மாநாடு 3 October 2022
தஞ்சாவூர் மாநகராட்சி சிறந்த மாநகராட்சி விருது வாங்கி இருந்தாலும் அதற்கான தகுதியை இன்னும் பெறாமல் இருக்கிறது, அதிலும் உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு தஞ்சாவூரில் வேலைகள் மிகவும் மெதுவாகவே நடைபெறுகிறது, பல இடங்களில் வேலைகளும் முறையாக சரிவர நடைபெறவில்லை .
தஞ்சாவூரில் ஆணையராக சரவணகுமார் பொறுப்பேற்றவுடன் அரை நூற்றாண்டுகளாக தனியார் அரசியல் வாதிகளின் பின்புலத்தோடு ஆக்கிரமிப்பில் வைத்திருந்த இடங்களையெல்லாம் மீட்டெடுத்து, அரசுக்கு சொந்தம் ஆக்கினார். வேலைகள் மிகவும் துரிதமாகவும், நேர்த்தியாகவும் நடைபெற்றது, பொதுமக்கள் பலரும் போற்றும் படியான ஆணையராக திகழ்ந்தார்.
அப்போது உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது திமுக பெருவாரியான வார்டுகளில் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றது, அதன் பிறகு தஞ்சாவூரில் நடைபெற்று வந்த வேலைகள் அப்படியே தொய்வடைய தொடங்கியது அதன் காரணமாக பல இடங்களிலும் மக்கள் அவதியுற்று வருகிறார்கள், முக்கிய சாலைகள் கூட பராமரிப்பின்றி கிடக்கிறது, சாலையில் சாக்கடை கழிவு நீர்கள் ஓடிக்கொண்டிருக்கிறது,
இதனால் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது, இதனை பொறுப்புணர்ந்து செய்ய வேண்டிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட , மக்கள் பிரதிநிதிகள் இதனை முழுவதும் கவனிப்பதை விட்டுவிட்டு, விருந்தினர்கள் போல பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதும், அதனை படம் பிடித்து போடுவதிலுமே அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார்கள் , இன்னும் ஓரிரு நாளில் மழைக்காலம் தொடங்க இருக்கிறது, நாமும் மாநாடு இதழின் வாயிலாக தொடர்ந்து பல மாதங்களாக இதனை சுட்டிக்காட்டி செய்திகள் வெளியிட்டு வருகிறோம்.
தற்போது தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் இருக்கின்ற கீழ ராஜவீதி சாலை மிகவும் முக்கியமான சாலை ஆகும், அரண்மனை , அரசு பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், வங்கிகள் உட்பட முக்கிய இடங்கள் இங்கு இருக்கிறது. இந்த சாலையின் வழியாக தான் பல ஆயிரக்கணக்கான மாணவர்களும், மகளிர்களும், முதியோர்களும் சென்று வருகிறார்கள். இங்கு ஆலயங்களும், மருத்துவமனைகளும் கூட இருக்கின்றது.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சாலையில், கடந்த 10 நாட்களுக்கு மேலாக சாக்கடை கழிவு நீர் சாலையிலேயே ஓடிக் கொண்டு இருக்கிறது, இதனால் நடந்து செல்கின்ற பள்ளி மாணவ , மாணவியர்களும், முதியோர்களும் மிகவும் துன்பப்பட்டு வருகிறார்கள். இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கே சாலையில் ஓடிவரும் சாக்கடை கழிவு நீரின் துர்நாற்றம் குமட்டல் வருகிறது. இந்நிலையில் அங்கு இருக்கும் கடைகாரர்களின் நிலை , பணிபுரிபவர்களின் நிலை, அந்த பகுதியை கடக்கும் பாதசாரிகள், பொதுமக்களின் நிலையை சாமானிய மனிதராக இருந்து நினைத்து பார்த்தாலே இந்நிலையை ஓரிரு நாட்களில் மாற்று ஏற்பாடு செய்து சரி செய்து மக்களை துன்பத்திலிருந்து காத்திருக்கலாம்.ஆனால் செய்யவில்லை.
கட்டுமான பணி இன்னும் எத்தனை நாட்கள், எத்தனை மாதங்கள் நடைபெறும் என்று தெரியாத நிலையில் இப்படியே சாக்கடை நீரை சாலையில் ஓட விட்டால், நோய் தொற்று ஏற்படும்.ஏற்கனவே பல ஊர்களிலும் ,மர்ம காய்ச்சல் இருப்பதாக செய்திகளின் வாயிலாக தெரிகிறது.
இந்நிலையில் தஞ்சாவூர் மாநகராட்சி அலட்சியம் செய்யாமல் உடனடியாக செயல்பட்டு மாற்று ஏற்பாடு செய்து சாக்கடை நீர் சாலையில் ஓடுவதை தடுக்க வேண்டும்.