் வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள், இதன் காரணமாக கடந்த 10 நாட்களாக என் கணவர் வீட்டிற்கு வரவில்லை எங்கு சென்றார் என்ன ஆனார் என்றே தெரியவில்லை , காவல் நிலையத்தில் நான் இருந்தபோது திமுகவின் பொறுப்பாளர் எம் எம் குமார் காவல் நிலையத்திற்கு வந்து சாதாரண வழக்கை எவ்வளவு அழுத்தம் உள்ளதாக மாற்றுகிறேன் பார் உன்னை திருச்சி சிறையில் அடைக்காமல் விடமாட்டேன் என்று கூறி சென்றார் இதனால் மிகவும் மன உளைச்சலில் நான் சாகிறேன் என்று அந்த கடிதத்தில் எழுதி இருக்கிறது.
இந்த சம்பவத்தை பற்றி நாம் விசாரித்த போது தெரியவந்ததாவது: கோகிலா வீட்டின் அருகே இருந்த பாதை சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சனை தற்போது ஒரு பெண்ணின் தற்கொலைக்கு காரணமாக ஆகியிருக்கிறது என்று தெரிய வருகிறது. தற்கொலை செய்து கொண்ட கோகிலா மற்றும் இவர் வீட்டின் அருகே உள்ள ராஜலட்சுமி, கோகிலாவின் கணவர் நீலகண்டன் உட்பட அந்தப் பகுதியில் உள்ளவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் கோகிலா மீதும் இவரின் கணவர் நீலகண்டனின் மீதும் வழக்கு பதியப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
அதன் காரணமாக கடந்த மாதம் 20ஆம் தேதி அதிகாலை 4:00 மணி அளவில் இவர் வீட்டிற்கு கீரமங்கலம் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் ஜெயக்குமார் மற்றும் பெண் காவலர் கிரேசி வந்து தூங்கிக் கொண்டிருந்தவரை எழுப்பி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது, கோகிலா மீது போடப்பட்ட வழக்கின் காரணமாக சம்பவத்தன்று ஆலங்குடி நீதிமன்றத்தில் நேர் நிறுத்தியதாகவும், அன்றே பிணையில் வீட்டிற்கு அழைத்து வந்ததாகவும், காவல் நிலையத்திற்குச் சென்று கையெழுத்திட வேண்டியது இருந்ததாகவும் கூறுகிறார்கள்.
இந்நிலையில் நேற்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் கோகிலா. இதனையொட்டி உறவினர்களும், ஊர் மக்களும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள்,
அதனைத் தொடர்ந்து கீரமங்கலம் காவல் நிலையத்திலும் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு நின்று திமுகவின் பொறுப்பாளர் எம்.எம்.குமாரையும்,
கோகிலாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் அனைவரையும் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கெல்லாம் முன்பே இப்படி அராஜகப் போக்கில் ஈடுபடும் திமுகவின் பொறுப்பாளர்களைப் பற்றி அந்தப் பகுதியில் வாழும் திமுகவினர் திமுக தலைமைக்கும், அமைச்சர்களுக்கும் கடிதம் மூலம் தெரியப்படுத்தியதாகவும் அப்போதே திமுக தலைமை நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று இந்த நிகழ்வு நடந்திருக்காது என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் புகார் எழுதி அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது; பல்வேறு அராஜகப் போக்கில் ஈடுபட்டு கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்டிருப்பதாகவும் அவர்களின் மீது நடவடிக்கை எடுத்து கட்சியை காக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் கடிதம் எழுதியுள்ளார்கள், அதில் பேரூர் செயலாளர் கே சி சிவக்குமார் ,நகர துணை செயலாளர் பஸ் ஸ்டாண்ட் ரவி, மேற்பனைக்காடு கிராமத்தை சேர்ந்த திமுகவின் மாவட்ட அணி செயலாளர் எம்.எம்.குமார், டைட்டானிக் சாகுல் ஹமீது மாவட்ட சிறுபான்மையினர் அணி, ஒன்றிய கவுன்சிலர் கே.எஸ்.ரவி, மற்றும் எஸ்.வி.ஆர்.கண்ணன் போன்றோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேலும் இவர்களுக்கு உடந்தையாக இருந்து செயல்படும் கீரமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதி அனுப்பி உள்ளனர்.
அந்த கடிதத்தின் நகல்களை எஸ்.ரகுபதி சட்டத்துறை அமைச்சர்.
சிவ.வீ.மெய்யநாதன் சுற்றுச்சூழல் அமைச்சர், உள்ளிட்டவர்களுக்கும் அனுப்பி இருக்கிறார்கள் அப்போதே இவர்கள் மீது நடவடிக்கைகள் எடுத்திருந்தால் இவ்வளவு பெரிய அசம்பாவிதங்கள் நடைபெற்று இருக்காது.
தற்போது மக்கள் பெருந்திரளாக திரண்டு சாலை மறியல் செய்து வருகிறார்கள் அதன் காரணமாக பட்டுக்கோட்டை மதுரை சாலையில் போக்குவரத்து நிறுத்தம் ஏற்பட்டுள்ளது, காவல் நிலையத்தையும் மக்கள் சூழ்ந்து இருப்பதால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.